ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

ஆயிரத்தில் ஒருவர் - இந்திரா காந்தி

திருமதி. இந்திரா காந்தி சென்ற ஆயிரமாவது ஆண்டின் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க விஷயமாகும். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் போது அவரை முதன்முதலாகச் சந்தித்த நினைவு வருகிறது. அந்த நாள்களில அவர் அரசியலில் இல்லை. அவர் ஒரு சமூக சேவகியாக, இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத்தின் பணிகளில் பங்கு கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்த எங்கள் வீட்டுக்கு மிக அருகில் முதல் பாலபவன் நிறுவப்பட்டது. ஒவ்வொரு மாலை நேரத்திலும் குழந்தைகளான நாங்கள் அங்கு செல்வோம். எப்போதாவது சில சமயங்களில் இந்திரா காந்தி அங்கு வரும்போது, அந்தச் சமயம் நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதில் அவரும் கலந்து கொள்வார். ஒருநாள் நாங்கள் களிமண்ணில் பொம்மைகள் செய்து கொண்டிருந்தபோது அவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார். களிமண்ணில் அவர் ஒரு சிறிய பொம்மை செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்த போது இது 'பங்கூரா குதிரை' என்று சொன்னார். வங்காளத்தின் மீது அவருக்கிருந்த அன்பை உண்மையாகவே இது வெளிப்படுத்தியது. சில சமயம் அவர் தன்னுடன் தன் குழந்தைகளையும் அழைத்து வருவார். அவர்களையும் எங்களுடன் விளையாடச் சொல்வார். தீபாவளி தினத்தின் போது ஒரு பெரிய கூடை நிறைய இனிப்புப் பொட்டலங்கள் கொண்டு வந்து எங்கள் அனைவருக்கும் கொடுப்பார். அப்போது அவர் கவர்ச்சியான பெண்ணாக இருந்தார். அந்த முப்பது வயதில் வழக்கமாக நெற்றியில் பெரிதாக ஒரு பொட்டு வைத்துக் கொண்டிருப்பார். தூய்மையான வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டு கூந்தலில் மலர் சூடி இருப்பார்.

முதன்முதலாக சவூதி அரேபிய மன்னர் இந்தியாவுக்கு வந்தபோது அவர் தன்னுடன் ஏராளமாகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டன. மாலையில் நாங்கள் பாலபவன் சென்றபோது அங்கு இந்திரா காந்தி எங்களுக்கு மீண்டும் பேரீச்சம் பழம் வழங்கினார். அவரது தொடர்ந்த ஆதரவினால் டெல்லி பாலபவன் ஈடு இணையற்ற ஆக்கபூர்வமான கல்வி மையமாக வளர்ச்சி பெற்றது. பின்னாளில் நேரு ஞாபகார்த்த நிதியிலிருந்து இந்தியா முழுவதும் பாலபவன் நிறுவ இந்திராகாந்தி பேருதவி செய்தார்.

##Caption## அடுத்து என் இதயத்தில் அச்சாகிப் பதிந்த படிமம் தன் கணவரை இழந்த அன்று அவர் இருந்த நிலைதான். கவனிக்க வேண்டிய வேலைகள் நிறையக் குவிந்து விட்டதனால் தன் கணவரிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. பெரோஸ் காந்தியின் மரணத்தினால் அவர் இதயம் பட்ட அடி வெளியில் தெரிந்ததை விட மிகக் கடுமையானது என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அவரது கணவரின் சடலம் எரியூட்டியபோது அந்தத் தீயில் தன் நீண்ட அழகிய கூந்தலை அவர் சமர்ப்பித்தது என்னால் மறக்க முடியாத நிகழ்வு. இந்தியப் பெண் தன் கணவனை எப்படி நினைவில் வைக்கிறாள் என்பதற்கு இந்த உன்னதமான அர்ப்பணிப்பு ஒரு சிறந்த குறியீடு ஆகும். தன்னுடன் பிறந்த தன் உடம்பின் பகுதியான தன் கூந்தல் தனது கணவருடன் சேர்ந்து போக வேண்டுமென்று அவர் விரும்பினார். அவரது இந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரது நெஞ்சமும் நெகிழ்ந்துவிட்டது.

