ஹைப்பர்பாராதைராய்டிஸம்
நமது உடலில் இருக்கும் கேல்சியத்தின் (Calcium) அளவு பாராதைராய்டு (Parathyroid) எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நாளமில்லாச் சுரப்பி பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஹைப்பர்பாராதைராய்டிஸம் (Hyperparathyroidism) என்ற நோயைப் பற்றி இப்போது காணலாம். உங்களில் பலர் தைராயிடு சுரப்பி பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தச் சுரப்பியின் அடுத்த வீட்டு நண்பராய் நமது கழுத்துப் பகுதியில் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் சிறிய பட்டாணி அளவில் அமைந்துள்ளன. இந்தச் சுரப்பிகள் பாராதைராய்டு நிணநீர் மூலம் உடலின் கேல்சியம் அளவைச் சரியாக வைக்க வேலை செய்கின்றன.

உடலில் கேல்சியம் அளவு குறைந்தால், இந்த நாளமில்லா சுரப்பிகள் அதிகமாக நிணநீரைச் சுரந்து கேல்சியத்தை எலும்புகளில் இருந்து ரத்தத்த்துக்கு எடுத்துச் செல்கின்றன. இந்த நிணநீரின் பெயர் PTH என்பதாகும். ஆனால் ஒரு சிலருக்கு இந்தச் சுரப்பிகள் தாமாகவே அதிக அளவில் PTH உற்பத்தி செய்வதால் உடலில் கேல்சியத்தின் அளவு கூடுதலாகும் வாய்ப்புள்ளது. இதைத் தான் Hyperparathyroidism என்று சொல்வர்.

நோயின் அறிகுறிகள்

பெரும்பாலானவர்களுக்கு இந்த நோயினால் அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை. ரத்தத்தில் கேல்சியம் அளவு பார்க்கும்போது கூடுதலாக இருந்தால் மட்டுமே நோய் இருப்பது தெரியவருகிறது.

சிலருக்குச் சில அறிகுறிகள் ஏற்படலாம்.

* கை கால், எலும்புகள் வலி
* அதிக தாகம் எடுத்தல்
* அதிகமாகச் சிறுநீர் கழித்தல்
* சிறுநீரகக் கல் வயிற்று வலி
* வாந்தி அல்லது பசி குறைதல்
* எலும்பு முறிவு அல்லது osteoporosis ஏற்படுதல்.

இந்த அறிகுறிகளும் வெவ்வேறு அளவில் ஏற்படலாம்.

##Caption## Hyperparathyroidism

இது முதன்மையாக நாளமில்லா சுரப்பியில் கோளாறு ஏற்பட்டால் உருவாகலாம். இது பிரைமரி ஹைப்பர்பாராதைராய்டிஸம் (primary Hyperparathyroidism) என்று அழைக்கப்படுகிறது. அல்லது சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் ஏற்படலாம். இது செகண்டரி ஹைப்பர்பாராதைராய்டிஸம் என்று சொல்லப்படுகிறது. இவர்களது ரத்தத்தில் கேல்சியம் அளவு கூடுதலாகக் காணப்படும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆயிரத்தில் 2 நபருக்கு இந்த நோய் காணப்படலாம். பெண்களிடையே அதிகமாகக் காணப்படும். அறிகுறிகள் இல்லாததால் பலருக்கு இது இருப்பது தெரியாமலே போகலாம். குடும்பத்தில் பல நபர்களிடம் காணப்படலாம்.

இந்த நோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகப்பட்டால் செய்யக்கூடிய பரிசோதனைகள்

* இரத்தத்தில் கேல்சியம், PTH, வைடமின் D அளவுகள்
* 24 மணிநேர சிறுநீர் பரிசோதனை
* செஸ்டம்பி ஸ்கேன் (Sestamibi scan)
* எலும்பு அடர்த்தி ஸ்கேன் (bone density scan)
* எக்ஸ்-ரே

இந்தப் பரிசோதனைகள் மூலம் நாளமில்லாச் சுரப்பியில் வீக்கம் இருந்தால் கண்டறியப்படுகிறது. பெரும்பாலும் ஒரே ஒரு சுரப்பி பாதிக்கப்படுவதால் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

சிகிச்சை முறைகள்

கேல்சியம் அளவு சற்றே கூடுதலாகி, அறிகுறிகள் இல்லையெனில் சிகிச்சை ஏதும் தேவைப்படாது. அளவு அதிகமாகி, அறிகுறிகள் கூடுதலாக ஏற்படுமேயானால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும். தற்போதைய மருத்துவ வசதிகளில் மிகைக் குறைந்த உள்நுழைத்தல் (minimally invasive) முறையில் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த வகைச் சிகிச்சைக்குப் பின் ஒரே நாளில் நோயாளி வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அதற்குப் பிறகு கேல்சியத்தின் அளவு அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் செகண்டரி ஹைப்பர்பாராதைராய்டிஸம் மூலம் பாதிப்புகள் பல ஏற்படலாம். இவர்களுக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். இந்தச் சிகிச்சை செய்யாமல் போனால் எலும்புகள் பாதிக்கப்படலாம். மேலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். இந்த நோய் முதன்மை மருத்துவர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலும் endocrinologist மூலமாகவும் அறுவைமருத்துவர் மூலமாகவும் குணப்படுத்தப்படுகிறது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com