பந்து வீசினால் ஒரு லட்சம் டாலர்
உ.பி.யைச் சேர்ந்த இளைஞர் ரிங் சிங். வயது 19. கிரிக்கெட் பந்துவீச்சாளராக விரும்பினார் சிங். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. குண்டு எறிதல் விளையாட்டில் சாதிக்க விரும்பினார். அதிலும் தோல்விதான். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. இடைவிடாது பந்து வீச்சும், குண்டு எறிதலும் பயிற்சி செய்து கொண்டிருந்தார். ரிங் சிங்கின் ஆர்வத்தையும், திறமையையும் கண்ட பயிற்சியாளர், ‘பேஸ் பால்’ பந்து எறியும் பயிற்சியில் ஈடுபட வைத்தார். அதில் நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ந்து வந்தார் ரிங் சிங்.

அமெரிக்காவைச் சேர்ந்த, ’மில்லியன் டாலர் ஆர்ம் பேஸ்பால்‘ அமைப்பு, இந்திய உள்ள விளையாட்டு வீரர்களுக்காக ஒரு பேஸ்பால் போட்டி நடத்தியது. இதில் ரிங் கலந்து கொண்டார். இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற ரிங் சிங் மிக வேகமாகப் பந்து எறிந்து முதல் பரிசை வென்றார். அவர் பந்து எறிந்த வேகம், மணிக்கு 110 கி.மீ. இதைப் பார்த்து வியந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு அளிப்பதாக அறிவித்தனர். ஆனால், அதைப் பெற்றுக் கொள்ள ரிங் சிங்குக்கு வங்கிக்கணக்கே இல்லை!

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிங்கின் தந்தை லாரி ஓட்டி, குடும்பத்தைப் பராமரிக்கிறார். தனது இந்த வெற்றிபற்றிக் கூறும் ரிங், ‘இது என் முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றிதான்; ஆனால், இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. 24 மணி நேரமும் லாரி ஓட்டி எங்களைக் காப்பாற்றி வரும் தந்தைக்குக் கார் வாங்கித் தருவதுதான் என் முதல் வேலை’ என்கிறார்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், அமெரிக்காவில் உள்ள ‘பேஸ் பால்’ குழுக்களில் விளையாடும் தகுதியையும் ரிங் பெறுகிறார். பல அமெரிக்கக் குழுக்கள், ரிங்கைத் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. அதற்காக டாலர் களைச் செலவழிக்கவும் தயாராக இருக்கின்றன. விரைவில் சான்பிரான்சிஸ் கோவில் உள்ள பேஸ்பால் குழுவில் பங்கேற்கப்போகிறார் ரிங் சிங்.

அரவிந்த்

© TamilOnline.com