குதிரைக்குக் கிடைத்த பூஜை!
ஓர் ஊரில் ஒரு சிற்பி இருந்தான். பஞ்சலோகத்தில் தெய்வச் சிலைகளை வார்ப்பது அவன் வேலை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு ஆலயத்திற்காக ஒரு விநாயகர் சிலையை வடிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவனும் பயபக்தியுடன் அந்தச் சிலையைச் செய்தான்.

சிலை தயாரானதும், தனது குதிரையைக் குளிப்பாட்டி நன்கு அலங்காரம் செய்தான். அதன் மீது ஒரு பல்லக்கை வைத்துக் கட்டி, அதில் விநாயகர் சிலையை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரை நோக்கிப் புறப்பட்டான்.

செல்லும் வழியிலெல்லாம் மக்கள் பயபக்தியுடன் தூப தீபம் காட்டி, மாலை அணிவித்து, சுற்றிவந்து வணங்கினர். குதிரை மக்கள் தன்னைத்தான் வணங்குவதாக நினைத்து கர்வப்பட்டது. மிகவும் கம்பீரமாக நடக்கத் தொடங்கியது.

பக்கத்து ஊரை அடைந்தபின் விநாயகர் சிலை ஆலயத்துக்குள் வைக்கப்பட்டது. சிற்பி குதிரையை அருகில் உள்ள மரத்தடியில் கட்டினான். சற்று நேரம் சென்றது. விநாயகர் சிலை மீண்டும் நன்கு அலங்கரிக்கப்பட்டு அழகான பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வெளியே கொண்டு வரப்பட்டது. மக்கள் விநாயகரைத் தரிசிக்க ஆர்வத்துடன் முண்டியடித்தனர்.

மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரை கூட்டத்தைப் பார்த்தது. தனக்காகத்தான் அந்தக் கூட்டம் கூடியிருக்கிறது என்று நினைத்தது. உடனே கயிற்றை அறுத்துக் கொண்டு, இடித்துத் தள்ளிக் கொண்டு வேகமாகக் கூட்டத்துக்குள் நுழைந்தது. வேகமாக குதிரை கூட்டத்துக்குள் நுழைய முற்படுவதைக் கண்ட மக்கள் ஆத்திரமடைந்தனர். அதற்கு வெறி பிடித்துவிட்டது என்றும், விநாயகர் சிலையை சேதப்படுத்தத்தான் அது வருகிறது என்றும் நினைத்த அவர்கள், குதிரையைக் கழிகளால் நையப் புடைத்தனர்.

இது வரை தன்னை வணங்கிக் கொண்டாடிய மக்கள், இப்போது ஏன் அடித்துத் துரத்துகின்றனர் என்று புரியாமல் பெருங்குரலில் கனைத்தவாறே காட்டை நோக்கி வேகமாக ஓடியது அந்தக் குதிரை.

சரி, குழந்தைகளே! அடுத்த மாதம் சந்திக்கலாம்.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com