கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது
ஒரு கிளை சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் நிறைய வைப்புத் தொகை வரவேண்டும். அதன் மூலமே கடன் வழங்க முடியும். கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது. டாடா, பிர்லா யாராக இருந்தாலும் சரி கடன்தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

புத்திசாலிகள் சேமிக்கிறார்கள். அதிபுத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள். சேமிப்பது ஒரு பகுதி. கடன் வாங்குவது ஒரு பகுதி. கடன் வாங்க வேண்டும். கடன் வாங்குவது குற்றமல்ல. லஞ்சம் வாங்குவதுதான் குற்றம். கடன் வாங்கித் தொழில் செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

ப. சிதம்பரம், மத்திய நிதியமைச்சர், விஜயா வங்கியின் புதிய கிளை துவக்க விழாவில்...


உயர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர் என்று யாரும் இல்லை. அறிவில் சிறந்தவர்களே நாட்டைத் தலைமையேற்று நடத்திச் செல்வர் என்று அம்பேத்கர் அறிவுறுத்தினார். கடின உழைப்பால் மட்டுமே நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. சாதி, மத வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே நாடு முழுவளர்ச்சி பெறமுடியும்.

சுர்ஜீத் சிங் பர்னாலா, மேதகு தமிழக ஆளுநர், தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கத்தின் பவளவிழா குழு கூட்டத்தில்...


மரங்களின் வயதை அதில் உள்ள வளையங்களை வைத்துக் கணக்கிடுவோம். அது போல் தமிழின் வயதைக் கருணாநிதி எழுதியதை வைத்துதான் கணக்கிட வேண்டும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு வர்ணனையைக் கூறியுள்ளார்.

நிலா வெளிச்சம் விழுகிறது. தென்னங் கீற்றுகள் வழியாக அந்த வெளிச்சம் விழுகிறது. அந்த வெளிச்சத்தில் வெள்ளையும் கருப்பும் கலந்து இருக்கிறது. அதைப் பார்க்கும்போது வயதானவர்களும் நடுத்தர வயதுப் பெண்களும் நரைமுடிக்குக் கருப்பு மை தடவியது போல் இருக்கிறது என்று எழுதுகிறார். வயதைக் காட்டுவதுதான் நரைமுடி. அதற்குக் கருணாநிதிக்கு வாய்ப்பே இல்லை. வேண்டாதவற்றைத் தலையிலும், கட்சியிலும் அவர் வைத்துக் கொள்வதில்லை.

கவிஞர் வைரமுத்து, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரிப் பொன்விழாவில்...


சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத்தன்மை அதிகமாகப் போய், புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். ஒரு மொழிபெயர்ப்பாளனால எப்படி அந்தப் பேச்சு மொழிய மொழிபெயர்க்க முடியும்?

அசோகமித்திரன், எழுத்தாளர், பத்திரிகைப் பேட்டியில்...

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்சினை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். முழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இங்குதான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையையும் இப்படிதான் அரசியலாக்கினார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே அனைத்துப் பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

டாக்டர் ராமதாஸ், நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி, பத்திரிகைப் பேட்டியில்...


சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளயை தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...

கேடிஸ்ரீ

© TamilOnline.com