சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 30, 2008 அன்று தீபா மகாதேவனின் நடனப்பள்ளி மாணவி சுருதி அரவிந்தனின் நடன அரங்கேற்றம் ஃப்ரீமாண்ட் ஜாக்ஸன் அரங்கில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, விநாயகர் மீதான விருத்தக் காட்சி. தொடர்ந்தது ‘அலாரிப்பு'. அலாரிப்பு என்றால் மலர்ந்து வரும் மொட்டு என்று பொருள். திருப்புகழ் வரிகளுக்கு அலாரிப்புச் செய்து, இனிய விருந்து படைத்தார் சுருதி. அடுத்து, பத்மஸ்ரீ தண்டாயுதபாணி பிள்ளையின் இயக்கத்தில் அழகான ஜதி கோர்வைகளும் ஸ்வர கோர்வைகளையும் கொண்ட நிருத்ய அமைப்பில் இருக்கும் ஜதிஸ்வரத்திற்குப் பாங்குடன் ஆடி மகிழ்வித்தார். பின்னர் ஆபோகி ராக முதல் பாதி வர்ணத்தில் ‘எனது அன்னையை எப்பொழுதும் மறக்க மாட்டேன்' என்றும், பிற்பாதியில் 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்றும் மனமுருகி ஆடினார். இவ்வர்ணத்தில் அமைந்த ஜதிகளை தன் குரு தீபா மகாதேவனின் சொல்லுக்கு ஏற்ப அற்புதமாக ஆடினார்.

அடுத்துத் தொடர்ந்த மகாகவி பாரதியாரின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்குத் தத்ரூபமாக ஆடி, கோகுல கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டையும் குறும்புகளையும் தன் முக பாவங்களிலேயே மிக அற்புதமாக உணர்த்தினார். அடுத்து ஈசன் பொற்பாதம் தூக்கி ஆடிய ஆட்டத்தை அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கிராமிய மெட்டில் அமைந்த ‘மாடு மேய்க்கும் கண்ணா' பாடலை யசோதையாகவும், கண்ணனாகவும் மாறிமாறி ஆடினார். நளினகாந்தி ராகத்தில் அமைந்த தில்லானா விறுவிறுப்பாக இருந்தது. ஆறுமுகம் கொண்ட திருமுருகனை வர்ணித்து அவர் ஆடிய ஆட்டம் அற்புதம். இறுதியாக திருமூலரின் திருமந்திரப் பாடலில் அமைந்த பாடல் வரிகளைப் பாடி ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சுருதி அரவிந்தன்.

தீபா மகாதேவன் (நட்டுவாங்கம்), ஈஷ்வர் கிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), ரமேஷ்பாபு (மிருதங்கம்), சுபா நரசிம்மன் (வயலின்), ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக அமைந்தனர். 11 வயதான சுருதி அரவிந்தன், கடந்த நான்கு ஆண்டுகளாக குரு தீபா மகாதேவனிடம் நடனம் பயின்று வருகிறார். குரு மெச்சிய சிஷ்யையாக நடனத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

கீதா பாஸ்கர்

© TamilOnline.com