அரவணைப்பாள் அன்னை
கேரளத்தின் அழகான காயல்களால் சூழப்பட்ட பறயகடவு கிராமத்தில் உள்ளது இடமண்ணேல் இல்லம். இதில் வசித்துவந்த சுகுணானந்தன், தமயந்தி தம்பதிகளுக்கு செப்டம்பர் 27, 1953 அன்று பிறந்த நான்காவது குழந்தை சுதாமணி. பிறந்த அந்தக் கருநீலநிறக் குழந்தை அழவில்லை. புன்னகை பூத்தது. சிறுவயதிலேயே கண்ண பெருமானின் நாமத்தை ஜபித்தும், அவர்மீது பஜனைப் பாடல்களையும் பாடி வந்தாள் சுதாமணி. நான்கு வயதில் கிருஷ்ணன் மீது ஓரிரண்டு அடிகளில் நாமாவளிகளைத் தானே இயற்றிப் பாடலானாள்.

பல குழந்தைகளைப் பெற்று உடல் சோர்ந்துபோன தமயந்தி அம்மாளுக்குக் 'கருப்பி' சுதாமணிதான் வேலைக்காரி. காலை 3 மணிக்கு எழுந்தால் இரவு 10 மணிவரை சுதாமணி சளைக்காமல் வீட்டு வேலை செய்தாக வேண்டும். இவ்வளவு வேலை களுக்கும் நடுவில் ஒரு நிமிஷமும் விடாமல் கிருஷ்ண தியானம் செய்துகொண்டிருப்பாள். என்றாவது வீட்டுவேலையால் தாமதப்படாமல் பள்ளிக்குப் போனால் ஆசிரியர் சுதாமணியை வகுப்பில் உட்கார அனுமதிப்பார். இல்லையென்றால் அதுவும் இல்லை. ஆனால் சுதா மணிக்குக் கற்பூர புத்தி. எதையும் ஒருமுறை கேட்டாலே பிடித்துக்கொண்டுவிடுவாள். அதனால் நிறைய மார்க் வாங்கிவிடுவாள். ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகள் இடையறாத வேலை, வேலை, வேலைதான். திருமணம் செய்து அனுப்பிவிட்டால் பாரம் குறையுமே என்று பெற்றோர் நினைத்ததையும் நடக்க விடவில்லை சுதாமணி. அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோசியரும் 'இவர் ஒரு மகாத்மா. இவருக்குத் திருமணம் செய்ய வேண்டாம்' என்றே கூறிவிட்டார்.

சுதாமணிக்கு அப்போது வயது 22. பார்க்க 12 வயதுதான் தோன்றும். புல்லறுத்துக் கட்டைத் தலைமேல் சுமந்துகொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். வரும் வழியிலிருந்த புத்தன்பறம்பு வீட்டில் பாகவத பாராயணம் முடிந்து பஜனை தொடங்கி யிருந்தது. சுதாவின் காதில் இறைநாமம் விழுந்ததுதான் மிச்சம், அப்படியே அவர் தன்வயமிழந்தார். தானே கிருஷ்ணபாவம் கொண்டார். புற்கட்டு கீழே விழுந்தது. பஜனை நடந்த வீட்டில் இருந்தவர்கள் அவரது தெய்வீகத் தோற்றத்தைக் கண்டு அதிசயித்தனர். அங்கே நிறையப் பேர் கூடி விட்டனர்.

வந்தவர்களில் சிலர் நாத்திகர்கள். 'சுதாமணிக்கு வந்திருப்பது கிருஷ்ண பாவமென்றால் ஏதாவது அற்புதம் நடத்திக் காட்டவேண்டும்' என்று அவர்கள் சவால் விட்டனர். 'அற்புதம் நிகழ்த்துவதால் பயனில்லை. வேண்டாம். பக்தியைப் பரப்புவதுதான் என் நோக்கம்' என்று சொல்லி மறுத்துப் பார்த்தார் சுதாமணி. அவர்கள் கேட்பதாயில்லை. 'சரி, வரும் கேட்டை நட்சத்திரத்தன்று இங்கு நடக்கப்போகும் பாகவத பாராயணத்துக்கு வாருங்கள்' என்று கூறினார். சுதாமணி ஏதாவது ஏமாற்று வேலை செய்கிறாரா என்று பார்க்கச் சிலர் மரங்களின்மேல் ஏறி அமர்ந்துகொண்டனர்.

