கோபத்தின் கொடுமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை.

அம்பலவாணக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை என்னும் தமிழிசை நாடகக் கீர்த்தனை இயற்றிய அருணாசலக் கவிராயரின் சிற்றப்பா ஆவார்.

அறப்பளீசுரக் கோவில் சிவன் மேல் பாடிய நூறு பாட்டுக்களுள் ஒன்று இது. எளிய நடையில் இருப்பதால் விளக்கம் வேண்டியதில்லை.

கோபமே பாவங்க களுக்கெலாம் தாய்தந்தை;
கோபமே குடிகெடுக்கும்;
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது;
கோபமே துயர்கொடுக்கும்;
கோபமே பொல்லாது; கோபமே சீர்கேடு;
கோபமே உறவறுக்கும்;
கோபமே பழிசெய்யும்; கோபமே பகையாளி;
கோபமே கருணை போக்கும்;
கோபமே ஈனமாம்; கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும்;
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநரகக்
குழியி னில்தள்ளுமால்;
ஆபத் தெலாம்தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதேவனே!

[துயர் - துயரம், துன்பம்; ஈனம் - கீழ்மை, இழிவு; ஒருவனாக்கும் - நட்புறவு இன்றித் தனிமனிதனாக்கும்; மறலி - எமன்; மதவேள் - வலியதலைவன், முருகன்; சதுரகிரி - சேலம் கொல்லிமலை]

தேர்ந்தெடுத்து வழங்கியவர்: பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com