ஒரு தாயின் பார்வையுடன் அணுகுங்கள்
அன்புள்ள சிநேகிதியே...

என்னுடைய நாத்தனாரின் பெண் இங்கே படிக்க வந்திருக்கிறாள். எங்களுடன்தான் ஆறு மாதமாகத் தங்கியிருக்கிறாள். ஊரில் வியாபாரம் அவர்களுக்கு. நல்ல வசதி. இங்கே undergraduate படிக்க அனுப்பிவிட்டார்கள். 3 மாதம் dormல் இருந்து விட்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தெரியாமல் எங்களுடன் வந்து தங்கிவிட்டாள். எங்கள் பெண்ணின் காரை (அவள் வெகு தூரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருக்கிறாள். ஒரு வயது பெரியவள்) என் கணவர் உபயோகப்படுத்திக் கொள்ளச் சொல்லி ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுத்துவிட்டார். அவருக்கு ஒரே தங்கை. மிகவும் பாசம். செல்லம். அந்த அம்மாவின் பெண்ணும் அப்படியே இருக்கிறாள்.

எத்தனை தடவை சொன்னாலும் தட்டைக் கூட எடுத்து அங்கணத்தில் போடமாட்டாள். படுக்கையைச் சீர் செய்யமாட்டாள். கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுகிறாள். எங்கள் பையனும் சரி, பெண்ணும் சரி எங்கள் சொல்லைச் சிறிதாவது கேட்பார்கள். அதுவும் எனக்கு ஷிப்ட் டூட்டி. அதைப் புரிந்து கொண்டு தங்களுக்கு வேண்டியதைத் தாங்களே செய்துகொண்டு போய்விடுவார்கள். இந்தப் பெண் தன் ஊரில் எல்லா வேலையும் பிறர் செய்ய சொகுசாக வளர்ந்துவிட்டாள். ஆனால் இங்கு வந்து எல்லோரும் கற்றுக் கொள்கிறார்களே? தன் துணியைக் கூட வாஷரில் போட்டுத் தானே மடித்து வைப்பதில்லை. ஒன்று போன் இல்லையேல் கார். இவரும் சொல்லிப் பார்த்து விட்டார். எனக்கு இதற்கு மேல் தாங்கவில்லை.

##Caption##அடுத்த வாரம் இந்தியா போகிறாள். திரும்பி வரும்போது dormலேயே இருக்கச் சொல்லி இவரிடம் சொல்கிறேன். ஆனால் இவர் தங்கைக்கு பயப்படுகிறார். இரண்டாவது 'நம் எதிரிலேயே நாம் சொல்வதை கேட்காமல் ஊர் சுற்றுகிறாள். மறுபடியும் டார்முக்குப் போனால் இன்னும் படிக்காமல், வேறு கெட்ட பழக்கம் வந்தால் நாம் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஒரு வருடம் அட்ஜஸ்ட் செய்துகொள்வோம். அப்புறம் பார்க்கலாம்' என்று சொல்லுகிறார். ஆனால் நான் அவள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எப்படி இதை டீல் செய்வது. இந்த கடிதத்தை இந்த மாதத்திற்குள் வெளியிட முடிந்தால் செய்யவும். இல்லாவிட்டால் வேண்டாம். நன்றி.

அன்புள்ள சிநேகிதியே...

உங்கள் நாத்தனாருடன் உங்கள் உறவுமுறை எப்படியிருக்கிறது? அதிலே கொஞ்சம் தோழமை இருந்தால் நீங்கள் அவரிடமே இதைப்பற்றிப் பேசி, குறையாகச் சொல்லாமல், டீன்ஏஜ் பெண்களின் குணாதிசயங்கள் புரிந்து கொண்டிருக்கிற தாயாகப் பேசும் போது அந்தப் பெண் மாறுகிறாளோ இல்லையோ, அந்தத் தாய் உங்களை குறை சொல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

அந்தப் பெண்ணுடன் உங்களுடைய உறவு முறை எப்படி? உங்கள் கணவருடைய தங்கை மகள்--வேறு வழியில்லை என்று வைத்துக் கொண்டீர்களா? இல்லை 'என் பெண்ணைப் போல இன்னொரு பெண். ஆனால் இந்தியாவில் வேறு வழியில் வளர்ந்து வந்திருக்கிறாள். ஈடு கொடுப்பது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் நம் வீட்டுப் பெண் தானே' என்று ஆதரவாக இருந்திருக்கிறீர்களா என்பது புரியவில்லை. இரண்டாவது வகை நிறைய பேருக்கு சவாலாகத்தான் இருக்கும். என்னுடைய அனுபவத்தில் எல்லா டீன்ஏஜ் குழந்தைகளும் வீட்டு வேலை என்றாலே முகத்தைச் சுளிக்கும். எப்போதும் மனமும், உடம்பும் பறந்து கொண்டே இருக்கத்தான் விழையும். ஆனால் அந்தப் பெண் பாசத்துடன் அவ்வப்போது உங்களைக் கட்டிக்கொண்டாலோ இன்னும் பரபரக்கத் தன் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலோ அங்கே குழந்தைத்தனமும் அனுபவமின்மையும் தெரிகின்றன. ஆனால் indifferent இருந்தால் யார், எங்கே, எப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தால் 'நிம்மதி' கிடைக்கும் என்ற விவரமாவது புரியும்.

என்னுடைய கருத்தில் அந்தப் பெண்ணே இந்த புதிய உலகம் புரியப் புரிய, பழகப் பழக தன்னுடைய privacyக்காக வெளியில் போய்த் தங்கிவிடுவாள். உங்கள் மனதுக்குப் பிடிக்காமல் உங்கள் கணவரின் வற்புறுத்தலால் மறுபடியும் அந்தப் பெண் திரும்பி வந்தால், அந்த ஒட்டாத மனதிலிருந்து சுடும் வார்த்தைகள்தான் அவ்வப்போது கட்டாயம் வரும். இல்லை நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்க மறுத்தால், இவ்வளவு நாள் அதாவது 6 மாதம் (24 மணி நேரம் x 180 நாட்கள்) நீங்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மை, பொறுமை, உழைப்பு எல்லாம் வினாடியில் மறைந்து, பல வகையில் உறவுகள் பழுதாக வாய்ப்பு இருக்கிறது.

When a probleum cannot be cured, it has to be endured. கொஞ்சம் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு, ஒரு தாயின் பார்வையுடன் இந்த பிரச்சனையை அணுக முடியுமா? அன்பை உணரும்போது அடியை அந்தப் பெண் தாங்கிக்கொள்ள (அதாவது, நீங்கள் சொல்லும்போது) உடன்படுவாள். என்னிடம் கேட்டதால் எழுதுகிறேன். வேறு வழிகள் உங்களுக்கே தெரியும்.

வாழ்த்துக்கள்

சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com