கீரைக் கூட்டுகள்
புளிவிட்ட கீரைக்கூட்டு

தேவையான பொருட்கள்
கீரை - 2 கட்டு
புளித் தண்ணீர் - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 (அ) 6
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
கீரையை நன்கு கழுவி, பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு வேகவிடவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கொத்துமல்லி விதை, கடலைப் பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும். கீரையுடன் பருப்பு, அரைத்த விழுது எல்லாம் போட்டு, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

வெல்லம் சிறிதளவு சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பில்லை சேர்த்துத் தாளிக்கவும். கொஞ்சம் நீர்த்து இருந்தால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கரைத்துவிடவும்.

இந்தக் கூட்டைத் துவரம் பருப்பு இல்லாமலும் செய்யலாம். வறுத்து அரைக்காமல் வெறும் சாம்பார் பொடி போட்டும் செய்யலாம். நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com