சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி'
ஜூன் 8, 2008 அன்று சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி' என்ற கருத்திலமைந்த நடன நிகழ்ச்சி ஒன்றை நேப்பர்வில்லில் உள்ள நார்த் சென்ட்ரல் கல்லூரியின் பீஃபர் அரங்கில் வழங்கியது. பரதநாட்டியம், ஒடிஸி, கதக் ஆகிய மூன்று பாணிகளின் சங்கமமாக இருந்தது இந்த நிகழ்ச்சி.

கிருஷ்ண கர்ணாமிர்தத்திலிருந்து ஓர் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து வந்த 'நந்த நந்தன கோபாலா' கிருஷ்ணனின் கல்யாண குணங்களை விளக்கியது.

ஆண்டாள்
ஷோபா நடராஜன் பரதநாட்டியத்தின் வழியே ஆண்டாளின் பக்தியைச் சித்திரித்தார். ஆனந்த பைரவி, அமீர் கல்யாணி ராகங்களில் அமைந்த 'கனாக் கண்டேன் தோழி நான்' என்று ஆண்டாள் தனது தோழிகளுடன் (சங்கீத ரங்கலா, சாயி படீல்) ஆடிப் பாடியது அற்புதம். பரதநாட்டியக் குழுவினர் தங்களது எழில், நளினம் ஆகியவற்றால் பார்த்தோரைப் பரவசப்படுத்தினர். ஆண்டாளின் பாத்திரத்தை பக்தியும் சிருங்காரத்தையும் கலந்த ஆத்மானுபவமாக வெளிப்படுத்தியதில் ஷோபா நடராஜனின் பயிற்சி, திறன், கவனம் ஆகியவை தெரிந்தன. திறமை வாய்ந்த நடனக் கலைஞர்களான வினோத் மேனன், ரஞ்சனி ரகுநாதன், சைலஹரி பொன்னலூரி, ஜ்யோத்ஸ்னா தர், சலோனி புச் ஆகியோர் சிறப்பாகப் பங்களித்தனர். பக்தியில் தோய்ந்த குரலில் வசுதா ரவி 'மாலே மணிவண்ணா' போன்ற அழகிய பாசுரங்களை மிக அழகாகப் பாடினார்.

ராதை
சச்சிதானந்த தாஸின் மத்தள ஒலிக்குக் குழுவினர் ஆடியதுடன் ஒடிஸி நடனம் தொடங்கியது. உத்கலா ஒடிஸி நடன மையத்தின் ஈப்ஸிதா சத்பதி ராதையாக ஆடினார். சங்கீதா ரங்கலா, அங்கீதா கண்டாய், சுநாமிகா பாணிக்ரஹி, பிந்துலா சின்ஹா, ப்ரியா பரூவா, அனன்யா தேவ் ஆகியோர் தோழியராக வந்தனர். கண்ணனின் பிரிவு ராதையை வாட்டியதை அவரது அபிநயங்கள் தத்ரூபமாகச் சித்திரித்தன.

மீரா
அனிலா சின்ஹா அறக்கட்டளையின் கிரண் சௌஹான் மீராவைக் கதக் நடனப் பாணியில் சித்திரித்தார். சுனில் சுங்கரா, குர்மீத் கௌர், ரிச்சா குப்தா, மேதா ஸ்ரீவாஸ்தவா, மஞ்சு மன்வல், ரோஷினி ஷர்மா ஆகியோர் உடன் ஆடினர். சுபாஷ் நிர்வானின் தபலாவுக்குக் குழுவினரின் ஆட்டம் பார்த்தோரை மெய்மறக்கச் செய்தது.

தில்லானாவும் சுத்த நிருத்தமும்
லாஸ் ஏஞ்சலஸ் குரு விஜி பிரகாஷின் மாணவி சாயி பட்டீலின் பிருந்தாவன சாரங்காவில் அமைந்த 3 நிமிடத் தில்லானாவைப் பார்க்கத்தான், நான் சின்சினாட்டியிலிருந்து சிகாகோவுக்குப் போனேன் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். அவர் மிக விறுவிறுப்பாக ஆடினார். ஷோபா நடராஜனின் மூன்று மாணவியர் இந்தக் குழுவில் ஆடியதையும் குறிப்பிடவேண்டும். தில்லானா முடிந்து அவர்கள் வெளியேறிய போது 'அடடா, முடிந்துவிட்டதே!' என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

வித்வான் ஜி. விஜயராகவன் அமைத்திருந்த பஞ்சஜதிக்கு அடுத்தாற்போல ஷோபா நடராஜன், வினோத் மேனன் (பரதநாட்டியம்), ஈப்ஸிதா சத்பதி, மனோரஞ்சன் பிரதான் (ஒடிஸி), கிரண் சௌஹான், சுனில் சுங்கரா (கதக்) ஆகியோர் ஆடிய சுத்தநிருத்யம் நெஞ்சை அள்ளியது.

சம்ஸ்கிருதி பெருமுயற்சி செய்து இந்த அற்புதமான நிகழ்ச்சியை வழங்கியிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

கல்யாண் செங்கோட்டா, சிகாகோ

© TamilOnline.com