திருமதி. காந்தி குறிப்பிடத்தக்க ஒரு பெண். அவர் நேருவின் அருமை மகள் என்பதால் எனக்கு அவர் மீது மேலும் அன்பு கூடுகிறது. தன் சிறிய உருவம் நீண்ட கரிய கூந்தல், தேவாம்ஸ அழகு இவற்றுடன் ஒரு தேவதையாக அவர் எங்கள் கற்பனையில் தோன்றினார். அவர் பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அன்று டெல்லியில் நிலவிய குதூகலத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்து நாங்கள் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அந்த இனிய செய்தி வந்தது. ஒரு பெண் இந்தியாவின் - உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் - பிரதம மந்திரியாகி விட்டார். இது வேறெங்கும் நடப்பதற்கு முன்பே இந்தியாவில் நிகழ்ந்து விட்டது. மகிழ்ச்சிப் பெருக்கில் நாங்கள் துள்ளிக் குதித்தோம். சாலையில சென்று கொண்டிருந்த ஒவ்வொரு பெண்ணிடமும் கைகுலுக்கி வாழ்த்துக் கூறினோம். வயதான பெண்கள் எங்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தை எண்ணி இளம் பெண்கள் எங்களோடு சிரித்து மகிழ்ந்தார்கள். எங்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. இந்திரா காந்தி பிரதமர் அல்ல; நாங்கள் அனைவருமே பிரதம மந்திரிகள்தாம் என்று எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டோம். இந்தியப் பெண்களின் வரலாற்றில் மறக்க முடியாத அந்த வினாடியைக் கட்டுப்படுத்த முடியாத உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டு வீட்டை நோக்கி நடந்து சென்றோம்.

இந்திரா காந்தி பிரதமராகி என்ன சாதித்தார் என்பது சரித்திரம். நான் அதில் நுழைய விரும்பவில்லை. ஆனால் அவரால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட ஒரு சிறிய, ஆனால் முக்கியமான ஒரு சட்டத்தைப் பற்றி நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். 1972ல் நான் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த போது, இந்திய ஆட்சிப் பணி (I.A.S.), இந்திய வெளியுறவுச் சேவை (I.F.S) இவற்றின் நடைமுறை விதிகளில் பாரபட்சமான ஒரு பிரிவு இருப்பதைக் கண்டேன். இது இப்பணிகளில் சேர விரும்பும் பெண்களின் மனத்தில் பெரிதும் தளர்ச்சியை உண்டாக்குவதாக இருந்தது. ஒரு வகையில் வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்த பெண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள முனைந்தால், இந்தத் துறைக்குத் தகுதி இல்லை என்றாகி வேலையிலிருந்து வெளியேறிவிட வேண்டி இருந்தது. ஆனால் மறுமுனையில், ஆண்களுக்கு இந்தத் தடை கிடையாது. அதேபோல் பெண்கள் பணி இடைப்பயிற்சிக் காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்தப் பயிற்சி காலம் முடிந்த பிறகும் கூட அரசிடம் முன் அனுமதி பெறாமல் பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. அதே சமயம் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி தேவை இல்லை. இந்தப் பிரிவுகள் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துவதாக இருந்தது. இந்தத்தடைகளினால் அசாதாரணத் திறமையுள்ள நுண்ணறிவுள்ள பெண்கள் வெளியுறவுத் துறையின் பணியிலிருந்து ராஜினாமா செய்யும்படி நேரிட்டது. மற்றும் பலர் கன்னியாகவே காலங்கழிக்க வேண்டியதாயிற்று. பெண்களுக்குப் பெரிதும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த இந்த விதி நெடுங்காலமாக நீக்கப்படாமலே இருந்தது.

