உண்மையை அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம்
அன்புள்ள சிநேகிதிக்கு...

என் தந்தை ஒரு காந்தீயவாதி. சத்தியம், நேர்மை என்று போராடியே வாழ்க்கையைக் கழித்தவர். சிறு வயதில் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்படியோ முன்னுக்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறோம். ஆனால் அதைப் பார்க்கத்தான் என் தந்தை இல்லை இருந்தாலும், அவருடைய விழுமியங்கள் (values) எங்கள் மனதில் என்றும் தங்கியிருக்கிறது. இவற்றை நானும் இப்போது என் குழந்தைகளுக்கும் போதித்துக் கொண்டு வருகிறேன்.

ஆனாலும், உறவுகளில் நிறையச் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. பிறரை அப்படியே நம்பி விடுகிறேன். அப்புறம் அவர்கள் என் முன்னால் சொல்லியது வேறு, பின்னால் செய்வது வேறு என்று நடக்கும்போது, யார் நண்பர், யார் எதிரி என்று தெரியாமல் குழம்புகிறேன். என்னுடைய கணவர் என்னிடம்தான் குறை கண்டுபிடிக்கிறார். 'இது போலி உலகம். நீயும் அப்படியே இருக்கக் கற்றுக் கொள்ளாமல், வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? Be a roman in Rome' என்கிறார்.

##Caption##கொஞ்சநாள் முன்னால் எனக்கு வருத்தம் தந்த ஒரு நிகழ்ச்சி. என் கணவருக்கு 2 சகோதரர்கள். ஒருவர் பெரியவர். ஒருவர் சின்னவர். நாங்கள் அமெரிக்கா வந்தபின் சின்னவரை அழைத்து வந்து படிக்க வைத்து அவர் ITயில் நன்றாக இருக்கிறார். மிகவும் நல்லவர். என்னிடம் நிறைய மதிப்பு வைத்திருக்கிறார். இரண்டு மாதம் முன்னால் சின்னவர் என்னிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் வேறு ஒரு ஜாதி, விவகாரத்து செய்தவள் -ஆனாலும் அவளைத் தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் சொன்னார். நான் என் கணவரிடம் பேசி, கன்வின்ஸ் செய்து அந்தப் பெண்ணைப் பார்த்து எங்கள் சம்மதத்தை தெரிவித்தோம். எல்லோரும் சந்தோஷமாக ஒரு இந்திய உணவுவிடுதியில் சாப்பிட்டு விட்டு, நிச்சயம் செய்த திருப்தியில் திரும்பி வந்தோம். ஒரு வாரம்தான் அந்த திருப்தி. பெரியவரின் மனைவி என்னை இந்தியாவிலிருந்து கூப்பிட்டு ஒரு கத்துக் கத்தினார்களே பார்க்க வேண்டும். நான் பணத்துக்குப் பேராசைப்பட்டு என் புருஷனைப் பிரித்து அமெரிக்கா வந்துவிட்டதாகவும், சின்னவரின் வாழ்க்கையைப் பாழ் செய்துவிட்டதாகவும் குற்றம் சொன்னார். 'இந்தத் திருமணம் நடக்கக் கூடாது. நடக்க விடமாட்டேன்' என்று சபதம் செய்தார். சின்னவரைக் கூப்பிட்டு அவரைக் கோபித்து, ஒரே கலவரம். நான் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டு போகலாம். அந்த அண்ணியின் அண்ணன் பெண்ணைப் பார்த்து வைத்திருந்ததாகவும், நான் தான் சதி செய்து சின்னவருக்கு ஏற்றி விட்டதாகவும், என் பெயரில் குற்றம் என்பது பிறகு தான் தெரிந்தது. நான் என்ன சொன்னாலும் நம்பவில்லை. 'நீ சொன்னால்தான் அவன் கேப்பான். இந்தப் பெண் எத்தனையோ ஆசைகளை வளர்த்து வைத்திருக்கிறது' என்று தினமும் நச்சரிப்பு.

பெரியவர், மாமியார், மாமா, அத்தை என்று எல்லாரிடமும் கெட்ட பெயர். நாம் நேர்மையாக இருப்பதால் எல்லோரும் ஏன் இப்படிப் பாய்கிறார்கள். என்னை ஏன் நம்ப மறுக்கிறார்கள்? உண்மைக்கு ஏன் இந்த மதிப்பின்மை?

அன்புள்ள சிநேகிதிக்கு...

உண்மை சுடும். உண்மை கசக்கும். எப்போதும் ஒரு கொள்கை என்று வைத்துக் கொண்டாலே, நிறைய சவால்களும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். அவைகள்தாம் அந்தக் கொள்கைக்கு உரம்.

'Perception' என்று ஒரு சொல் இருக்கிறது. நம்முடைய வார்த்தைகள், செய்கைகள் எல்லாவற்றையும் நாம் எதிர்பார்ப்பது போலவே பிறர் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்க முடியாது. அவரவர் கோணத்திலிருந்து தான் நம்மை எடை போடுவார்கள். நம்முடைய செய்கைகள் அவர்களுக்கு அனுகூலமாக இருந்தால், அங்கே பிரச்சனையே இல்லை. பாதிப்பு இருக்கும் போதுதான் பார்வை மாறுகிறது.

உண்மை என்ற பெயரில் நாம் வெளிப்படையாக நம் எண்ணங்களைப் பிறருக்குத் தெரிவித்து அவரை வருத்தப்பட வைப்பதை விட, உண்மையை வேறு வகையில் அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம். உண்மையைச் சந்திக்கும் தைரியம் வேண்டும். மனோதிடம் வேண்டும். நம்மில் நிறையப் பேருக்கு அந்தச் சக்தி இல்லை. அதற்காக, நம்முடைய கொள்கையை மாற்றிக்கொள்ள முடியுமா? நான் பல வருடங்களுக்கு முன் கற்றுக்கொண்ட பாடம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எனக்கு ஒரு sensitive friend. ஒரு புடவையை கட்டிக் கொண்டு வந்து 'எப்படி இருக்கிறேன்' என்று கேட்டாள். நான் 'இந்தக் கலர் எனக்குப் பிடிக்கவில்லை' என்று வெளிப்படையாகச் சொன்னேன். 'நீ இப்படித்தான். உன்னிடம் வந்து கேட்கிறேனே?' என்று மிகவும் வருத்தப்பட்டாள். இன்னொரு பிரண்ட் வந்தாள். 'எப்படி இருக்கிறேன்' என்று அதே கேள்வியை இவள் கேட்டாள். 'பரவாயில்லை. ஆனால் அன்றைக்குக் கல்லூரி விழாவில் கட்டிக் கொண்டிருந்தாயே, அதில் நீ இன்னும் அழகாக இருந்தாய்' என்று சொன்னாள். ஆக உண்மை ஒன்றுதான். வெளிப்படுத்தியதில் தான் வித்தியாசம்.

நீங்கள் எந்த வகையில் உண்மையை வெளிப்படுத்தினீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும், பிறருக்கு அனுகூலமாக இல்லை என்றால் கொஞ்சம் அடிதான் வாங்குவோம். அதனால் என்ன? நீங்கள் நீங்களாவே இருங்கள். சத்தியத்துக்கு மதிப்பு இல்லை என்று யார் சொன்னார்கள்? சத்தியமாக இருக்கிறது. இல்லாவிட்டால் தலைமுறை தலைமுறையாக (உங்கள் தந்தை, நீங்கள், உங்கள் குழந்தைகள்) ஏன் அதைப் போற்றிக்கொண்டு வருகிறீர்கள்?

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com