சில பயணங்கள் சில புத்தகங்கள்
ரயிலிலோ பஸ்ஸிலோ ஏறி உட்கார்ந்ததும் தூங்கி விழாத துரதிர்ஷ்டக்காரர்களில் நானும் ஒருவன். அதற்கேற்றாற்போல் எனக்குப் பக்கத்தில் உட்காருபவர் நிச்சயமாகத் தனது விளக்கெண்ணெய்த் தலையை என் முகத்தில் தேய்த்துக்கொண்டும், முதுகில் அழுத்திக் கொண்டும், மடியில் விழுந்துகொண்டும் கண்டிப்பாகத் தூங்குவார். பொதுவாக ஜாதகத்தை நம்புகிற ஆசாமி நானல்ல என்றாலும், இந்த விஷயத்தில் எந்த கிரகத்தின் சதியால் இப்படி நடக்கிறது என்பதை ரஜனிகாந்த், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படத்துடன் உட்கார்ந்திருக்கும் மரத்தடி ஜோசியர் யாரிடமாவது கேட்டுத்தான் ஆகவேண்டும்.

சிறுவயதிலிருந்தே வெளியூர் போவதென்றால் கொண்டாட்டம்தான். இப்போதும் அந்த உற்சாகம் குறையவில்லை. இப்போதுள்ள தலைமுறையினர் கம்ப்யூட்டரில் கார் ரேஸ் விட்டாலும் விடுகிறார்களே தவிர வெளியே கிளம்புவதென்றால் ரொம்பச் சிரமமானதாக இருக்கிறது. அப்படியே போனாலும் வெளியேயும் எந்த வசதியும் குறையக்கூடாது, எதற்காகவும் காத்து நிற்கக்கூடாது என்கிறார்கள். நானெல்லாம் அப்படியல்ல. தீபாவளிக்கு முன்னால் தோன்றுகிற எதிர்பார்ப்புக் கலந்த சந்தோஷத்தைப் போலவே ஒவ்வொரு பயணத்துக்கு முன்னாலும் எனக்கு ஏற்படும். எதுவும் காஷ்மீருக்கோ ஊட்டிக்கோ ஒன்றும் புறப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு வாகனத்தில் உட்கார்ந்து எங்கு போவதானாலும் சரி, ஒரே துள்ளல்தான்.

புத்தகம் படிக்கும் ஆசை அப்படியே விசுவரூபம் எடுத்தபோது, பயணத்தின் சுகத்தை அனுபவிக்காமல் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். நேரம் வீணாக்காமல் செய்வதாக எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். கழுத்து வலிக்கும், கண் திரையிடும், தண்ணீராகக் கொட்டும். ஓடுகின்ற தந்திக் கம்பங்களும், கம்பிகளின் மீது அணிவகுத்து உட்கார்ந்த மைனாக்களும், நெடுகக் கிடக்கும் மலைகளும், நீல மின்னலாகத் தண்ணீரில் பாய்ந்து இரையெடுக்கும் மீன்கொத்திகளும், சிவந்த சூரியாஸ்தமனங்களும் பார்ப்பாரில்லாமல் வீணாகப் போய்விட, நான்பாட்டுக்குப் புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பேன். நல்ல வேளையாக 'செர்வைகல் ஸ்பாண்டிலாஸிஸ்' வந்தது. குனியாதே, நிமிராதே, கனம் தூக்காதே, திடீரென்று திரும்பாதே, தொடர்ந்து புத்தகம் படிக்காதே என்று டாக்டர் என்னை ஒரு காலிஃப்ளவர் போல இருக்கச் சொல்லிவிட்டார். அதையும் வெற்றிகண்டது வேறு கதை.

##Caption##அதிலும் சென்னையிலிருந்து டெல்லிக்குப் போவதென்றால் சான் பிரான்சிஸ்கோ வருவதைவிட அதிக நேரம் எடுக்கும். ரயில் நிற்காமல் பல நாட்கள் ஓடிக்கொண்டே இருப்பதைப் போலத் தோன்றும். இறங்கி இரண்டு நாட்கள் ஆனாலும் உடம்பு ரயிலில் இருப்பதைப் போலவே லேசாக ஆடும். ஆனால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஒரு வசதி செய்தார்கள். ஒரு சிறிய லெண்டிங் நூலகம் ஒன்றை அமைத்தார்கள். 'அனிதா, இளம் மனைவி'யை எடுத்தால் போதும், அரைநாள் போவதே தெரியாது. அப்புறம் 'நைலான் கயிறு', 'கரையெல்லாம் சண்பகப்பூ' என்று அதிர்ஷ்டத்தைப் பொறுத்து எதாவது கிடைக்கும். ஆனால், ஓடுகிற ரயிலில் என்னால் 'ஒரு புளியமரத்தின் கதை' படிக்க முடியாது. அது வேறு மனநிலை.

இதில் என்ன பிரச்சனை என்றால் பயணத்தின்போது தூங்குகிறவர்களுக்கு எளிதில் நேரம் போய்விடும். விழுப்புரத்தில் தூங்கிக் கண்ணை விழித்துப் பார்த்தால் மலைக்கோட்டையும் காவிரியும் தெரியும். என்னைப் போலக் கொட்டுக்கொட்டென்று உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு அப்படியல்ல. 'சார், கொஞ்சம் நிமிர்ந்து உக்காருங்க' என்று முதலில் அன்புகலந்த எரிச்சலோடு சொல்லத் தொடங்கி, நேரம் போகப்போக 'எத்தனை தடவை சார் சொல்றது!' என்று அன்பே கலக்காத எரிச்சல் நிலைக்குப் போய்விடுவோம். தூங்காதபோது பசி, தாகம், சிறுநீர் என்று இப்படி இயற்கையின் பல உந்துதல்களும் பூதாகாரமாக வந்துகொண்டே இருக்கும். நம்மைப் போல சபலக்காரர்கள் இருப்பது தெரிந்து பேன்ட்ரி காரிலிருந்து வாசனையாக கட்லெட், போண்டா, மசாலா தோசை என்று எதையாவது போட்டு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதையும் நம் தேவைக்கேற்ப ஒன்று இரண்டு தர மாட்டார்கள், அவர்களுக்கென்று ஏதோ நாலு, ஆறு என்று கணக்கு இருக்கும். அப்படித்தான் தருவார்கள். முக்கி முனகி அதைத் தின்று தீர்த்தாலும் கொஞ்சம் பொழுது போய்விடும்.