இந்த அநீதியை பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல விரும்பினேன். ஆனால் ஏற்கனவே இந்த விஷயம் அவர் துறையின் பொறுப்பில் இருந்தது எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. திருமதி. காந்தி நாடாளுமன்றத்தில் அகில இந்தியப் பணிகள் சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்தபோது வெறுப்பூட்டும் இந்த விதிகளை நீக்கியது மட்டுமின்றி, பெண்கள் குடும்ப வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்குமான விதிகளையும் சேர்த்தார்.

தேசிய அகாடமிக்கு அவர் வருகை தந்த போது, 'பெண்கள், ஆண்களைவிட இரண்டு பங்கு பணியாற்றி தங்கள் முத்திரையைப் பதிக்க வேண்டும்' என்று சொன்னார். மேலும் 'எந்தப் பணியில் இருந்தாலும் முதலில் பெண்களுக்கு உதவுங்கள். அடக்குமுறைக்கு எதிராக நில்லுங்கள். உங்கள் உரிமைக்காகவும், மற்றவர்களுக்காகவும் போராடுங்கள். பெண் என்பதற்காக ஒருபோதும் தனிச் சலுகை எடுத்துக் கொள்ளாதீர்கள்' என்றும் சொன்னார். ஒவ்வொருநாளும் நான் என்னுடைய பணி இருக்கையில் அமரும் போது இதை நினைவில் கொள்கிறேன்.

##Caption## இந்தியக் காவல் பணியில் பெண் அதிகாரிகளைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்பதைக் கேட்டுக் கொள்வதற்காக திருமதி. காந்தியிடம் ஒரு தூதுக்குழுவை அழைத்துச் சென்றேன். தனது அமைச்சரவைச் செயலர், மற்றும் ஆலோசகர்களின் யோசனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவரது சொந்த முயற்சியினால் 1972ல் இந்தியக் காவல் பணியின் வாசல் பெண்களுக்கும் திறந்து விடப்பட்டது. இதன் பிறகுதான் கிரண் பேடி நாட்டின் இந்தியக் காவல்பணியின் முதல் அதிகாரி ஆனார். கிரண் பேடி நாட்டுக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்ததன் மூலம் திருமதி. காந்தி எடுத்த நிலை சரியானதே என்பது நிரூபணமாயிற்று. 1977ல் தேர்தல் பிரசாரத்தின் நிமித்தம் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது மீண்டும் அவரைச் சந்தித்தேன். அக்காலகட்டத்தில் மாநில ஆளுனராக இருந்த திரு. மோகன்லால் சுகாதியாவின் உதவிச் செயலாளராக நான் இருந்தேன். தேர்தல் முடிவு அவருக்குப் பாதகமாக இருக்கும் என்பதாக அவர் எதிர்பார்த்தது போல் எனக்குத் தோன்றியது. அவர் சிறிது நேரம் சென்னை ராஜ்பவனில் தங்கியிருந்த போது மிகவும் இளைத்துச் சோர்ந்தவராய்க் காணப்பட்டார். அந்தச் சமயங்களில் அவர் எதுவும் சாப்பிடவில்லை. அவருக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ தொல்லைகள் இருந்தும் கூட ராஜ்பவனில் உள்ள ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொருவரிடமும் அவரே நேரில் நலம் விசாரித்தார். அடையாறிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் தங்களுக்குக் குழந்தைகள் பூங்காவில் சிறிது நிலம் கேட்டிருந்தனர். திருமதி. காந்தி அவர்களுக்கு உதவி செய்ய மிக்க ஆர்வத்துடன் இருந்தார். அவர்களுடைய நிலைமையைப் பற்றி என்னிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.

