சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 16
இரண்டு பந்துகள்

குழந்தைகளே, நல்லா இருக்கீங்களா? வாங்க ஒரு கதை சொல்றேன்.

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் தன்னிடம் கடன் வாங்கும் ஏழைகளை ஏமாற்றி, அவர்களது சொத்தைப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள், தன்னிடம் வாங்கிய கடனுக்காக ஏழை ஒருவனின் வீட்டை எழுதி வாங்கத் திட்டமிட்டான். ஏழைக்கு இருந்தது அந்த ஒரு வீடுதான். அதுவும் மூதாதையர் சொத்து. எனவே ஏழை, அந்த ஊர் நீதிபதியிடம் முறையிட்டான்.

ஏழை தன்னிடம் வாங்கிய கடன் மிக அதிகம் என்றும், அதற்கு அந்த வீடுகூட ஈடாகாது என்றும் பணக்காரன் நீதிபதியிடம் பொய் கூறினான். ஏழை அதை மறுத்தான். எப்படியாவது வீட்டை அபகரித்துக் கொள்ள நினைத்த பணக்காரன், ஒரு திட்டத்தைக் கூறினான். தன்னிடம் உள்ள ஜாடியில் ஒரு வெள்ளைப் பந்தையும் ஒரு கறுப்புப் பந்தையும் போடுவதாகக் கூறினான். கறுப்புப் பந்தை ஏழை எடுத்தால் அவன் கடனைத் தள்ளுபடி செய்து விடுவதுடன் அதே அளவுத் தொகையை நஷ்ட ஈடாகத் தந்து விடுவதாகவும், மாறாக வெள்ளைப் பந்தை எடுத்தால் வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் கூறினான். நீதிபதியும் அதற்குச் சம்மதித்தார்.

பணக்காரனும் இரண்டு பந்துகளைக் காட்டினான். பார்ப்பதற்கு ஒன்று கறுப்பு மற்றொன்று வெள்ளையாக இருந்தது. உண்மையில் இரண்டுமே வெள்ளைப் பந்துகள்தாம். ஒன்றிற்கு நீரில் கரையும் கறுப்புச் சாயம் பூசியிருந்தான். நீர் நிறைந்த ஜாடிக்குள் அந்தப் பந்தை இட்டுச் சிறிது நேரம் கழித்து எடுத்தால் அதன் சாயம் போய் வெள்ளையாகி விடும். எந்தப் பந்தை எடுத்தாலும் அது வெள்ளையாகத்தான் இருக்கும்.

பந்துகளை நீர் நிறைந்த ஜாடிக்குள் போட்டு ஜாடியை நன்றாகக் குலுக்கினான். பின்னர் ஏழையிடம் ஏதாவது ஒரு பந்தை எடுக்குமாறு கூறினான். ஏழை மிகுந்த புத்திசாலி. பணக்காரனின் தந்திரத்தை அறிந்து கொண்டு விட்டிருந்தான். தன் பேரன் ஒரு பந்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியைக் கேட்டுக் கொண்டான். நீதிபதியும் சம்மதிக்க, பேரன் ஜாடிக்குள் கையை விட்டான். பந்தை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அதை அருகிலுள்ள ஆற்றுக்குள் வீசிவிட்டான். பந்து காணாமல் போனது.

ஏழை, நீதிபதியிடம், ‘சிறுவன் எடுத்தது எந்த நிறப்பந்து என்று புரியாமல் தானே திகைக்கிறீர்கள்! ஜாடிக்குள் என்ன நிறமுள்ள பந்து இருக்கிறது என்று பார்த்தால் பிரச்சனை தீர்ந்து விடும். அவன் எடுத்து வீசியது மற்றொரு நிறப் பந்து தானே' என்றான். நீதிபதி ஜாடியில் இருந்து எடுத்தபோது வெள்ளைப் பந்து வெளி வந்தது. 'சிறுவன் எடுத்தது கறுப்புப் பந்துதான். அவன் கடன் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது' என்று தீர்ப்புக் கூறினார் நீதிபதி. ஏமாற்ற நினைத்து ஏமாந்துபோனதை உணர்ந்த பணக்காரன், வேறு வழியில்லாமல் கடனைத் தள்ளுபடி செய்ததுடன் சம அளவு பணத்தையும் ஏழைக்குக் கொடுத்தான்.

அடுத்த மாதம் சந்திக்கலாம். எல்லோரும் சந்தோஷமா இருங்க.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com