தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை
பள்ளிகள் திறக்கும் நேரம் வந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்களிலும் தமிழ்ப் பள்ளிகளிலும் நமது குழந்தைகள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்க வருவார்கள்.

'தென்றல்' பத்திரிகையின் எல்லா இதழ்களும் இணையத்தில் www.tamilonline.com என்ற முகவரியில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை (Tamil online Foundation) என்ற அமைப்பைத் தென்றலின் பதிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். லாபநோக்கற்ற 501(c)(3) அமைப்பாகப் பதிவுசெய்யும் விண்ணப்பம் உள்நாட்டு வருவாய்ச் சேவையின் (IRS) பரிசீலனையில் உள்ளது. விரைவிலேயே அனுமதி கிடைத்துவிடும்.

தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் நோக்கம் என்னவென்றால், தமிழ் சார்ந்த தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் கற்கவும், காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் சிறிய அளவிலேனும் நிதியுதவி செய்வது. திருமிகு சி.கே. வெங்கட்ராமன் (பதிப்பாளர், தென்றல்), பாஸ்கர் சுந்தர்ராஜன், மதுரபாரதி (முதன்மை ஆசிரியர், தென்றல்) ஆகியோர் அறக்கட்டளையின் இயக்குனர்களாக இருந்து வழிநடத்துவர். திரு. சந்திரா போடபட்டி அவர்கள் ஆலோசகர்.

தமிழ் கற்பிக்கும், ஆய்வு செய்யும், தமிழ்மொழியில் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகள், தமிழ்ச் சங்கங்களும் பிற அமைப்புகளும் அறக்கட்டளையின் நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். தென்றல் இதழ் லாபம் ஈட்டத்தொடங்கும்போது அதுவும் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் நிதிக்குப் போய்ச்சேரும். அதைத் தவிர, இந்த நற்பணியில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன. நன்கொடைக்கு வரிவிலக்குக் கிடைக்கும். முதல் கட்டமாக, தென்றல் இதழின் பதிப்பாளர்கள் அறக்கட்டளைக்கு 5000 டாலர் நன்கொடை அளித்துவைத்துத் தொடங்கியுள்ளனர்.

நன்கொடை அனுப்ப விரும்புவோர் (எவ்வளவு சிறிய தொகையானாலும் நன்றியுடன் ஏற்கப்படும்) காசோலை, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

Tamilonline Foundation,
PO Box 60787, Sunnyvale, CA 94088.


நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்ய: http://www.tamilonline.com/tolfoundation/tolGrantApplication.pdf

மேலும் விபரங்களுக்கு: www.tamilonline.com/tolfoundation

© TamilOnline.com