அட்டிகை
தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் க்ஷேமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார் சதாசிவ குருக்கள். இந்த வருடத் திருவிழா அமோகமாக நடந்து முடிந்தது. இனி இந்த நகையெல்லாம் அடுத்த வருடம் எடுத்தால் போதும். காவலாளி மாணிக்கம், குருக்கள் எடுத்து வைக்கும் நகைகளைப் பேப்பரில் குறித்துக் கொண்டார். நகைகளை பத்திரப் படுத்திய பின், நடையைச் சார்த்திவிட்டு வீட்டுக்குக் கிளம்ப பன்னிரண்டு மணியாகி விடும். வீட்டில் ஷோபனா தனியாக இருப்பாள்.

ஷோபனாவை நினைத்ததும் வயிற்றில் ஒரு கலக்கல். நாளை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். பையனுக்கு அரசாங்க உத்தியோகமாம். குருக்களின் அண்ணா மணியின் சிபாரிசு. பையனின் அம்மாவும், அக்காவும் ஏற்கெனவே வந்து பார்த்தாயிற்று. பையனும், அவன் அண்ணாவும் நாளை வருகிறார்கள். பக்கத்து ஊருக்கு ஏதோ வேலையாய் வருபவன் ஷோபனாவையும் பார்த்துவிட்டு போகப்போகிறான்.

எல்லா நகைகளையும் வைத்தாயிற்று. கடைசியாக ஒரு தங்க அட்டிகையை மட்டும் அம்பாளின் கழுத்தில் பார்த்தபோது குருக்கள் கண்களுக்கு ஒரு நிமிடம் ஷோபனா தோன்றினாள். அவளது மூளியான கழுத்தில் அந்த அட்டிகை மட்டும் ஒரே ஒரு நாள் ஏறினால் போதும். பையனின் அம்மாவின் ‘என் பையன் அரவிந்தனுக்கு சொத்து சுகம் எதுவும் வேண்டாம். பெண் மட்டும் மங்களகரமாக கழுத்தில் நகையோட இருந்தாப் போதும். அவன் ஓகே சொல்லிடுவான்’ என்று சொன்னது இப்போது ஒலித்தது.

ஷோபனாவிடம் பொட்டு நகை கிடையாது. குருக்களின் மனைவி சீதாவின் நகைகளைப் போட்டுப் பெரியவளை கரை சேர்த்தாயிற்று. சின்னவள் ஷோபனாவுக்குப் பூர்வீக சொத்தான நிலத்தை விற்றால்தான் உண்டு. இன்னும் இரண்டு மாதத்தில் முடித்து விடுவதாக அண்ணா மணி சொல்லி யிருக்கிறான்.

‘ஐயா, அந்த அட்டிகையையும் பெட்டில வைச்சிடுங்க. எல்லா நகையும் டேலியாடுச்சு. இப்ப வந்துர்றேன்’ மாணிக்கம் கழிவறையை நோக்கி நகர்ந்தான்.

‘கல்யாண சுந்தரி! அம்மா... எனக்கு வேற வழிதெரியலம்மா. முப்பத்தஞ்சு வருஷமா உன்னை அலங்கரிச்சுப் பார்த்தவன். ஒரே ஒருநாள் என் பொண்ணுக்கு... இல்லை யில்லை உன் குழந்தைக்குப் போட்டுப் பார்க்கிறேன்ம்மா. ஆயிரமாயிரம் பேருக்கு கல்யாண ராசி அருளும் நீ, உன்னோட நகையால் எம் பொண்ணுக்கும் அருளம்மா’’ குருக்கள் சரேலென்று அட்டிகையை துண்டால் மூடி இடுப்பில் கட்டினார்.

நகைப் பெட்டியைப் பூட்டி மாணிக்கம் கையில் கொடுத்து சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டார். நடையைச் சார்த்தி நடுங்கும் உடம்போடு வீட்டை நோக்கி நடர்ந்தார்.

நல்லவேளை மானேஜர் சுந்தரம் ஏதோ கோயில் காரியமாய் டவுனுக்குப் போயிருக் கிறார். அவர் திரும்பி வருவதற்குள் நகையைத் திருப்பி வைத்துவிடலாம். குருக்கள் மனதில் ஏதோ குறுகுறுத்ததே தவிர, பெரிய தப்பாகத் தோன்றவில்லை. அரவிந்தனின் விஜயம் முன்னமே தெரிந்திருந்தால் எங்கிருந்தாவது கொஞ்சம் நகை நட்டு இரவல் பெற்றிருக் கலாம். இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை அட்டிகையை போட்டுக் கொள்ள ஷோபனாவைச் சம்மதிக்க வைப்பதுதான்.

அரவிந்தனுக்கு ஷோபனாவை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. அவளது பதவிசும், புன்னகையும் அப்போதே அள்ளிக்கொண்டு போய்விடலாம் போல் தோன்றியது. அவன் எதிர்பார்த்தது போலவே மஞ்சள் குளித்து, கருநீலப்பட்டில், கழுத்தில் பளபளக்கும் அட்டிகையும் அம்பாளை நினைவுப்படுத்த அரவிந்தன் எழுந்து நின்றான்.

