சென்னை சங்கமம்
'சென்னை சங்கமம்' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் பிப்ரவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்றன. தமிழ் வளர்ச்சி மையமும் தமிழக அரசின் சுற்றுலா-பண்பாட்டுத்துறையும் இணைந்து இவ்விழாவை நடத்தின. மக்கள் மறந்த பாரம்பரியக் கலைகளை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கிற முயற்சியே 'சென்னை சங்கமம்' எனக் கூறப்பட்டது.

பிப்ரவரி 20ம் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் விழாவைத் துவக்கி வைத்தார். அன்று கிராமிய கலை, பாடல்கள், நடனங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான கனிமொழி வரவேற்புரை நல்கினார்.

முதல்வர் தனது உரையில் கனிமொழியைத் தனது இலக்கிய வாரிசாக அறிவித்தார். இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் கஸ்பர்ராஜ் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவ்வளாகத்தில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, டூரிங் டாக்கீஸ் எனப்படும் கிராம சினிமா கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சிறு படங்கள் காட்டப்பட்டன. தவிரப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றன.

சென்னையின் முக்கிய இடங்களான சென்டல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எக்மோர் ரயில் நிலையம், பிரபல பூங்காக்கள், ஓட்டல்கள், பள்ளிக்கூடங்கள் என்று சுமார் 60 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது முற்றிலும் புதுமையாக இருந்தது.

காலை 6 மணிக்கே சென்னைப் பூங்காக்கள் கர்நாடக இசையினால் நிரம்பி வழிந்தன. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, ஓ.எஸ். அருண், சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் என்று பிரபலங்களின் இசைவெள்ளத்தில் மக்கள் முழுகினார்கள்.

காலை 10 மணிக்கு மேல் சென்னை மாநகரப் பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடல்களைப் பாடிய வண்ணமும், வாத்தியங்களை வாசித்த வண்ணமும் ஊர்வலமாக வந்த காட்சிகள் அற்புதம்.

மாலை ஆறு மணிக்கு வெலிங்டன் சீமாட்டி திடலில் உள்ள 'நெய்தல் சங்கம'த்தில் தப்பாட்டம், கணியன் கூத்து, கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்காகப் பிலிம்சேம்பர் அரங்கில் 'தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி தினமும் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பிரபல கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சகர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.

சுமார் 1400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேல் விழாக்களில் பங்கேற்றனர். இனிவரும் ஆண்டுகளில் பொங்கல் திருநாளை ஒட்டி 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகள் நடக்கும்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கனிமொழி, 'இனிவரும் காலங்களில் சென்னை சங்கமத்தில் பங்குபெறும் சிறந்த 30 கலைஞர்களை தேர்வுசெய்து சென்னையில் நிரந்தரமாகப் பாரம்பரியக் கலைகளை விளக்கும் ஒரு மன்றத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழாவை மக்களே தங்கள் இல்ல விழாவாக மாற்றிக் கொண்டாடுகின்ற வகையில் வழங்க இருக்கிறோம்' என்றார்.

அசோக் லேலண்ட், ரிலையன்ஸ், டிவிஎஸ், நல்லி, ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com