நன்றே செய்யினும் இன்றே...
அன்று சூரியன் மிகவும் மந்தமாக, கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள கடைசி வேலை நாளில் வேலை செய்யும் மக்கள் போல், இருந்தான். அவன் வெளியே வந்தால், மிகவும் குளிராக இருந்தாலும் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். மந்தமான அந்நாள் சென்னையில் நவம்பர் மழை நாட்களை நினைவிற்குக் கொண்டு வந்தது. அம்மழை நாட்களில் திரும்பி வரும்போது, குடை இருந்தும், அது பேருக்குத்தான். தலையைத்தான் குடை மறைக்கும். மற்றபடி துணி எல்லாம் ஈரம்தான். பேருந்து வண்டியில் வீடு வரும்போது சில வண்டிகளில் ஜன்னல் கண்ணாடி இல்லாமல் தடிமனான துணி மறைத்திருக்கும்.

ஆனாலும், மனதில் திட்டாமல் சிறிது ஜன்னல் சாரலைத் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேரும்போது ஒரு நிம்மதி. வானம் மூடிக் கொண்டு இருப்பதால் இருட்டடித்துக் கொண்டு ஈரத் துணி வாசத்துடனிருக்கும். வீட்டில் ஈர உடையை மாற்றிக் கொள்ளும் போது 'அப்பாடா' என இருக்கும். மழை காரணமாகக் கல்லூரி விடுமுறை விட்ட நாட்களில் வேர்க்கடலை வறுத்து சூடான காபி போட்டுக் குடிக்கும் சுகமே சுகம். ஆனால் அதே மனது, இந்த பனிக்காலத்தைத் திட்டுகிறது.

##Caption##அவனது நண்பன் விசு 'புது வருடப் பிறப்பின் அன்று நான் சாப்பிடும், எல்லாச் சுவையும் இருக்கும் லேகியம், வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் எல்லாம் நிறைந்தது என்பதை உணர்த்துகிறது' எனத் தத்துவ மேதை போலக் கல்லூரி நாட்களில் சொல்வான். இந்த நாலு பருவ காலங்களும் அதே வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்து வதை ராபர்ட் உணர்ந்தான். காலங்கள் மாறும்போது தான் ஒவ்வொருக் கால கட்டத்தின் அருமையும் புரிகிறது. கஷ்டங்கள் ஒரு மனிதனைப் பதப்படுத்துகின்றன. மனதை தங்க ஆசாரியின் அடுப்பில் போட்ட பசும்பொன்னாக்குகிறது.

ராபர்ட் மனதில் அன்று முந்தின தினம் பார்த்த ஒரு வாகனத்தின் பம்பரில் எழுதப்பட்ட வாசகம், உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கனவில் அதே வாசகம். காலை எலிப்டிகல்லில், ட்ரெட் மில்லில் அதே திருப்பித் திருப்பி நினைப்பு.

வேறுதிசை திருப்பினாலும் மனக்குரங்கு அதையே நினத்தது. அவன் செல்லும் தேவாலயத்தில் எல்லாப் பிள்ளைகளையும் கனடாவிலுள்ள மாண்ட்ரியாலில் ஈஸ்டருக் காக அழைத்துச் செல்ல ஒரு திட்ட மிட்டிருந்தார்கள். அதற்கு, ஒவ்வொரு குடும்பமும் இரண்டாயிரம் டாலர் கொடுத்தால் அக்குடும்பப் பிள்ளைகள் செல்லலாம் என்பது குறிப்பிடப்பட்டது. அவனது இரு பிள்ளைகளும் அவர்களை விட்டுத் தனியாகச் செல்வது முதன்முறை. அவனும் அவனது மனைவியும் தனது பிள்ளைகளை அனுப்பத் திட்டமிட்டு இருந்தார்கள். அவர்கள் குடும்ப நிர்வாகத்தை மிகவும் கட்டுப்பாட்டாக நடத்துபவர்கள். வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என வேலை ஓய்வு, உடல்நலக் காப்பு நிதி, பிள்ளை கல்வி நிதி என சேமிப்பவர்கள். மற்றவை எல்லாம் அதற்கு மேற்பட்டுதான். விடுமுறைப் பயணம்கூட.