திருமணமான புதிதில் எந்தப் பயணமும் நீண்டதாகத் தெரிந்ததே இல்லை. குழந்தை பிறந்த பின்னரோ 'நிறைந்த சாமான், குறைந்த வசதி, பயணத்தைச் சோகமாக்குங்கள்' என்று மாறத் தொடங்கியது. இந்தக் கட்டங்களெல்லாம் தாண்டிய பின் மீண்டும் பயணமும் புத்தகங்களும் தமக்கான இடத்தை மீண்டும் ஆக்கிரமித்தன.

பயணங்களும் புத்தகங்களும் வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிட்ட எனக்குச் சில பயணங்கள் புத்தகங்களாகிவிடுகின்றன. சில புத்தகங்கள் பயணங்களாகவே மாறிவிடுகின்றன.

*****


புத்தகங்கள் என்றதுமே எனக்கு சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் நினைவுக்கு வந்துவிட்டார். காரணம் ஒரே வருடத்தில் நான்கு ஐந்து புத்தகங்களை எழுதித் தள்ளுகிற திறமையும் சரக்கும் கொண்டவர்கள் அதிகம் கிடையாது. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து, மூட் வரவழைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றி நிறையக் குப்பை மலையைக் குவித்துக் கொண்டு எழுதுகிற என் போன்றவர்களுக்கு நடுவே இம்மென்றால் இருநூறும் அம் மென்றால் ஆயிரமும் படைத்துத் தள்ளுவதில் ஜெயந்திக்கு இணையில்லை.

'இணையில்லை' என்று சொல்ல இன்னொரு காரணமும் உண்டு. மாத நாவல்களைப் போலத் தரமில்லாமல் பக்கம் நிரப்பிப் போடுகிறவரல்ல இவர். ஒவ்வொரு கதையும் கட்டுரையும் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையின் உன்னிப்பான பார்வையிலிருந்து வார்க்கப் பட்டிருக்கும். தென்றலில் வெளிவந்த இவருடைய கதைகளான 'அம்மா பேசினாள்' (மார்ச், 2005), 'மறுபக்கம்' (அக்டோபர், 2005) ஆகியவையே இதற்கு சாட்சி சொல்லும். சிங்கப்பூரிலும், தமிழ்நாட்டிலும் இவரது கதை, கட்டுரைகளை வெளியிடாத பத்திரிகைகள் கிடையாது. பல இணைய இதழ்களிலும் எழுதியிருக்கிறார். 'குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டு, குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு எப்படியம்மா இவ்வளவு எழுதுகிறீர்கள்?' என்று அவரை அடுத்தமுறை பார்க்கும்போது கேட்க ஆசை.

'பின்சீட்', 'நியாயங்கள் பொதுவானவை' (சிறுகதைத் தொகுப்புகள்), 'வாழ்ந்து பார்க்கலாம் வா' (நாவல்), 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' (குறுநாவல் தொகுப்பு), 'ஏழாம் சுவை', 'நாலேகால் டாலர்' ஆகியவை கட்டுரைத் தொகுப்புகள். 'பெருஞ்சுவருக்குப் பின்னே' சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் குறித்த நூல். குறிப்பிடத்தக்கது என்று இவற்றுள் ஒன்றை மட்டும் என்னால் பிரித்துச் சொல்லமுடியவில்லை. ஒவ்வொன்றுமே தனித்தன்மை வாய்ந்ததுதான். இல்லாவிட்டால் உயிர்மை, மதி நிலையம், சந்தியா போன்ற தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் இவற்றை வெளியிட்டிருக்க மாட்டா.

ஆனாலும் கட்டுரையாளர் ஜெயந்தியை விடச் சிறுகதையாசிரியர் ஜெயந்தியை எனக்கு அதிகம் பிடிக்கும். இப்போதைய தமிழகப் பத்திரிகைகள் எல்லாம் இதழியலாளர்களால் நடத்தப்படுபவை. விறுவிறுப்பு, பரபரப்பு, விரசம் இவற்றை நாடித் துடிப்புகளாகக் கொண்டவை. இவற்றின் ஆசிரியர்கள் கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், கி.வா. ஜகன்னாதன் போல எழுத்தின், மொழியின் உயரத்தை எட்டியவர்களல்லர். படைப்பிலக்கியத்தின் மேன்மையை இவர்கள் அறியமாட்டார்கள். இந்தக் காரணத்தினால் தான் நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் தரவல்ல ஜெயந்தி சங்கர் போன்றவர்களை வெறும் கட்டுரையாளர்களாக மாற்றிவிட்டனர்.

எனக்குத் தெரியும், இதை நான் எழுதி முடிப்பதற்குள், ஜெயந்தி சங்கரின் அடுத்த ஈடு நூல்கள் சுடச்சுட வெளிவந்துவிடும். அவையும் நன்றாகத்தான் இருக்கும். அவற்றில் சிறுகதைகளும் நாவல்களும் இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.

மதுரபாரதி

© TamilOnline.com