பாரதியார்
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய இலக்கியவாளர்கள் தமிழ்த்தன்மையுடன் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவர். தமிழ்க் கவிதையில் வளத்துக்கு இன்றுவரை பாரதியாரை முன்னிறுத்திய உரையாடல்கள் ஆய்வுகள் பல்வேறு தளவிலைப்பட்டதாக உள்ளன. ஆழமும் பெற்று வருகின்றன. பத்தொன்பதாம் நுற்றாண்டில் இறுதிக் கூற்றில் தமிழ்ப் பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. இவற்றில் பிரசுரிப்பதற்காகக் கதைகள் எழுதப்படலாயின. அவ்வாறு எழுதப்படும் கதைகள் சிறிய அளவினவாய் இருக்க வேண்டுவது அவசியமாகின்றது. சிறுகதையின் வளர்ச்சிக்குப் பத்திரிகைகளே முக்கிய காரணமாக அமைந்தன. இது உலகப் பொது அம்சமாகவும் இருந்தது.

பாரதியாரின் கட்டுரை, கவிதைப் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தனியே மிக விரிவாகக் காணப்பட வேண்டியவை ஆகும். இங்கே நாம் அவரது சிறுகதை, நாவல் முதலிய புதினப் படைப்புகள் குறித்து மட்டுமே காண்போம்.

தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படத்தக்க அளவு சிறிய கதைகளை எழுதியவர்களுள் சுப்பிரமணிய பாரதியார், அ.மாதவையா, வ.வே.சு. ஐயர் போன்றோர் முன்னோடிகளாக இருந்துள்ளார்கள். இந்த மூவருடன்தான் தமிழில் சிறுகதை இலக்கிய வடிவம் வளர்ச்சிபெறத் தொடங்குகிறது.

தமிழில் கமலாம்பாள் சரித்திரம் எனும் சிறந்த நாவலை எழுதிய ராஜம் ஐயர் பற்றி பாரதியார் நன்கு அறிந்து வைத்துள்ளர். அதுபோலவே பஞ்சதந்திரக் கதை முதலான தமிழ் நாட்டுக் கதைகளை அடிப்படையாக வைத்து நெடுங்கதைகள் சிலவற்றையும் புனைந்துள்ளார். மேலும் பாரதியார் உலக அரங்கில் நாவல் எனும் புதிய இலக்கிய வகையின் வரவை நன்கறிந்திருந்தார். நாவலை இடையில் தொடங்கும் மேலை நாட்டவர் இலக்கிய மரபினையும் ஓரிடத்தே எடுத்துக் காட்டுகிறார். இதுபோன்றே சிறுகதை என்னும் இலக்கிய வகையின் வளர்ச்சியையும் பாரதியார் அறிந்திருக்க வேண்டும். கதாரத்னாகரம் என்னும் இதழ் சுதேசமித்திரனிலிருந்து 1920இல் வெளிவந்தது. கதாமாலிகா என்ற பாரதியாரின் கதைகளின் தொகுப்பும் 1920இல் வெளிவந்தது. கதைக்கொத்து என்னும் கதைத்தொகுப்பு நூலும் வெளி வந்துள்ளது. தாகூரின் கதைகள் எட்டினை பாரதியார் மொழிபெயத்துள்ளார். இவை பாரதியாருக்கு சிறுகதை இலக்கியம் பற்றிய புரிதலை நிச்சயம் வழங்கியிருக்கும். மேலும் வ.வே.சு. ஐயருடனும் அவருடைய எழுத்துக்களுடனும் பாரதியார் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். எனவே மேலைநாட்டுச் சிறுகதை இலக்கியத்தை நன்கு அறிந்து எழுதப்பட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் பாரதியின் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும்.

##Caption##இத்தகைய சூழலில்தான் பாரதியார் சிறுகதைகளைத் தமிழில் எழுதத் தொடங்குகிறார். சிறுகதைகளை எழுதும்போது பெரும்பாலும் 'ஒரு சிறிய கதை' என்று அடைப்புக்குறிக்குள் தருகிறார். ஆறில் ஒரு பங்கு, சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை போன்ற நெடுங்கதைகளையும் எழுதியுள்ளார். சிறுகதைகள் எனக் கிட்டத்தட்ட 39 கதைகள் எழுதியுள்ளார்.

சிறுகதை என்னும் இலக்கியத்துக்கு இன்று கூறப்படும் இலக்கண வரையறைகளைப் பொருத்திப் பார்த்தால் பாரதியாரின் சிறுகதைகள் அவற்றில் பொருந்தா. இருப்பினும் பழைய தமிழ் மரபிலிருந்து புதிய தமிழ் மரபை நோக்கித் தமிழ்க் கதை வடிவத்தை நகர்த்துவதற்கு பாரதியார் பெருமுயற்சி செய்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

சின்னச் சங்கரன் கதை முழுவதுமாகக் கிடைக்கவில்லை என்றாலும் அதில் காணப்படும் நகைச்சுவை பாரதியின் திறனுக்கு ஒரு சான்றாக உள்ளது. சிறுவயதில் பாரதி எட்டயபுரம் அரண்மனையில் பெற்ற அனுபவங்களைச் சித்திரிப்பதாக அக்கதை அமைந்துள்ளது. பாரதியாருடைய கதைகளில் சில புராணத்தன்மை மிகுந்த நாட்டுப்புறக் கதையாக அமைவதுண்டு. சில விலங்குகளைக் கொண்டு நீதியுரைக்கும் பஞ்ச தந்திரக் கதையைப் போல அமையும். சில கதையா கட்டுரையா என்று கண்டறிய முடியாதபடி அமைந்துவிடும். பெரும்பாலும் பாரதியார் கதைகளில் ஆகமபுரம், வேதபுரம், காளிதாசன், வேணு முதலி போன்ற பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியைப் பின்னோக்கிப் பார்க்கும் போது பல்வேறு வளர்ச்சிக் கட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த ஊற்றுகளுக்கும் ஓட்டங்களுக்கும் பாரதியார் வழிவந்த எடுத்துரைப்பு, கதையாடல், எளிமை யாவும் புதுப்பொலிவுடன் செழுமையுடன் வெளிப்படுவதற்கு பாரதியார் காரணமாக இருந்திருக்கிறார். சிறுகதை மரபு தோன்றுவதற்கும் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராக பாரதியார் விளங்குகின்றார். சமூக சிந்தனையும் கலக மனப்பான்மையும் இயங்குவதற்கான ஆத்மார்த்த தளத்தை எமக்கு பாரதியார் விட்டுச் சென்றுள்ளார். இதுவே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளும் வழித்தோன்றல்களும் உருவாவதற்குச் சாதகமான பின்புலத்தை அமைத்துள்ளன.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com