கேட்டை நட்சத்திரத்தன்று புத்தன்பறம்பு வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அதனால் பாகவத பாராயணத்தை வெளியே வைத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. சுதாமணி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். அதிலிருந்து சிறிது நீரை எடுத்துத் தெளித்த சுதாமணி ஒரு நாத்திகரையே அழைத்து அதில் இருப்பதை எல்லோருக்கும் வழங்கச் சொன்னார். எல்லோருக்கும் கிடைத்தது நீரல்ல, பால்! மற்றொரு நாத்திகரைக் கூப்பிட்டு அதே பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார். இப்போது அதில் இருந்தது பஞ்சாமிர்தம். எடுக்க எடுக்க எல்லோருக்கும் போதுமான அளவு மணமிகுந்த பஞ்சாமிர்தம் அதிலிருந்து வந்துகொண்டே இருந்தது. அதை வழங்கியவர்களின் கையில் மூன்று நாள் வரை பஞ்சாமிர்த மணம் வந்துகொண்டிருந்தது.

##Caption## அந்தச் சுதாமணிதான் இன்று அளவில்லாத தாயன்பை உலகோருக்குத் தந்து கொண்டி ருக்கும் 'அம்மச்சி' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி. சுதா என்றாலே அமிர்தம்தானே! அதற்குப் பிறகும் அவர் வழியே இறைவன் செய்த அற்புதங்களுக்குக் கணக்கில்லை. எல்லாவற்றையும் விடப் பெரிய அற்புதம் ஆதரவற்றோருக்கும், துன்புற்றோருக்கும் பேதம் பாராது காட்டும் அரவணைப்பும் கண்ணீர் துடைப்பும்தானே. இந்தியாவில் சுனாமி வந்தபோதும் சரி, அமெரிக்காவைக் கேட்ரீனா சூறையாடிய போதும் சரி, அம்மச்சி உடனடியாகத் துயர்தீர்க்கும் பணிகளைத் தொடங்கி, வழக்கமாக அரசு எந்திரங்கள் வழியே செய்வதால் ஏற்படும் விரயங்கள் எதுவும் இல்லாமல் சுயநலமற்ற தன்னார்வத் தொண்டர்கள் வழியே செம்மையாகச் செய்து முடித்தார். 2007ல் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கைச் சந்தித்த பின்னர் மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் பாரதத்தின் பிற பகுதிகளில் பெருகிவரும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அமிர்தானந்தமயி மடம் 200 கோடி ரூபாய் வழங்குமென அறிவித்தார்.