‘உங்களுக்கெல்லாம் ஆட்சேபனை யில்லைனா ஷோபனாவை கோயில் வரை கூட்டிப்போகலாமா?’ என்றான்.

குருக்கள் அதிர்ந்தார்.

‘அட தாராளமா... கூப்பிடு தூரத்தில தான் கோயில்’ அண்ணா மணியின் வார்த்தை களைத் தவிர்க்க முடியவில்லை. ஜோடியாக இருவரும் வாசல் இறங்கிப் போகவும் காவலாளி மாணிக்கம் வேகமாக வீட்டை நோக்கி வரவும் சரியாக இருந்தது.

‘ஐயா! சுந்தரம் சார் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்... டவுன்லேர்ந்து சோதனைக்கு வந்துருக்காங்க.’

சுந்தரம் சார்... சோதனை ... இடிந்து போனார் குருக்கள்.

டவுனிலிருந்து கவர்ன்மெண்ட் ஆடிட். சில சமயங்களில் இந்த மாதிரி வருவதுண்டு. கோயிலுக்கு உண்டான கணக்கு வழக்குகள், நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்துப் பெரிய இடத்துக்கு ரிப்போர்ட் அனுப்புவது வழக்கம்.

துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, மூச்சிறைக்க குருக்கள் ஓடினார். போச்சு.. முப்பத்தைந்து வருடமாய் கட்டிக்காத்த மானம், மரியாதை எல்லாம் போச்சு. அம்பாளே... இது என்ன சோதனை! கண்கள் ஷோபனாவைத் தேடின. அரக்கப் பரக்க ஓடிவந்து கும்பிட்டார்.

‘இவர்தாங்க கோயில் குருக்கள். ஏதாவது காணமின்னா இவர்தான் பொறுப்பு....ஹா ஹா..ஹா...’ சுந்தரத்தின் நேரங்காலம் தெரியாத அசட்டு ஜோக்.

‘பண விஷயமெல்லாம் சரியாயிருக்கு, நகையெல்லாம் எடுங்க...’ தலைசுற்றியது குருக்களுக்கு. துண்டை விரித்து சன்னதி யருகே உட்கார்ந்தார்.

‘எல்லாம் சரியாயிருக்கு. ஒரு அட்டிகை குறையறாப் போல இருக்கே..’’

குருக்கள் எழுந்தார். உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான். மனதால் தப்பு செய்யாவிட்டாலும் உடலால் செய்தாயிற்று.

‘ஐயா!..’ குருக்கள் குரல் எழும்ப மறுத்தது.

‘இதோ இங்க இருக்குங்க அட்டிகை. நான்தான் அழகா இருக்கிறதே என்று பார்த்தேன்’ அரவிந்தன்.

‘என்ன அரவிந்தன். வேலை சமயத்தில் ஊரைச் சுத்திப் பார்க்கப் போயிட்டீங்க? நேரமாகுது உங்க கையெழுத்தில்லாம கிளம்ப முடியாது.’

அரவிந்தன் மெதுவாக குருக்களின் கையைப் பற்றி சந்நிதி நோக்கி நடந்தான்.

‘மாமா! ஷோபானாவின் அட்டிகையில் இருந்த அடையாளம் அந்த நகை கோவிலோடதுன்னு உடனேயே தெரிவித்து விட்டது. எத்தனையோ கோவில் நகைகளைப் பார்த்துப் பழக்கம். நகை இருந்தோ இல்லாமலோ ஷோபனாதான் எனக்கு மனைவி’ என்றான் அரவிந்தன் கம்பீரமாக.

அம்பாளைக்கூடப் பார்க்கக் கூசியவர் தலைகுனிந்தபடி வீட்டை நோக்கி நடந்தார்.

‘என்ன குருக்களே, கல்யாணம் கில்யாணம் எல்லாம் பிரமாதமாய் நடத்திட்டிங்க. எல்லா பொறுப்பும் முடிந்து கோவிலே கதியாய்க் கிடப்பீங்கன்னு பார்த்தா இப்படிச் சாவியைக் கொடுத்திட்டு கோயிலுக்கு இனிமே வரமாட்டேன்னு சொல்றீங்களே!’ சுந்தரம் அங்கலாய்த்தார்.

சதாசிவ குருக்கள் ஏதும் பதில் சொல்லாமல் ஓரக்கண்ணால் சன்னதியைப் பார்த்தார். கல்யாணசுந்தரி ஜகஜ்ஜோதியாய் ஜொலித்தாள். வீட்டிலிருந்து திரட்டிக் கொண்டு வந்திருந்த அத்தனை சில்லறை, ரூபாய்களை உண்டியலில் போட்டார். மேல்துண்டோடு ஆற்றங்கரை நோக்கி நடந்தார். அலறிக்கொண்டு ஓடும் நொய்யலில் மூழ்கியவர் தலையைத் தூக்கப் பிரயத்தனப் படவில்லை.

பக்கத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் உரக்கப் படித்துக் கொண்டிருந்தார்கள்:

‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்’

மோஹன்

© TamilOnline.com