பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய்
ஒரு பக்கம் பணம் குவிக்கும் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் கிராமத்துச் சிறுவர்கள் படிக்காமல் கூலி வேலைக்குச் செல்லும் அவலநிலை தொடர்கிறது. புத்தகங்கள், சீருடை, உணவு, சைக்கிள் எல்லாம் இலவசமாகக் கொடுத்தாலும் அதிகப் பேர் கல்வி கற்க முன்வருவதில்லை. இந்நிலையில் இந்த அவல நிலையைப் போக்கப் புதுமையான முறையைக் கையாள்கிறது ஒரு பள்ளி. தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் இலவசம்! அரசு உதவி பெறும் அந்த நடுநிலைப் பள்ளி போடிநாயக்கனூரில் இருக்கிறது.

மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவதைவிடக் கூலி வேலைக்கு அனுப்புவதையே விரும்புகின்றனர். காரணம் வறுமை. கிராமப்புற மக்களிடையே கல்வியறிவை வளர்ப்பது மட்டுமில்லாமல் அவர்கள் வறுமையையும் போக்க முன்வர வேண்டும் என்ற எண்ணத்தில், பள்ளி நிர்வாகம் இந்த ஒரு ரூபாய் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அது அவர்கள் பெயரில் அஞ்சலகத்தில் சேமிக்கப்படும். படிப்பு முடிந்தவுடன் வட்டியோடு திருப்பித் தரப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டாவது குழந்தைகள் படிக்க வருவார்கள், கல்வியறிவு பெறுவார்கள் என்பது பள்ளியின் நம்பிக்கை.

அரவிந்த்

© TamilOnline.com