எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது
வருமான வரி ஏய்ப்புக்காக மட்டுமே புதிய கட்சிகள் தொடங்கப்படுகின்றன. காரில் செல்லும்போது எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது.
க. திருநாவுக்கரசர், பா.ஜ.க தேசிய செயலாளர்

******


தமிழ்நாட்டில் பதினொன்றோ பன்னிரண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றன. எனக்குத் தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கின. நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக்கழக செனட்டுக்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றிச் சிந்திக்கின்ற, சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா?
நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

******


அதிகாலையில் எழுந்து சிறந்த முறையில் உழைத்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம் என்பதற்கு நானே உதாரணம். இதை வெறும் ஜம்பத்துக்காகச் சொல்லவில்லை. இளைஞர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கூறுகிறேன்.
மு. கருணாநிதி

******


மனிதர்கள் இல்லாத காட்சி அர்த்தமற்றது. மனிதன் மீதும், அவனது வாழ்க்கையின் மீதும் அக்கறை இல்லாதவன் படைப்பாளி என்ற பெயருக்குத் தகுதியற்றவன். அழகு மட்டுமே வாழ்க்கை இல்லை.
பாலுமகேந்திரா, திரைப்பட இயக்குநர்

******


800 மில்லியன் இந்திய மக்கள் இராமர் பாலத்தைக் கட்டியது இராமர்தான் என்று நம்புகிறார்கள். கடவுளான இராமர் இருந்தாரா அல்லது அவர்தான் அந்த பாலத்தைக் கட்டினாரா என்ற பிரச்சனைக்குள் நீதி மன்றம் நுழைய முடியுமா? இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள். அவைகளை நீதிமன்றங்களோ அல்லது அரசுகளோ விசாரிக்க முடியாது.
கே.கே. வேணுகோபால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

******


தமிழ்நாடு ஒளிர்கிறது. ஆனால், தமிழர்கள் ஒளிரவில்லை. 28 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இவர்கள் தினமும் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகின்றனர். இலவசம் என்னும் நிலை தொடரக்கூடாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி, தரமான கல்வி, கட்டணமில்லாத கல்வி, தொழிற்கல்வியைக் கொண்டுவர அரசு முன்வரவேண்டும்.
டாக்டர் ராமதாஸ்

******


காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடைக்காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக்கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக்கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னையில் பாதி இல்லாமல் போய்விடும். கடலூரில் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்கும் அளவுக்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை.
நம்மாழ்வார், இயற்கை விஞ்ஞானி

******


1998 மார்ச்சில் பதவி ஏற்ற ஒரு வாரத்துக்குள் அணுகுண்டு சோதனை நடத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எங்களுக்கு அனுமதி அளித்தார். இந்தியாவின் திறமையை வெளிகாட்டவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் வாஜ்பாயின் துணிவு பாராட்டுக்குரியது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

******


இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு இறப்புகள் புகையிலை, மது, வெட்டித்தீனியின் (ஜங்க் புட்) பாதிப்பால் நிகழ்கிறது. நாட்டின் அறுபது கோடி இளைஞர்களைக் காப்பாற்றுவது என் கடமை.
அன்புமணி ராமதாஸ்

******


'சாதாரணமான தலைப்பு' என்ற கோட்பாட்டில் சுந்தர ராமசாமிக்கு அபார நம்பிக்கை உண்டு. 'ஒரு புளிய மரத்தின் கதை', 'ஜே.ஜே. சில குறிப்புகள்' எல்லாம் சாதாரணமான தலைப்புகளே. 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' தலைப்பை என்னிடம் சொன்னபோது நான் அதை எதிர்த்தேன். ஆனால் சொல்லிச் சொல்லி அது நிலைபெற்று விடும் என்றார் சுந்தரராமசாமி. அதுவே நிகழ்ந்தது. ஆனால் இது நாவல்களுக்குத்தான். சிறுகதைகளுக்கு அல்ல. சுந்தர ராமசாமியின் பல சிறுகதைத் தலைப்புகள் நினைவிலேயே நிற்பதில்லை.
ஜெயமோகன், எழுத்தாளர்

அரவிந்த்

© TamilOnline.com