நெருக்கடி நிலைப் பிரகடனம், மற்றும் சில காரணிகளாலும் எதிர்பார்த்தபடியே திருமதி. காந்தி தேர்தலில் தோல்வி அடைந்தார். பின் நான் டெல்லி சென்ற போது தோல்விக்குப் பின் இந்திரா காந்தியின் நிலைபற்றி என் தாய் சொல்லக் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். எங்கள் குடியிருப்பைச் சுற்றிலும் உள்ள பெண்கள் அனைவரும் என் தாய் உட்பட, கட்சி மாறுபாடின்றி அவரது தோல்வியை எண்ணி வருத்தத்தில் மூழ்கிவிட்டார்களாம். அவரைச் சந்தித்து ஆறுதல் கூற முடிவு செய்து, வெள்ளைப்புடவை, கருப்புத் துணி பட்டையுடன் அவரது இல்லம் சென்றனராம். அப்போது இந்திராகாந்தி பிரதமராக இல்லாததால் வந்தவர்களை வரவேற்றுப் பேச நேரம் இருந்தது. திருமதி. காந்தியைப் பார்த்த மாத்திரத்திலேயே வந்தவர்கள் மனநிலை குலைந்தவர்களாய் அழுது புலம்ப ஆரம்பித்து விட்டனர். சிலர் மயக்கம் அடைந்து தலையில் விழுந்தனர். வேறு சிலர் மார்பில் அடித்துக் கொண்டனர். 'எல்லாம் தொலைந்து போய்விட்டதே இந்திராஜி' என்று ஒருவர் கதறினார். 'இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள்' என்று இந்திராகாந்தி அவர்களிடம் அமைதியாகச் சொன்னார். மேலும் 'அதிகாரம்தான் முடிந்து விட்டது; இந்திராகாந்தி முடிந்து விடவில்லை. பிரதமர் பதவிச்சுமை இறங்கி நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். நான் எப்போதும் செய்ய விரும்பியதைப் போல ஜனங்களுடன் நெருங்கிப் பழகிப் பணியாற்ற முடியும்' என்று நம்பிக்கையுடன் சொன்னார். சந்திப்பின் முடிவில் சில பெண்கள் அழுதபடி, தங்கள் முந்தானையால் மூக்கைத் துடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, லேசாகப் புன்னகைத்தபடி, 'தைரியத்தை இழக்காதீர்கள். நான் மீண்டும் வருவேன்' என்று சொன்னார். இதன் பிறகுதான் அவர்கள் எழுந்து சென்றனர். அவர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அவர் மீதுள்ள நம்பிக்கை நீடித்தது. வருத்தம் அடைந்த பெண்களுக்கு ஆறுதலாகத்தான் இந்த வார்த்தைகளை அவர் சொன்னார் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால் எதிர்பார்த்ததைவிட வெகுவிரைவிலேயே அது நிறைவேறி, அவர் பிரதமர் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

அவரைச் சந்திக்க மீண்டும் வாய்த்த மிக அரிய சந்தர்ப்பம், 1980ல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத்தமிழ் மகாநாட்டின் போது தான் கிடைத்தது.அப்போது பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த முனைவர் வெங்கடசுப்ரமணியமும் நானும் பிரதமர் இந்திராகாந்தியை வரவேற்க மதுரை விமான நிலையம் செல்ல நேரிட்டது. அவருக்கு மலர்க்கிரீடம் சூட்ட வேண்டுமென்பது வெங்கடசுப்ரமண்யத்தின் விருப்பம். அந்த மலர் மகுடத்தைப் பார்த்து மிகவும் வியப்படைந்து அதன் முக்கியத்துவத்தைப் பற்றி வினவினார் காந்தி. 'புராணகாலத்தில் மதுரையை ஆண்ட பெண் தெய்வம் மீனாட்சி அணிந்த மகுடத்தின் அடையாளச் சின்னமாகும் இது' என்று வெங்கடசுப்ரமண்யம் விளக்கினார். அன்று கடைசிவரை இருந்து பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார் பிரதமர். மாலையில் கலை நிகழ்ச்சிக்கும் ஊர்வலத்திற்கும் பிறகு அவர் தங்கி இருந்த சுற்றுலா மாளிகைக்கு அருகில் இருந்த பாண்டியன் ஓட்டலில் பிரத்தியேகமாக அயல்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவர் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பே இது நடக்க வேண்டியிருந்தது.