இன்று கல்லூரிகள், கோவில்கள், மருத்துவ இல்லங்கள், கூரையற்றோருக்கு வீடுகள் என்று ஆயிரமாயிரம் பேருக்குப் புகலிடமாக இருக்கும் அமிர்தானந்தமயி ஆரம்பத்தில் தனக்கென ஓர் ஆசிரமம் கூட வேண்டாம் என்று கூறியவர்தான். 'குழந்தைகளே, ஆசிரமும் ஒரு பந்தமல்லவா? கிளி ஜோசியனிடம் அகப்பட்ட கிளி கூண்டுக்குள் அடைபட்டுவிடுகிறது. தனது சுதந்திரத்தை இழந்துவிடுகிறது. அம்மா அப்படி இருக்க விரும்பவில்லை' என்றுதான் கூறினார். ஆனால், அவரை நம்பி வந்து அடைக்கலம் புகுந்த ஞானத்தேடல் கொண்ட சீடர்கள், பல நாட்டு பக்தர்கள் என்று அனைவருக்கும் இருப்பிடம் வேண்டுமே, அதற்காகத்தான் அம்மச்சி ஒரு ஆசிரமம் நிறுவ ஒப்புக் கொண்டார். நூலகம், வேதாந்தப் பள்ளி என்று சிறிது சிறிதாக விரிவடைந்தது ஆசிரமம். 'மகான்கள் தங்கள் சுகத்தைக் குறித்துச் சிந்திக்க முடியாது. தியாகச் சின்னமாகத் திகழ்பவர்கள் அவர்கள்' என்று அம்மச்சியின் சீடர் சுவாமி பூர்ணாம்ருதானந்த புரி கூறுவதை இங்கு நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அம்மச்சிக்கு சந்த் ஞானேஸ்வர் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கிய பூனேயைச் சேர்ந்த அமைப்பினர் அம்மச்சியிடம் மகான் ஞானேஸ்வரரின் வெள்ளிச் சிலையையும் ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையையும் தர விரும்பினர். காசோலையை வாங்க மறுத்த அம்மச்சி அந்தத் தொகையை வங்கியில் வைப்புநிதியாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டிப் பணத்திலிருந்து ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்கும்படிக் கூறினார். 'இத்தொகை அமைதிக்காக வழங்கப்படுவது. ஏழைகளுக்குச் செய்யும் தொண்டில்தான் அமைதி திகழ்கிறது' என்றார் அம்மா.

அம்மச்சியின் இந்தப் பண்பு பக்தர்களையும் தொற்றிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. பிரான்சு நாட்டுப் பெண்மணி ஒரு விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதிலும், சேர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் ஒருமுறை அமிர்தபுரிக்குச் சென்று அம்மாவை தரிசித்துவிட்டுப் போனார். அதற்குப் பிறகு எப்போது விலை கூடிய பொருட்களை வாங்கும் ஆசை வந்தாலும், விலை குறைந்ததை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தை நற்காரியங்களுக்குச் செலவழிக்கலாமே என்று தோன்றுகிறது என்று அம்மாவுக்குக் கடிதம் எழுதினார் அவர். எழுதியது மட்டுமல்ல, அப்படியே செய்யவும் தொடங்கினார் அந்த பிரெஞ்சுப் பெண்மணி.

அம்மா அயராத உழைப்பாளி. அமிர்தபுரியில் கட்டிட வேலை நடந்தபோது தன் தலையில் கல்லைச் சுமந்துகொண்டு அம்மா செல்வதைப் பார்த்தவர்கள் உண்டு. தனது சீடர்களும் பொழுதையோ பொருளையோ வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ஒரு இளம் சீடர் ஒருநாள் காலையில் தாமதமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கே அம்மாவின் கண்டிப்பான குரல் கேட்டது: 'சோம்பேறித்தனமாகப் படுத்திருக்க விரும்புபவர் யாரும் இங்கே இருக்க வேண்டாம். உண்டும், உறங்கியும் வாழ்வதே நோக்கமென்றால் எதற்காக உலகைத் துறந்து ஆசிரமத்துக்கு வர வேண்டும்?'

##Caption## இந்தத் தணியாத பேரன்புதான் ஜாதி, மத, நிற, மொழி வேறுபாடுகளின்றி அம்மச்சி உலகத்தில் எங்கு சென்றாலும் அவரது அன்பான அரவணைப்புக்காக ஆயிரக் கணக்கானோரை இரவு பகலாகக் காத்திருக்க வைக்கிறது. அம்மச்சியும் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து 20 மணிநேரம் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்து வருவோரை அணைத்து, காதில் நற்சொல் கூறி, கையில் ஒரு பிரசாதத்தைக் கூறியனுப்புகிறார். எல்லோரிடமும் அதே புன்னகை; அதே பரிவு! அந்த அணைப்பும் புன்னகையும் பலதரப்பட்ட வாழ்க்கைகளை மாற்றி தெய்வீக அன்பை நோக்கி பயணப்பட வைக்கும் மாயசக்தி கொண்டவை.

