யார் இவர்?
குறும்புக்குப் பெயர் போனவன் அந்தச் சிறுவன். அது மட்டுமா? எதற்கும் அஞ்சாதவன்கூட. அவனைக் கண்டால் எல்லோருக்குமே சற்று பயம்தான். அவனுடைய பெரியம்மா அன்று ஊரிலிருந்து வந்திருந்தார். ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்திருந்தார். பெரியம்மாவைக் கண்டதும் எல்லாக் குழந்தைகளும் ஆவலுடன் சூழ்ந்து கொண்டனர். பெரியம்மாவும் அவர்களை ஆசையாக நலம் விசாரித்தவாறே தன் கையிலுள்ள வாழைப்பழங்களை ஆளுக்கு ஒன்றாகப் பிய்த்துக் கொடுத்தார். மற்ற பிள்ளைகளை விட மூத்த பிள்ளை மீது அந்த அம்மாவுக்குப் பிரியம் அதிகம். அவனுக்குக் கூடுதலாக சில பழங்களைத் தர எண்ணினார். ஆனால் மற்றப் பிள்ளைகளின் முன்னால் கொடுத்தால் அவர்களும் பங்கு கேட்பார்களே என்று யோசித்தார். எஞ்சிய பழங்களை எல்லாம் உள்ளறையில் வைத்துவிட்டு, மூத்த பிள்ளை மட்டும் புரிந்து கொள்ளுமாறு, 'யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சாப்பிடு' என்று சைகை செய்தார்.

பெரியம்மா செய்த சைகையை மூத்த பிள்ளையால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறும்புக்காரச் சிறுவன் புரிந்து கொண்டுவிட்டான். யாரும் பார்க்காத நேரத்தில் அந்த அறைக்குள் புகுந்து பழங்களைத் தின்றுவிட்டான். பழத்தோல்களை கீழே போட்டுவிட்டுச் சத்தமில்லாமல் வெளியேறினான்.

##Caption##சற்று நேரம் சென்றது. பெரியம்மா மூத்த பிள்ளையைக் கூப்பிட்டு, பழங்களைத் தின்றானா என்று விசாரித்தார். அவனோ தான் பழங்களைத் தின்னவேயில்லை என்று கூறவே, 'சீக்கிரம் போ. வேறு யாராவது தின்றுவிடப் போகிறார்கள்' என்று கூறி அனுப்பினார். ஆவலுடன் அறைக்குள் நுழைந்த சிறுவன் திடுக்கிட்டான். அங்கே வெறும் தோல்கள்தான் கிடந்தன. மூத்த பிள்ளை பெரியம்மாவிடம் புகார் செய்தான். பையன்கள் அனைவரையும் கூப்பிட்டு விசாரித்தார் பெரியம்மா. அனைவருமே நாங்கள் யாரும் பழத்தை எடுத்துத் தின்னவே இல்லை யென்று சாதித்தனர். கடைசியில் சந்தேகம் அந்தக் குறும்புக்காரச் சிறுவன் மீதே திரும்பியது. தந்தையிடம் புகார் கூறினர்.

தந்தை மிகவும் கண்டிப்பானவர், கோபக்காரர். அவனுக்கு அன்று நல்ல உதை விழும் என்று எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் வேகமாக வந்து, தந்தையை வணங்கினான். ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்தான். அவர், அவன் தந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தார். படித்தார். வியந்தார். பையனைக் கட்டிக் கொண்டு பாராட்டினார். அந்தக் குறும்புக்காரச் சிறுவனோ கம்பீரமாக, தலையை நிமிர்த்த்தியபடி வெளியே சென்றான். மற்றச் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உதை விழும் என்று எதிர்பார்த்தால் இங்கு பாராட்டு அல்லவா கிடைக்கிறது! அவன், தன் தந்தையிடம் கையளித்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார்கள். அதில் நடந்த சம்பவம் முழுவதையும் ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருந்தான் அந்தச் சிறுவன். அதன் சிறப்பையும், மொழிநடையையும் கண்ட சக சிறுவர்கள் வியந்தனர். நடந்த சம்பவத்தை மறந்து அவனைப் பாராட்டினர்.

இளமையிலேயே இவ்வாறு கவியியற்றும் ஆற்றல் மிக்க அவன், வளர்ந்து வாலிபனான பொழுது தன் கவிதைகளால் விழிப்புணர்ச்சியைத் தூண்டினான்.

அரவிந்த்

அவன் யார்?

விடை

© TamilOnline.com