ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்)
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு மருத்துவம் படிக்க வேண்டாம் என்று தோன்றிவிட்டதாம். பத்தாவது வகுப்பில் படிக்கும்போது, அப்போது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடந்த சமயம், குடும்பமே வெகு ஆர்வமாக அரசியல் விவாதங்கள் நடத்துமாம். தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள ராப்பகலாக டி.வி.யைப் பார்த்தவண்ணமாக இருப்பார்களாம். அப்போதுதான் செய்திகளின் முக்கியத்துவத்தையும், செய்தி வாசிப்பவர்களையும் கவனித்து உணர்ந்திருக்கிறார் ஹேமா.

அதேநேரம் பள்ளியில் கட்டுரைகள் எழுதுவது, கலந்துரையாடலில் பங்கேற்பது ஆகியவற்றை ஏற்கனவே செய்து வந்திருக்கிறார். ஆனால் அதிகக் கூச்ச சுபாவம் இருந்ததாம். இதைப் போக்குவது என்று தீர்மானித்தது மட்டுமல்லாமல், ஏன் ஜர்னலிஸம் படிக்கக் கூடாது என்ற எண்ணமும் அவர் மனதில் உதித்திருக்கிறது. பெற்றோரும் ஊக்கமளிக்கவே, ஆஸ்டின் யூனிவர்ஸிடியில் பிளான் II (PLAN II) என்ற லிபரல் ஆர்ட்ஸ் புரொக்ராமில் (Liberal Arts Program) சேர்ந்து, அதில் இரண்டாவது முக்கியப் படிப்பாக இதழியலைத் (ஜர்னலிஸம்) தேர்வுசெய்தார்.

மேலும், மாணவர் தொலைக்காட்சிச் செய்தி நிகழ்ச்சியின் (Student News TV Program) பயிற்சி முகாமில் ஈடுபட்டிருக்கிறார். இந்த முகாமில் மாணவர் தாமே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, திரைக்கதை தயார்செய்து, அதைத் தாமே டி.வி. காமிராவால் படம் பிடிக்கவும் வேண்டும். கல்லூரி ‘இண்டர்ன்ஷிப்'புக்காக (Intership) ஃபாக்ஸ் நியூஸில் (Fox News) பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

##Caption## படித்து முடித்ததும் தமது மூன்று படைப்புக்களை உபகாரச் சம்பளம் (Scholarship) கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறார். அது இவருக்கு ஒளிபரப்பு ஜர்னலிஸத்தின் (Broadcast Journalisim) மிகவுயர்ந்த உதவி நிதியான லிண்டன் ஜான்ஸன் உபகாரச் சம்பளத்தை (George Foremen Tribute to Lynden B Johnson Scholarship) பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கல்லூரியில் மிக அதிக மதிப்பெண்ணுக்காக 'சீனியர் ஃபெல்லோ' அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்.

இந்த விருதைப் பெற லாஸ் ஏஞ்சலஸ் சென்ற ஹேமாவுக்கு அங்கே இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அவ்விழாவுக்கு வந்திருந்த, டெக்ஸஸைச் சார்ந்த KWEST-9 நிறுவனத்தினர் இவரது திறமையைக் கண்டு, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புத் தந்தனர். இன்று ஹேமா நியூஸ்வெஸ்ட் 9 ஸன்ரைஸ் ஷோவில் ஒரு நடத்துனர் (Anchor Woman). காலை 5:30 முதல் 7:00 மணிவரை இவர் வழங்கும் செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியைக் காணலாம். இதற்காக காலை 3:30 மணிக்கே டி.வி. நிலையத்துக்குப் போய் விடுகிறார். அவ்வளவு அதிகாலை வெளியே செல்வதற்கு பயமில்லையா என்று நாம் கேட்டபோது 'பழகிவிட்டது. தினமும் காலை 5:00 மணிக்கு என் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிவிடுவேன்' என்றார்.

