ஜூன் 2008: குறுக்கெழுத்துப் புதிர்
புதிர்களை உருவாக்கும்போது ஏதோ அவசரத்திற்குக் கிடைத்த சொல்லைக் கட்டத்திற்குள் எழுதி அதன்பின் அதற்கு உருப்படியான குறிப்பு எழுத முடியாமல் தடுமாறிவிடுவேன். அப்படித் தான் பல ஏனோதானோ குறிப்புகள் இடம்பெறுகின்றன. அதுபோல்தான் சென்ற மாதத்தில் "சின்னம்மா", என்று நினைத்தேன். ஆனால் கொஞ்ச நேரம் அச்சொல்லுடன் போராடியதில் "சிறிய= சின்ன", "பெரிய=மா" என்ற எதிரான பொருள்களைக்கொண்ட பகுதிகள் அடங்கியிருப்பது தெரிந்தது. அதனால் உங்களை எதிர்ப்புறம் திசை திருப்பலாம் என்று மிகப்பெரிய என்று தொடங்கி அக்குறிப்பை எழுதினேன். எனக்கு மிகவும் திருப்தியைத் தந்த குறிப்பு அது. ஆனால், வழக்கம்போல் புத்திசாலியான வாசகர்களான நீங்கள் அதில் சிக்காமல் சரியான விடையைக் கண்டுபிடுத்துவிட்டீர்கள். பெரிய காரியம்தான். இந்த அரும்பணியைப் பாராட்டி உங்களுக்கு இந்த வெண்பாவைச் சமர்ப்பிக்கிறேன்:

மொட்டைத் தலைக்கு முழங்கா லொடுமுடிச்
சிட்டிட முல்லையின் இன்மண மொட்டினைச்
சூடிவா வென்றால் சுகந்த வரும்பணிந்
தோடிவந் தீரே உணர்ந்து.

கோனார்: முடிச்சிட்டிட = முடிச்சு இட்டிட; சூடிவா வென்றால் = சூடிவா என்றால்; சுகந்த வரும்பணிதோடி = சுகந்த அரும்பணிந்து ஓடி;

vanchinathan@gmail.com

குறுக்காக
5. ஓர் எண்ணைச் சொல்வது அம்பலத்தில் ஏறாது (2)
6. விவரங்கள் குறைவான தோல் முதுமையைக் காட்டும் (6)
7. மராட்டியரிடையே தமிழ் பேசும் ஊர்ப் பெண் செழுமையில்லா வங்காளம் சேர்ந்தாள் (4)
8. தாரகைகள் மறையத் துயரங்கள் தொலையுங் காலம் (3)
9. கொடிக்கரை வேட்டிகள் அணி (3)
11. பெரியவர்களுக்கு மரியாதையாய் அடங்கியிருக்கும் இளம்பெண் (3)
13. இவருக்கு சுந்தரரோடு சம்பந்தம் உண்டு (4)
16. உறுதியாகக் கோலூன்றிய வாசல்படி நடனம் நிறைவடையவில்லை (6)
17. படு மட்டம்? (2)

நெடுக்காக
1. வரச் சொல்லி இழை நுனி அத்துமீறி வெளியே சென்றது (4)
2. பணம் வேண்டுமென்று காய்க்கடை முதலாளியிடம் காய்ந்த இஞ்சியாக வந்தார் (5)
3. அய்யராத்தில் உனக்குப் பார் (3)
4. சீனத் தலைவரிடம் சிக்கிச் செல்வத்தில் திளைப்பவள் (4)
10. நந்தியிருக்குமிடத்தில் ஆரோகணமாய் வாசி, தாள ஒழுங்கு சேர்ந்துவிடும் (5)
12. திருமலையால் செல்வமிழந்து சீரழிந்த ஒரு தொழிலதிபர் (4)
14. ஒரு நகை நத்தையோடில்லாதவர் (4)
15. ஒருவகைத் துணியை மணமாகக் கொள்ளலாம் (3)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூன் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஜூன் 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.


மே 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்


© TamilOnline.com