அன்று மதுரைக்கு வந்திருந்த மக்களின் எண்ணிக்கை இதுவரை காணாதது. ஊர்வலம் வந்து சேர்ந்த பிறகு போக்குவரத்து நெருக்கடி கடுமையாகி விட்டது. இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டிய அயல்நாட்டுப் பிரதிநிதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்கு வந்து சேர இயலவில்லை. சிறிய, பெரிய அதிகாரிகள் அனைவரும் மனம் கலங்கிப் போனார்கள். 4.30க்குத் தொடங்க வேண்டிய கூட்டம் 6.30வரை தொடங்கவில்லை. பிரதமர், சுற்றுலா மாளிகையில் அமைதியாக 21/2 மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்தார். இப்படிக் காலதாமதம் ஏற்பட்டு விட்டதால் இந்தச் சந்திப்பை ரத்து செய்துவிட்டு நேராக பொதுக்கூட்ட மேடைக்கே போய்விடலாமென்று தெரிவித்தபோது, 'அயல் நாட்டுப் பிரதிநிதிகள் ஏமாற்றமடைவார்கள். அவர்கள் தங்களுடன் இந்தியாவின் உயர்ந்த, நல்லெண்ணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் வரும்வரை நான் காத்திருப்பேன்' என்று சொல்லி விட்டார். சாதாரண மனித இயல்பு உடையவராக இருந்திருந்தால் இப்படி ஏற்பாடுகள் சீர்குலைந்து போனதற்குப் பொறுமை இழந்து கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால் திருமதி. காந்தி அப்படி நடந்து கொள்ளவில்லை. அயல்நாட்டுப் பிரதிநிதிகளுடன் அவரது சந்திப்பு நாற்பது நிமிடங்கள் நீடித்தது. அவர்கள் சொல்வதை ஆர்வத்துடன் செவிமடுத்து அவர்களின் ஒவ்வொரு வினாவுக்கும் விடையளித்தார். அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் தமிழ் கிராமியப்பாடலை இசைத்துவிட்டு, தமிழ்நாட்டுத் தெருக்கூத்தில் வரும் நிகழ்ச்சியின் ஒரு சிறுபகுதியை நடித்தும் காட்டினார். இந்தப் பாடலைக் கேட்டும் நடிப்பைக் கண்டும் பிரதமர் பெரிதும் வியப்புற்றார்.

பொதுக்கூட்டத்தில் அவரது சொற்பொழிவு தமிழ் கலாசாரத்தைப்பற்றிய அவரது நுண்ணறிவை எடுத்துக் காட்டியது. நாங்கள் அவரது பேச்சில் செயலிழந்து போய் விட்டோம். அவர் ஆங்கிலத்தில் rice, mango என்ற இரண்டு வார்த்தைகளையும் குறிப்பிட்டு, அரிசி என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து rice பிறந்ததென்றும் மாங்காய் என்ற சொல்லிலிருந்து mango பிறந்ததென்றும் விளக்கினார். இந்த எளிய விஷயம் நமக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அவர் வள்ளுவருக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், பரத நாட்டியக் கலைக்கும் பெரும் புகழ்மாலை சூட்டினார். பத்து நாள்கள் நடந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களும், திறமைசாலிகளும் ஆற்றிய சொற்பொழிவுகளை விட திருமதி. காந்தியின் பேச்சு சிறப்பானது என்று மெய்யாகவே நாங்கள் உணர்ந்தோம்.

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com