வாசிக்க வேண்டிய பிரதிகள் தயாராக இருந்த போதிலும், 3:30-5:30க்குள் இணையத்தில் சென்று ஹேமா அச்செய்திகளைச் சரிபார்ப்பாராம். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஹேமாதான் அந்த நிகழ்ச்சியின் ஒரே நடத்துனர். வெறுமனே செய்திகளை வாசிக்காமல், நேயர்களுடன் விளையாட்டாகப் பேசுவது, நடையை மாற்றுவது என்று பல உத்திகளைக் கையாளுகிறார். 7:00லிருந்து 10:30 மணிவரை, ஒவ்வொரு அரைமணி நேரமும் செய்திச் சுருக்கத்தையும் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தரத்தை நிர்ணயிக்கும் ‘ஏஸி நீல்ஸன் ரேட்டிங்க்'படி, கடந்த பிப்ரவரி மாதம் இவரது நிகழ்ச்சிக்கு டி.வி. நிகழ்ச்சிகளிலேயே இதுவரை கண்டிராத ரேட்டிங் கிடைத்ததில் ஹேமாவுக்கு ஒரே சந்தோஷம்.

உங்களது போட்டியாளர் யார் என்றால், தயங்காமல் CBS என்கிறார். ஹேமாவின் லட்சியம் ஒருநாள் ‘டுடேஸ் ஷோ'வை (Today's Show) நடத்துவது. மதியம் மூன்று மணி அளவில் வீடு திரும்புகிறார். புத்தகங்கள் படிப்பது, நண்பர்களுடன் அரட்டை இவருக்கு விருப்பமான பொழுதுபோக்குகள். NBCயின் ஆண்டிரியா மிச்சல் (Andrea Mitchell) இவருக்கு மிகவும் பிடித்த நிருபர். விடுமுறையில் சென்னைக்கு வந்து மல்லிகைப் பூ வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்குமாம். 'அம்மா கை வத்தல் குழம்பு, வெண்டைக்காய் பொறியலுக்கு ஈடில்லை' என்று சொல்லிவிட்டு நாக்கைச் சப்புக்கொட்டுகிறார்.

'அவரது தொழில்முறை வாழ்க்கையில் மனதைத் தொட்ட நிகழ்ச்சி பற்றிக் கேட்டோம். 'ஒரு வருடத்திற்கு முன் ‘மை ஸ்பேஸ்' என்ற இணையச் சேனலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு 11 வயதுப் பெண் கடத்தப்பட்டார். அவரைக் கடத்தியவர் அவரை டெக்ஸஸிலிருந்து ஃப்ளோரிடாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். கடும் முயற்சிக்குப் பிறகு அவரை அவரது தாயார் மீட்டார். இந்தச் செய்தியை ஒளிபரப்பியது என் மனதை மிகவும் தொட்ட ஒன்று' என்று கூறினார் ஹேமா. கடத்தப்பட்ட அப்பெண்ணுடன் செய்தியின் இடையே தாமே தொடர்பு கொண்டு ஹேமா பேசினார். ஹேமா இதைக் கையாண்ட விதத்துக்குப் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தனவாம்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஹேமா முள்ளூர் புதிய பதவியை ஏற்கிறார். மிட்லண்டு டெக்ஸஸில் செய்தியாளராகப் பணி புரிந்த இவர், ஆகஸ்ட் 11 முதல் எல்பேஸோ டெக்ஸஸிற்கு மாறப் போகிறார். அங்குள்ள ஃபாக்ஸ் டி.வியின் (Fox TV) மாலை மற்றும் இரவுநேரச் செய்தித் தொகுப்பின் முதன்மைச் செய்தியாளராகப் பதவி வகிக்க இருக்கிறார்.

செல்லுமிடமெல்லாம் புகழ் குவிக்க ஹேமாவுக்கு வாழ்த்துக்கள்.

காந்தி சுந்தர்

© TamilOnline.com