சரடோகா நகர்மன்ற வேட்பாளர் சூஸி வேதாந்தம் நாக்பால்
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் நிறைந்த சரடோகாவின் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு, இவ்வாண்டு நகரத் திட்டப் பணிக்குழுவில் உறுப்பினராக இருப்பவரான சூஸி வேதாந்தம் நாக்பால் போட்டியிடுகிறார்.

சூஸியின் தந்தையார் திரு. வேதாந்தம் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். 1978ஆம் ஆண்டிலேயே தமிழ்ச் சமுதாயத்துக்கான அமைப்பொன்றை ஏற்படுத்த முயன்றவர்களில் அவரும் ஒருவர். அவரிடமிருந்தே சமுதாயப் பிரக்ஞை, சேவை ஆகிய பண்புகளை சூஸி பெற்றார் என்று கூறலாம். தற்போது தனது சமுதாயம் என்பதைத் தாண்டிப் பொதுநீரோட்டச் சேவைப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் சூஸி மகிழ்ச்சி அடைகிறார். சூஸியும் சரளமாகத் தமிழ் பேசுகிறவர்தான்.

1987ல் சரடோகாவில் தாத்தா பாட்டி, குழந்தைகள், பெற்றோர் என்று கூட்டுக் குடும்பமாகக் குடியேறிய சூஸி, கல்யாணமாகி, கணவர், இரு குழந்தைகள் என்று பொறுப்பான வாழ்க்கை நடத்தி வருகிறார். பொறியியலில் இளங்கலைப் பட்டமும், சுற்றுச் சூழலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அவர் சார்ந்த சுற்றுச்சூழல் துறையில் தொழில்முறை நிபுணத்துவம் பெற்றவர். இருபத்து நான்கு ஆண்டுகள் சுற்றுச்சூழல் ஆலோசகராகப் பல்வேறு திட்டப் பணிகளை நிர்வகித்து வரும் சூஸி, பல்துறைத் திறனிலும், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தலைமை வகிப்பதிலும் சிறந்தவர்.

2003ல் திட்டப் பணிக்குழுவில் உறுப்பினர் ஆனதிலிருந்தே பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்து செயலாற்றி வருவது சரடோகா நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறையில் பல கடினமான திட்டங்களையும் கூட்டு முயற்சியில் நிறைவேற்றியுள்ளார். திட்டக் குழு உறுப்பினர் பலரும் ஒருமித்த மனதுடன் இவரை ஆதரிப்பதே இவரின் திறமைக்கும் நன்மதிப்புக்கும் சான்றாகும். பொறியியல், மேலாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம் போன்றவற்றில் சூஸியின் பின்னணியும், அனுபவமும், நகர நிர்வாகத்தில் புதிய முயற்சிகளையும், பகுப்பாய்வுகளையும், திறம்படச் செயல்படுத்த ஏதுவாயிருக்கும்.

சரடோகாவுக்கான சூஸியின் வருங்கால லட்சியங்கள்: நகரின் தனித்தன்மையை பேணிக் காப்பது; வாழ்க்கைத் தரம், சுற்றுப்புறப் பாதுகாப்பு போன்றவற்றை உயர்த்துவது; நிதி நிர்வாகம், பொதுச்சேவை முதலியவற்றை மேம்படுத்துவது; சரடோகாவை விரிகுடாவின் தன்னிறைவு பெற்ற முதன்மை நகரமாக்குவது; உள்ளூரில் உயர்தர வர்த்தக மையங்களை உருவாக்குவது; இளைய தலைமுறையினருக்கான விளையாட்டுக்களையும், விளையாட்டு மையங்களையும் ஊக்குவிப்பது; பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பூங்காக்கள், பொது மைதானங்கள், நடைத்தடங்கள் ஆகியவற்றைப் பேணுவது; எல்லாத் தரப்பினரின் கருத்துக்களை கருத்தில் கொண்டு, மக்கள் பங்கேற்புடன் அரசாங்கத்தை நடத்துவது; மக்களின் பசுமை சார்ந்த ('go green') முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பது; மூத்த குடிகளுக்கான சேவைகளைச் செழுமைப்படுத்துவது; ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடுவது; அரசு எந்திரத்தின் செயல்திறனை அதிகரித்து பொதுமக்களுடனான பரிமாற்றத்தை மேம்படுத்துவது.

சூஸி பணி என்பது கடமை மட்டுமல்ல, ஒரு தவம் என்று கருதுபவர். சூஸியின் சிறப்பான செயல்பாடுகளால் கவரப்பட்ட நகர திட்டக் குழு உறுப்பினர் லிண்டா ராட்ஜர்ஸ் "சூஸியுடன் நகர திட்டப் பணிக் குழுவில் நான் கடந்த நான்கு வருடங்களாகப் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவகும். அக்குழுவில் அவர் உறுப்பினர் பதவி வகிப்பது மிகவும் பொருத்தமே. இத்துணை ஆளுமைத் திறன், ஒழுக்கம், அறிவாற்றல் மிக்கவர் நம் நகரத்தின் நிர்வாகப் பொறுப்பேற்று நடத்த முன்வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே" என்று தெளிவாகக் கூறுகிறார்.

சூஸி வேதாந்தம் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் நகர்மன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற தென்றல் வாழ்த்துகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.susie4council.org

உமா வெங்கட்ராமன்

© TamilOnline.com