சினிமா வெரிடே (பாரிஸ், பிரான்ஸ், 2007), நியூயார்க் இன்டர்ஃபெயித் விருது (2006), காந்தி-கிங் விருது (ஜெனீவா, 2002) உட்படப் பலப் பன்னாட்டு விருதுகள் அம்மச்சிக்குத் தரப்பட்டுள்ளன.

உலக மதங்களின் பேரவை (சிகாகோ, 1993 மற்றும் 2004), ஐ.நா. சபையின் பொன்விழா (நியூயார்க், 1995), உலக அமைதிக்கான உச்சி மாநாடு (நியூயார்க், 2000) ஆகியவற்றில் அம்மச்சி அருளுரை வழங்கியுள்ளார்.

மகாஞானியரின் வரிசையில் வணங்கத் தக்க மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி பாரதம் உலகுக்கு அளித்த ஞானக்கொடை. அவரைக் காண்பதும் அவரது மொழிகளைக் கேட்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அரவணைப்பின் பேரானந்தத்தில் திளைப்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் தெய்வீகப் பேறுகள். அவரது பார்வையும், சொல்லும், அரவணைப்பும் நம்மை நல்வழிக்கு மாற்றி தெய்வீகப் பெருவழியில் அழைத்துச் செல்லும் சக்தி படைத்தவை.

அம்மாவைப்பற்றி மேலும் அறிய: www.amma.org

தமிழ் மாத இதழான 'மாத்ருவாணி'யைப் பெற: matruvani@amritapuri.org

***


உலக வாழ்க்கைக்கு பயந்து ஆன்மீக வாழ்க்கை என்ற பெயரில் இங்கே யாரும் ஒளிந்து ஓடி வரவில்லை. சிறார்கள் முதல் முதியவர் வரை இரவு பகல் பாராது சுயநல மற்று சமூக சேவை செய்கின்றனர். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள சிறு பிள்ளைகள் கூட அம்மாவின் சேவைத் திட்டங்களைப் பார்த்துவிட்டு, தங்கள் பெற்றோர் ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்குவதற்காகத் தரும் பணத்தின் ஒரு பகுதியைச் சேமித்து வைத்து, ஏழைகளுக்காகக் கொண்டு வந்து தருவது அடிக்கடி நிகழும் இதயத்தைத் தொடும் நிகழ்ச்சியாகும்
- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி

***


மனிதனை மனிதனாக்குவது மூன்று விஷயங்களாகும்:
1. விவேகத்துடன் சிந்தித்து வாழ்வின் ஆழத் தையும் அதன் பொருளையும் அறிவதற்கான தவிப்பு.
2. பிறருக்கு அன்பை வழங்குவதற்கான அவனது பிடிவாதம்.
3. தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கக் கூடிய அவனது சக்தி.
இவற்றை ஒருவன் அடைவதற்குக் கற்பிப்பதே ஆன்மீகம். அப்போதுதான் மனிதப் பிறவி முழுமை அடையும்.
- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி

***


தனது தாய்-தந்தையரை, உற்றார்-உறவினரை, வீட்டுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனை, தனது நாட்டை, அதன் விலைமதிப்பற்ற பண்பாட்டை நேசிக்க முதலில் முயற்சி செய்யுங்கள். இதற்கு மனப்பூர்வமாக முயற்சி செய்தால் பரந்த மனப்பான்மை தானே வரும்.
- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி

***


பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்ற எண்ணத்தை அகற்றி, சமூகத்தில் மிக முக்கிய இடத்தைப் பெண்களுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்துக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கும். அதையே உமாமகேஸ்வரன், லக்ஷ்மிநாராயணன், பார்வதிபரமேஸ்வரன் என்ற திருநாமங்கள் தெளிவுபடுத்துகின்றன.
- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி

மதுரபாரதி

© TamilOnline.com