லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
மே 18, 2008 அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீனத் தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டுத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருமுறை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளும் நடாத்தி வருகிறார். அவர் தன்னுடைய ஏற்புரையில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்குத் தெரியவருவதில்லை என்றும், இந்தக்குறை எதிர்காலத்தில் நீங்கித் தமிழின் புகழ் உலகளாவும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் 'யாமம்' நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' நூலுக்காக நாஞ்சில் நாடனுக்கும், கவிதைப் பிரிவில் 'தொலைவில்' கவிதைத் தொகுப்புக்காக வாசுதேவனுக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்பச் சாதனைக்காக முனைவர் கே.கல்யாணசுந்தரத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

அ.முத்துலிங்கம், கனடா

© TamilOnline.com