அதனால் இந்த 2000 டாலர் செலவு விரிவாக அலசப்பட்டது. இது ஒன்றும் பிரச்சனை இல்லை. ராபர்ட்டின் கம்பெனி அவ்வருடம் நன்றாக நடந்ததால் போனஸ் கொடுத்து இருந்தார்கள். ஆனால், நேற்றிலிருந்து மன உறுத்தல். அன்று மாலை ராபர்ட் அவனது மனைவியுடன் இணையத்தில் சென்று 2 மணி நேரம் தேடினான், தேடினான், ஒன்றும் பிடிபடவில்லை. அவன் மனைவிக்கு அவன் செய்வது பிடிக்கவே இல்லை. அவன் அவளிடம் பேசிப் பார்த்தான். அவள் ராபர்ட்டின் பேச்சிலுள்ள நியாயத்தை உணர்ந்தாள். அவள் பாதியிலேயே சமைப்பதற்குச் சென்று விட்டாள். கடைசியில் ராபர்ட் ஒரு திருப்தியுடன் எழுந்தான்.

டிசம்பர் 25, 2007

அன்று கிறிஸ்மஸ். காலையில் ராபர்ட்டின் குழந்தைகள் ஷர்மிலியும், ப்ரேமிகாவும் அவரவர் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களைப் பார்த்த சந்தோஷத் திருப்தியுடன் அவர்கள் அம்மாவுடன் இணைந்து, அவர்களது குடும்பப் பாரம்பரியமாகச் செய்யும் வெள்ளையும் பச்சையும் கலந்த பிஸ்தா கேக் செய்து கொண்டிருந்தார்கள். மிகவும் மூக்குத் துளைக்கும் வாசனையுடன் கேக் பிரமாதமாக பேக் ஆகிக் கொண்டிருந்தது. அன்று விருந்திற்கு பலரைக் கூப்பிட்டு இருந்தார்கள். அதற்கு வேறு சமையல் ஆகிக் கொண்டிருந்தது. இவை எல்லாம் தயாராகிய பின் மதியநேரம், நண்பர், உறவினர் சுற்றத்துடன் சாப்பிட உட்கார்ந்து, அவர்கள் கிரேஸ் சொல்லும்போது தொலைபேசி அடித்தது. அவர்கள் வீட்டில் என்னதான் முக்கியக் காரணமாக இருந்தாலும் தொலைபேசியை எடுப்பார்கள்.

ராபர்ட்டின் மனைவி எடுத்தவுடன் ஒரு அமெரிக்கப் பெண்மணியின் குரல் 'மிஸஸ் டிசௌஸா?' என்றது. ராபர்ட்டின் மனைவியும் 'ஆமாம்' என்றார். அப்பெண்மணி (ஆப்பிரிக்க அமெரிக்க மொழிச் சாயலுடன்) 'என் பெயர் பாம்லா ஹாலிபர்டன், மெர்ரி கிறிஸ்மஸ், உங்கள் மனது பெரிய மனது' என்று கூறினார். ராபர்ட்டின் மனைவி மலங்க மலங்க விழித்துக்கொண்டு 'எனக்குப் புரிவில்லையே' என்று கூற, அமெரிக்கப் பெண்மணி 'என் கணவர் உங்கள் கணவரிடம் பேச விரும்புகிறார்' என்றார். உடன் ராபர்ட்டை அழைத்தாள் டிசௌஸா.

ராபர்ட்டிடம் அமெரிக்கப் பெண்மணியின் கணவர் 'என் பெயர் ரயன் ஹாலிபர்டன், நான் நியூ ஆர்லியன்ஸில் வசிக்கிறேன். கட்றீனாவால் பாதிக்கப்பட்டவன்' என்று தொடங்கி, 'நீங்கள் அனுப்பி வைத்த தொகை கடவுளால் உங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. அரசாங்க உதவி கிடைப்பது அரிதாக இருக்கும் இவ்வேளையில், என் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையாக நீங்கள் அனுப்பி வைத்தது மிகவும் ஒரு சமயோசிதமான பரிசு' என்றார்.

