செவ்வாய்க் கிரகத்தில் சில மண்ணுலகப் பாடங்கள்
'உங்கள் சீட் பெல்ட்டுகளைக் கட்டிக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் கிளம்பப் போகிறோம்' என்ற அறிவிப்பு கேட்டது.

'நாம் செவ்வாய்க்குப் போகப்போகிறோமா?' என்று நம்பமுடியாமல் கேட்டாள் ராதா. 'இதில் எப்படி நான் வந்து சேர்ந்தேன்! தவறான டெர்மினலுக்கு வந்திருக்க வேண்டும்.'

'கவலைப்படாதே. எங்கள் சிவப்புக் கிரகம் உனக்குப் பிடிக்கும்' என்றான் சோலாக்ஸ். அவன் செவ்வாய்க் கிரக வாசி. தன் கோளுக்குத் திரும்பிப் போகிறவன். 'சரி, நீ என்ன வேலை செய்கிறாய்?' என்று ராதாவைக் கேட்டான்.

சாய்ந்து உட்கார்ந்துகொண்ட ராதா 'நான் பொருளாதாரப் பேராசிரியர்' என்றாள்.

'எனது பூமி விஜயம் ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை: ஏன் அமெரிக்காவை எல்லோரும் பெரிய வல்லரசாக நினைக்கிறார்கள்? அதன் நல்ல அரசியல் அமைப்பினாலா? இல்லை மற்ற நாடுகளைவிடச் சிறப்பான ராணுவ பலத்தாலா?' என்று கேட்டான் சோலாக்ஸ்.

அமெரிக்கப் பிரஜையான ராதாவுக்கு இதைக் கேட்கச் சந்தோஷமாக இருந்தது. தான் திசைமாறி எங்கேயோ செல்வதைக் கூட மறந்துவிட்டாள். 'உண்மையாகப் பார்த்தால், ஒரு நாட்டின் வலிமை அதன் முக்கியப் பொருளாதாரக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியால் (Gross Domestic Product) மதிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டில் உண்டாக்கப்பட்ட எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை இது அளவிடுகிறது. ஒரு நாட்டின் வெற்றி அதன் பொருளாதார ரீதியான உற்பத்தியில் உள்ளது. அதன் மக்கள் பொருள் வாங்கச் செலவு செய்வார்களேயானால் அதன் வளம் கூடுகிறது.'

'அப்படியா. இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா?' என்றான் சோலாக்ஸ்.

'மக்கள் வேலைசெய்து சம்பாதித்து அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே செலவழிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வெறும் விவசாயப் பொருள் வளர்ச்சியைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இருக்காது. GDP ஒரு நாட்டுப் பொருளாதார அமைப்பின் நலத்தைக் காட்டுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் அந்தப் புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது. ஆனாலும், ஒவ்வொரு காலாண்டின் இறுதிநாளிலும் காலை 8:30 (EST) மணிக்கு அப்போதைய GDP நிலை அறிவிக்கப்படுகிறது. உற்பத்தி அதிகம் ஆகும் ஒரு நாட்டில் மக்கள் அதிகம் வாங்குகிறார்கள், GDP மேம்படுகிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதியும் GDPயில் எடுத்துக்கொள்ளப் படுகிறது' என்று ராதா விளக்கினாள்.

'செவ்வாய்க் கிரகத்தில் ஒரு தொழிற்சாலை ஒரு மில்லியன் டி-ஷர்ட்டுகளைத் தயாரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கான அடக்கவிலை செவ்வாயின் GDPயில் அடங்குமா?' சோலாக்ஸ் கேட்டான்.

'நீ கெட்டிக்காரன் தான்' என்றாள் ராதா.

செவ்வாயில் இறங்கிய போது, தன்னோடு ஒரு நாள் தங்கும்படி சோலாக்ஸ் ராதாவைக் கேட்டுக்கொண்டான். அங்கிருந்த சில முக்கியத் தலைவர்களை ராதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

முன்னணித் தலைவரான ஒலிம்பஸ் என்பவர் 'ராதா, செவ்வாய்க் கிரகக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள சில மாணவர்களை நான் தேர்வு செய்யப் போகிறேன். எப்போதும் அவர்களிடம் நான் செவ்வாயின் எரிமலைகள், நிலவுகள், துணைக்கோள்கள், இங்குள்ள சூழல் இவற்றைப் பற்றியேதான் கேட்கிறேன். எனக்காக நீ அவர்களைப் பேட்டி காணுவாயா?' என்றார்.

சந்தோஷமாக ராதா ஒப்புக்கொண்டாள். முதல் மாணவரே அமெரிக்கர். 'GDPயை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?' என்று கேட்டாள்.

'சாதாரணமாக ஒரு நபருக்கு இவ்வளவு GDP என்றுதான் கணக்கிடுவார்கள். நாட்டின் மொத்த GDPயை மக்கள்தொகையால் வகுத்தால் இது கிடைக்கும். அமெரிக்காவின் மக்கள்தொகை 300 மில்லியன், தனிநபர் GDP சுமார் 40,000 டாலர். துல்லியமாகச் சொன்னால் 39731.63 டாலர். அமெரிக்காவின் GDP 12 டிரில்லியன் டாலர், உலகிலேயே மிக அதிகம் இதுதான்.

'நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், நிறுவனமும் GDP வளர்ச்சிக்கு உதவுகிறது. அங்கே தயாரிக்கப்படும் எல்லாப் பொருள்கள், சேவைகள் இவற்றின் மதிப்போடு ஏற்றுமதியின் மதிப்பைக் கூட்டினால் GDP கிடைத்துவிடும். சரியான மதிப்பைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, அதன் வளர்ச்சியைக் கணக்கிடுவது எளிது.'

ராதா அடுத்த மாணவரிடம் கேட்டாள், '2004-ல் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபாட்களை (iPods) விற்றது. 2005-ல் 1.3 பில்லியன் ஆனது. 0.3 பில்லியன் GDPக்கு 30 சதவிகித வளர்ச்சியைக் கொடுக்குமா?'

சைனாவைச் சேர்ந்த டெக்கியான அவருக்கு இந்தக் கேள்வி ரொம்பப் பிடித்தது. 'இதற்கு விடை ஆமாம், இல்லை இரண்டும்தான். GDPயை இரண்டு வகைகளில் மதிப்பிடலாம். ஒன்று 'தற்கால டாலர் GDP'; இது மொத்தப் பொருளாதார மதிப்பின் மாறுபாட்டைக் கணிக்கிறது. இதன்படி, ஆப்பிள் ஐபாட் உபரியாக 300 மில்லியன் டாலரை GDPக்குக் கொடுத்துள்ளது.'

ராதா விடுவதாக இல்லை. 'அந்த அதிகப்படி வருமானம் அதிக ஐபாட்களை விற்றதால் கிடைத்ததா, இல்லை விலை ஏற்றத்தாலா?'

சீன டெக்கியும் பதிலுக்குக் கூறினார்: 'GDP வளர்ச்சி விலையேற்றத்தால் ஏற்பட்டதானால், அது பொய்யான வளர்ச்சி. பணவீக்கம் அதிகரித்து, நாளாவட்டத்தில் விலை மிகவும் ஏறிப்ப்போனால் மக்கள் சிரமப்படுவார்கள். அப்போது GDP குறியீடு ஒரு ஆரோக்கியமான பொருளாதாரத்தைக் காட்டினாலும், உண்மையில் மக்கள் செலவு செய்யவே தயங்குவார்கள். அது பொருளாதாரத்தை பாதிக்கும்.

'எனவே பொருளாதார வளர்ச்சியைச் சரியாகக் கணிக்க, 'மெய்யான GDP' அல்லது 'நிலையான டாலர் GDP' தெரியவேண்டும்.

'2004-ல் 5 மில்லியன் ஐபாட்கள் விற்றதாக வைத்துக்கொள்ளலாம். அது GDPக்குக் கொடுத்தது 1 பில்லியன் டாலர். 2005-ல் 6 மில்லியன் ஐபாட்கள் விற்றதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது முந்தைய ஆண்டு விலையில் வருமானம் 1.2 பில்லியன் டாலர்தான். இந்த ஆண்டின் மெய்யான GDP வளர்ச்சி 20 சதவீதம்தான். ஆனால் 0.1 பில்லியன் டாலர் அதிகம் வந்தது விலை கூடியதன் காரணமாகத்தான்.

'ஆக, ஐபாட் அதிகம் விற்றதால் மெய்யான GDPக்கு 200 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இப்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விற்கப்பட்ட ஒவ்வொரு பொருளின் மதிப்பும் GDPயில் சேர்க்கப்படும். ஒரே விலையில் அது கணக்கிடப்பட்டால் அதை 'மெய்யான GDP' அல்லது 'நிலையான டாலர் GDP' என்று கூறப்படும்.'

அடுத்து வந்த மாணவர் இந்தியர். ராதா கேட்டார் 'இந்தியாவின் மொத்த GDP 3.3 டிரில்லியன் டாலர். ஆனாலும் தனிநபர் GDP 3072.39 டாலர் தான். ஏன் அப்படி?'

'ரொம்ப சிம்பிள், மிக அதிக ஜனத்தொகை! அது மட்டுமல்ல வெள்ளைப்பணம், அரசாங்கத்துக்குக் கணக்கில் வந்த பணம் மட்டும்தான் GDPயில் வருகிறது. ஒரு கிராமத்தில் இருக்கும் தொழிற்சாலைப் பணியாளர் நிறையச் சம்பாதிக்கலாம், ஆனால் குறைவாகவே கணக்குக் காட்டுகிறார் என்றால் அது GDPயை பாதிக்கும்.'

'செவ்வாயின் GDPயை எது பாதிக்கக் கூடும்?' என்று கேட்டார் ராதா.

'செவ்வாயில்தான் மிகப்பெரிய எரிமலைகள் உள்ளன. எதிர்பாராமல் ஏதாவது நேர்ந்தால் அதுவும் பாதிக்கலாம். மற்றொரு கிரகத்தினரின் படையெடுப்பு, இயற்கைச் சீற்றம், மக்கள் திடீரென்று செலவழிப்பதை நிறுத்திச் சேமிக்க விரும்புவது, இதில் எதுவும் GDP வளர்ச்சியை பாதிக்கும்.'

'எனக்கு எல்லா மாணவர்களையுமே பிடித்திருக்கிறது' என்று கூறிய ஒலிம்பஸ். 'அது இருக்கட்டும் ராதா, நீங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்?' என்று கேட்டார்.

'அட! அமெரிக்காவால் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்ப முடியும் என்றால் செவ்வாய்க்கு ஒரு பெண்ணை அனுப்பவும் முடியும்' என்று வேடிக்கையாகச் சொன்னாள் ராதா.

ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com