சந்தோஷ் சிவனின் Before the Rains
பிரபல தமிழ் இயக்குனர் சந்தோஷ் சிவனின் முதல் ஆங்கிலப் படமான 'Before the Rains' அமெரிக்காவில் மே 9, 2008 அன்று வெளியாயிற்று. ராஹுல் போஸ், நந்திதா தாஸ், லைனஸ் ரோச் (Law & Order புகழ்), இரண்டு முறை டோனி விருது வென்றுள்ள நடிகை ஜென்னிபர் எஹ்லே ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஓர் இஸ்ரேலியக் குறும்படத்தின் தாக்கத்தால் உருவான இந்தப் படத்தின் கதை கேரளத்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. 1930களில் தேசிய இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது.தனது ஆங்கிலேய எஜமானருக்கும் (லைனஸ் ரோச்) கிராமத்து இளம்பெண்ணுக்கும் (நந்திதா தாஸ்) இடையே ஏற்பட்ட உறவில் சிக்கித் தவிக்கும் இளைஞராக வருகிறார் ராஹுல் போஸ்.

2002ஆம் ஆண்டில் டக் மங்காஃப், ஆன்டி ஸ்பால்டிங் இருவரும் ஆங்கிலப் படங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டவரைத் தேடத் தொடங்கினர். பிரபல இயக்குனர் சேகர் கபூரின் பரிந்துரையில் சந்தோஷ் சிவனின் 'The Terrorist'ஐப் பார்த்தவுடனேயே அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று. அப்படித் தொடங்கியதுதான் இந்தப் படம். மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கேதி ரேபின் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். ஸ்டீவன் கோஹன் படத்தொகுப்புச் செய்துள்ளார். இசை மார்க் கிலியன். டொரான்டோ , தி ட்ரிபெகா, தி பூசன், லாஸ் ஏஞ்சலஸ் இந்தியத் திரைப்பட விழா ஆகிய விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

எக்கோ லேக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பான இந்தப் படத்தை மெர்ச்சன்ட் ஐவரி, அடிராண்டக் பிக்சர்ஸ், எக்ஸ்காலிபர் பிக்சர்ஸ், சந்தோஷ் சிவன் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com