பின்னாடி போகும் சிக்குபுக்கு ரயில்
ரயில்கள் முன்னோக்கிச் சென்று தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்னோக்கி ஓடிப்போனது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜூலை 9ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டது முத்துநகர் ரெயில். 10ம் தேதி அதிகாலை திருச்சியைக் கடந்து செல்லும்போது எஞ்சினில் திடீரென்று பழுது ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து ரயிலைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடன் வண்டியை நிறுத்திய டிரைவர், அடுத்துள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று மாற்று எஞ்சினை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். பின் ரயிலை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு அவர் வந்தபொழுது அங்கே ரயிலைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ரயிலைத் தேடிய போது, அது பின்னோக்கிப் போயிருப்பது தெரியவந்தது. ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் ரயில் பின்னோக்கி நகரத் தொடங்கி, கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தொலைவுவரை போய் விட்டிருந்தது. திருச்சி அருகேவரை சென்ற ரயில் அங்குள்ள மேம்பாலம் மேடான பகுதி என்பதால் அதனைக் கடக்க முடியாமல் அப்படியே நின்று விட்டது.

பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் ரயில் பின்னோக்கிப் போனதை உணரவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வழியில் எந்த ரயிலும் வராததால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. எஞ்சின் பின்னோக்கிப் போனது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தென்னக ரயில்வே.

அரவிந்த்

© TamilOnline.com