தாராபாரதி கவிதைகள்
வேலைகளல்ல், வேள்விகளே!

'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!

தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவா னம்தான் உன்எல்லை!

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்?

மண்புழு வல்ல மானிடனே - உன்
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைக ளல்ல; வேள்விகளே!

***


ஆகஸ்டு 15

பாரதச் சுவர்தோறும்
படிந்திருந்த 'வெள்ளை'யினை
யாரும் விரும்பாமல்
அழுக்கென்று ஒதுக்கியநாள்!

துவைக்காத 'வெள்ளை'யினை
துக்கச் சின்னமென்று
புவிக்கெல்லாம் எடுத்துரைத்த
புனிதப் போர் முற்றியநாள்!

தொண்டர்கள் சுதந்தர
தாகம் தணிக்க
துப்பாக்கிக் குழாயில்
ரவையைக் குடித்ததை -

துப்பாக்கிக் குழாய்க்குத்
தாகம் எடுத்ததால்
தொண்டர்கள் நெஞ்சில்
ரத்தம் குடித்ததை -

நெஞ்சம் நினைக்கும்
நினைவுத் திருநாள்!

***


கவரிமான்

கவரிமான் சாதி யாகக்
கவிஞர்கள் வாழ்ந்த தால்தான்
கவரிகள் வீசி அந்நாள்
காவலர் போற்றி நின்றார்!

கொற்றவன் தவற்றைக் கோவூர்
கிழார் சுட்டிக் காட்டவில்லை?
பெற்றதோர் பரிசி லுக்கு
பெருஞ்சித் திரன்தாழ்ந் தானா?

பின்வரும் விளைவுக் கஞ்சிப்
பிசிராந்தை வளைய வில்லை;
பொன்பொருள் பதவிக் காகப்
பொய்கையார் பொய்க்க வில்லை!

பரிசிலைப் பெறும் பொருட்டு
பாயிரம் யாத்த தில்லை;
அரசினை வாழ்த்திப் பாடி
அணிந்துரை எழுத வில்லை!

பகைவென்ற வீரவாளை
பனையோலை வென்ற காலம்
மகுடத்திற் காக யாரும்
மகுடிகள் ஊத வில்லை!

உவமானம் கவிதைக் கென்றால்
உயிர்மானம் கவிஞர்க் கன்றோ?
கவிதைக்கும் கற்பு வேண்டும்;
காசுக்கு விற்க வேண்டாம்!

ஒருவேளைப் பொருளுக் காக
உதடுகளை விற்கும் கவிஞன்;
ஒருவேளை பலவீ னங்கள்
ஒரு யுக அவமானங்கள்!

என்றைக்கும் மாறி டாமல்
எழுந்தநாள் கொள்கை யோடு
இன்றைக்கும் இருக்கின் றார்கள்
இலட்சியக் கவிஞர் சிலபேர்!

***


காற்றுக்குப் புதிய திசை காட்டு...

இளைஞனே!

வீட்டுக்கு உயிர்வேலி,
வீதிக்கு விளக்குத் தூண்;
நாட்டுக்குக் கோட்டைமதில்,
நடமாடும் கொடிமரம் நீ!

வானுக்கும் பூமிக்கும்
வைக்கப்பட்டிருக்கும்
ஏணி - உன்மேனி,
இளைப்பறியா நீ தேனீ!

திசைகாட்டத் தெரியாத
திண்ணைப் பேச்சுகளை
அசைபோட்டுக் கொண்டிருக்கும்
அஃறிணையாய் மாறாதே!

உன்னுடைய தேகத்தின்
உறுப்புகளை வளர்க்கும் நீ
உன்னுடைய தேசத்தின்
உயர்வுக்குச் செய்ததென்ன?

சோற்றுக்கா உன்னுடம்பு?
சோம்பலுக்கா நீவிருந்து?
காற்றுக்குப் புதியதிசை
காட்டலாம் வா எழுந்து!

