தென்றல் பேசுகிறது...
மார்ச் மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் மாதம். நமக்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளில் நடக்கிறது. அண்மையில் இலங்கையை வெற்றிகண்ட உற்சாகத்தில் பங்கேற்கிறது இந்திய அணி. திரும்பி வந்த சௌரவ் காங்குலி, டெண்டுல்கர், தோனி எல்லோருமே நல்ல வடிவத்தில் உள்ளனர். 'சபாஷ், சரியான போட்டி' என்று சொல்லும்படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணிக்கு நமது வாழ்த்துகள்.

டிவி சேனல்கள், இணையம் ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு நமக்கு இதைக் கொண்டுவருவது ரசிகர்களுக்கு நல்ல செய்தி. இந்த வாய்ப்பை அமெரிக்கக் கிரிக்கெட் சங்கம் (www.usaca.org) பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் வருந்தத் தக்கது. இன்னும் வளர்ச்சிப் பருவத்தில் இருக்கும் இந்த அமைப்பில் பதவிப் போட்டிகளும், தமக்கேற்பச் சங்கத்தின் சட்டதிட்டங்களைத் திருத்தி எழுதிக்கொள்வதுமாக இருக்கிறது. அதிகப் பேர் ஆர்வம் காட்டிப் பங்குகொண்டால், நல்ல மாற்றங்கள் வரும். அமைப்பு வலுவடையும்.

அல்-கய்தா விஷயத்தில் பாகிஸ்தான் போதிய அளவு செயல்படவில்லை. இது தொடர்ந்தால் அந்நாட்டுக்குத் தரப்படும் பல சலுகைகளும் நிதி உதவிகளும் குறைக்கப்படும் என்று புஷ் அரசு கருதுவதாகக் செய்திக் கசிவுகள் சொல்கின்றன. 'சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' வெடிகுண்டு சம்பவத்திலும் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானிகளே. இனியாவது பாகிஸ்தான் வன்முறையை ஆதரிப்பதையும் தூண்டுவதையும் துணைபோவதையும் நிறுத்த வேண்டும். அதற்கான தூண்டுகோலாக புஷ் அரசு செயல்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை, தமிழகம் 'அமைதிப் பூங்கா' என்ற பெயருக்குத் தகுதியிழந்து விட்டதோ என்று அச்சப்பட வைக்கிறது. அரசியல் எதிரிகளை இல்லாதாக்குவது நாகரிக உலகத்துக்கு ஒவ்வாதது. கருத்துகள் மோதலாம், கத்தி வீச்சு சரியல்ல. இதற்கெல்லாம் காரணம், அரசியல் மிகப்பெரிய வருமானம் தரும் தொழிலாகிவிட்டதுதான். இனியும் அது சேவையல்ல. தொழில் துறையில் பெரிய வளர்ச்சி கண்டு வருவதால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் வியக்கத்தக்கதாகவே உள்ளது. ஆனால் செல்வம் அத்துடன் பல பிரச்னைகளையும் கொண்டு வருகிறது. 'மா·பியா' எனப்படும் குற்றக் குழுக்கள் அதில் ஒன்று. அவை அரசியல் வாதிகளின் மறைமுக ஆதரவோடு செழிப்பவை.

ஒழுக்கத்தையும், தேசபக்தியையும் அரசியல்வாதிகளுக்கு யார் சொல்லிக்கொடுப்பது!

டென்னஸியில் வாழும் தமிழ் மக்கள் டென்னஸி தமிழ்ச் சங்கத்தை அமைத்துள்ளனர் என்று அறிகிறோம். அவர்களைத் தென்றல் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


மார்ச் 2007

© TamilOnline.com