ராபர்ட் 'இவருக்கு எப்படி என் பெயர் தெரிந்தது? நாம் பெயர் கூறாமல்தானே அனுப்பி வைத்தோம்' என வியந்தான். அதைப் பற்றி ராபர்ட் கேட்டபோது, அவரோ 'நீங்கள் மிக கவனமாக கொடுத்தவர் யாரெனத் தெரியாமலிருக்க, உங்கள் வங்கியிலிருந்து காஷியர் செக் அனுப்பி, லெட்டர் உறையின் மேல் உங்கள் முகவரி எழுதாமலிருந்தும், நீங்கள் 'certified mail' அனுப்பியதால், என் மனைவி முன் யோசனையுடன், நேற்று அதை வாங்கி அதில் கையெழுத்துப் போடும்போது உங்கள் முகவரியை மனதில் பதிவு செய்து கொண்டாள். பிறகு உங்கள் தொலைபேசி டிரெக்டரியில் இருந்ததால், சுலபமாக உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விட்டோம். நாங்கள் உங்களைக் கூப்பிட்டதால் ஏதேனும் சிரமம் இருந்தால், மன்னித்துக் கொள்ளவும்' என்றார்.

ராபர்ட் 'நான் அனுப்பியது 16ம் தேதி, இப்போதுதானா கிடைத்து? கிறிஸ்மஸ் ரஷ்ஷினாலோ?' என்றான். அதற்கு அவர் 'அதுவும் ஒரு காரணம்தான், அது மட்டுமல்ல, இங்கு எல்லாம் இன்னும் பழைய நிலைமைக்கு வரவில்லை' என்றார். தனது சோகக்கதையை அவர் கிறிஸ்மஸ் அன்று ராபர்ட்டின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் என்பதால் சொல்லத் தயங்கினார். அவரிடம் அவனே கேட்டு அறிந்தான். ராபர்ட், காட்ரீனா பாதிப்பு அடைந்தவரிடம் பேசியதை இன்னொரு தொலைபேசியிலிருந்து கேட்ட அவன் மனைவிக்கு உடம்பெல்லாம் புல்லரித்து. கண்களில் கண்ணீர் வந்தது. ராபர்ட் சில நாட்களுக்கு முன்பு கட்ரீனாவினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கூகிளில் தேடியபோது, 2000 டாலர்களை அனுப்ப மறுத்த போது, ராபர்ட் தன்னை உணர வைத்தது எவ்வளவு நன்மையில் முடிந்ததென நினைத்தாள்.

தன் குழந்தைகளின் மாண்டிரியால் பயணத்துக்கு சர்ச்சில் பணம் கட்ட முடியாமல் போனாலும், ஒரு குடும்பத்தின் குழந்தைகளின் கல்விக்கு அப்பணம் உதவியது என நினைத்தபோது மனமகிழ்ந்தாள்.

டிசம்பர் 14ந்தேதி ராபர்ட் அப்படி என்னதான் ஒரு வாகனத்தின் பம்பரில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்தான்? அவ்வாசகம் இதுதான் 'Practice random kindness and senseless acts of beauty'. அவன் தமிழ்ப் பாடத்தில் அவ்வளவு தேர்ச்சி பெற்றவன் இல்லையென்றாலும், தமிழ் ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்குமுன், சொன்னதும் செய்ததும் அவனால் மறக்க இயலவில்லை. 'நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க; மனம் ஒரு குரங்கு, அதனால்தான் இன்னே செய்ய வேண்டும்' என்று கூறிவிட்டு, 'இன்று எனது வகுப்பில் ஒருவராவது என்ன நல்லது செய்தீர்கள்?' என ஒரு மாணவரையாவது கேட்டுவிட்டுத் தான் பாடம் தொடங்குவார். அதனால்தான், அவன் மனது மாறுவதற்கு முன் 16ம் தேதியே வங்கியில் காஷியர் காசோலை வாங்கி தபால் அலுவலகம் சென்று certified mailல் அனுப்பிவிட்டான்.

உமா அருண்

© TamilOnline.com