தேசியக் கொடிவிற்றுத்
தின்பண்டம் திரட்டுகிற
மோசடியை முறியடிக்க
முழங்கிவா இளம்புயலே!

புல்லின் நுனிமீதும்
பூமிப்பந்தை நிறுத்தும்
வல்லமை படைத்தவன் நீ
வரிப்புலியே வா வெளியே!

உன் எடைக்கு முன்னே
உமி எடைதான் இமயமலை;
உன்நடைதான் இன்றுமுதல்
உலகநடை; எழுந்துநட!

என்னுயரம் இதுவென்று
எழுந்துநில்! அப்போது
விண்ணுயரம் கூட உன்
விலாவுக்குக் கீழேதான்!

***


தமிழ்ச் சிறகால் வானத்தை அளக்கலாம் வா!

நாடெல்லாம் வள்ளுவனை நகல் எடுக்கும்;
நகரெல்லாம் கம்பனது புகழ் விரிக்கும்;
ஏடெல்லாம் இளங்கோவின் நகல் பதிக்கும்;
எழுத்தெல்லாம் பாரதியைப் படம் பிடிக்கும்;

காடெல்லாம் பாவேந்தன் களம் அமைக்கும்;
கடலெல்லாம் கலம் மிதக்கும், ஆனால் தமிழன்
வீடெல்லாம் மட்டும்தான் தமிழ் விளக்கின்
வெளிச்சத்தை இருட்டடிப்புச் செய்தி ருக்கும்!

'தாய்மொழியை மட்டும் நீ விரும்பு' மற்ற
தனிமொழிகள் பாராதே திரும்பு' என்று
வாய்மொழிக்கு வரம்புகட்ட மாட்டேன்! வயிற்று
வரவுக்குப் பிறமொழிதான் வழியென் றெண்ணி

தாய்மொழியை நோய்மொழியாய்க் கருதும் உந்தன்
தவறான போக்கைத்தான் கண்டிக் கின்றேன்;
தாய்மொழியுன் கட்டைவிரல்; அதனைச் சுற்றித்
தனிமொழிகள் பிறவிரல்கள் உணர்ந்துகொள் நீ!

வாய்மொழிகள் வரிசையிலே முதலில் உந்தன்
'வாய்'க்காலில் தாய்ப்பாலே வரட்டும் தம்பி!
தாய்மொழியில் பாய்மரத்தை விரிக்கலாம் வா!
தமிழ்ச் சிறகால் வானத்தை அளக்கலாம் வா!

***


தாராபாரதி

(குறிப்பு: எல்லாக் கவிதைகளும் முழுமையாகத் தரப்படவில்லை. சில பத்திகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.)

அமரர் தாராபாரதியின் 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற வரிகள் மிகப் பிரபலமானவை. 'பாரதி - அந்தத் தலைப்பாகைக் கவிஞனின் தமிழ் படித்துக் கவிஞனானவன் நான்' என்று வாய்க்கு வாய் சொல்லிப் பெருமை கொண்ட மற்றுமொரு அக்கினிக்குஞ்சு தாராபாரதி. 'கவிஞாயிறு' என்ற பட்டத்தைப் பெற்ற இவர் 'புதிய விடியல்கள்' (1982), 'இது எங்கள் கிழக்கு' (1989), 'தாராபாரதி கவிதைகள்' (2000), 'பூமியைத் திறக்கும் பொன்சாவி' (2001), 'இன்னொரு சிகரம்' (2002), 'விவசாயம் இனி இவர் வேதம்' (வேளாண் செம்மல் புலம்பாக்கம் முத்துமல்லா வரலாறு, 1992) ஆகிய கவிதை நூல்களையும், 'பண்ணைப்புரம் தொடங்கி பக்கிங்காம்வரை' (இசைஞானி இளையராஜா வரலாறு, 1993), 'வெற்றியின் மூலதனம்' (2004) ஆகிய உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். எல்லாக் கவிதைகளையும் தொகுத்து 'கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்' என்ற பெயரில் இலக்கிய வீதி வெளியிட்டுள்ளது.

© TamilOnline.com