அம்மாவுக்கு ஒரு கடிதம்...
அன்புள்ள அம்மாவுக்கு,

அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் தினம், காதலர் தினம், தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவைதானா என்று கேள்வி கேட்ட காலங்கள் உண்டு. ஆனால் இன்று என் குழந்தைகள் பூவும், வாழ்த்து அட்டையும் கொடுத்து என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்தும்போது நான் ஏன் இப்படி மகிழ்ச்சியடைகிறேன்? அந்த ரோஜாப் பூக்களுக்காக நான் தவமிருந்தேனா? இல்லவே இல்லை. என் குழந்தைகளுடன் உட்கார்ந்து அவர்கள் பிறந்து, வளர்ந்த கதையைச் சொல்லும்போது நான் ஏன் இப்படிக் குதூகலிக்கிறேன்? நானும் ஒரு தாய்தானே... இப்படித்தானே நீயும் என்னைப் பெறுவதற்கும், வளர்ப்பதற்கும் கஷ்டப்பட்டிருப்¡ய்! 'உலகத்திலுள்ள ஒவ்வொரு தாயும் இப்படித்தானே, இது என்ன புதிதா?' என்று இந்த ஊரும், உலகமும் கேட்கலாம். ஆனால் எனக்குத் தெரியும், நீ எனக்காக மட்டுமே படைக்கப்பட்டவள். இல்லாவிடில் நான் பள்ளிக்கூடமே போக மாட்டேன் என்று அழுத ஒரே காரணத்திற் காகப் பள்ளிக்கூட வாசலிலேயே என் பார்வையில் படும்படியாக ஆறுமாதம் தவமிருந்தாயே. வேறு யார் செய்வார்கள்? மண்ணெண்ணெயைத் தண்ணீர் என்று நான் அறியாத வயதில் குடித்தபோது அப்பாவும் ஊரில் இல்லை. பக்கத்து வீட்டுப் பையனின் சைக்கிளில் பின்னாடி அமர்ந்து என்னைத் தூக்கிச் சென்ற கதையைச் சொல்வாயே நினைவிருக்கிறதா? பாதி வழியில் வண்டியில் பழுதடைந்து நீ கீழே விழுந்து, புடவை கிழிந்த கோலத்துடன் என்னைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று கதறினேன் என்று சொல்வாய். உன் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்று இத்தனை காலம் கழித்து இப்பொழுதுதான் உணர்கிறேன்.

நான் இப்படித்தான் நடக்க வேண்டும், உடுத்த வேண்டும் என்று எனக்கு நீ நீதிபோதனை வகுப்பு எடுத்ததேயில்லை. ஏனெனில் உன்னுடைய நடத்தையிலிருந்து அதை நான் புரிந்து கொண்டேன். எத்தனை முறை நான் உன் மனம் புண்படும்படி நடந்து கொண்டேனோ... ஆனால் ஒருமுறை கூட நீ என்னைக் கைநீட்டி அடித்ததில்லை. உன் மெளனம் தான் குற்றவாளி என்று என்னைச் சுட்டிக்காட்டியது. அதற்குப் பிறகு அந்த மெளனத்தைக் கலைக்க நான் எத்தனை பாடுபட வேண்டியிருந்தது. ஆனால் அவை சொல்லித் தந்த பாடங்கள்தாம் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.

கட்டுரைப் போட்டிகளில் பரிசு வாங்க வில்லை என்று உன் மடியில் உட்கார்ந்தால், ஒரே வார்த்தை 'இது ஒன்றும் கடைசித் தடவையல்ல! அடுத்தமுறை ஒரு கை பார்க்கலாம்' என்பாய். நான் மேடையில் பேசி முடித்தவுடன் உன் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்! ஏனெனில் அந்தக் கண்கள் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். உனக்குத் தெரியுமோ தெரியாதோ, உன்னுடைய கைதட்டல் மட்டும்தான் என் காதில் விழும்.

மேல்நிலைப்பள்ளிகூட முடிக்காத நீ உன்னுடைய மகள்கள் மட்டும் பிஎச்.டி. வரை படிக்க வேண்டும் என்று நினைத்தாய். என் திருமண தினத்தன்று என் கணவரிடம் என்ன கூறினாய் என்று நினைவிருக்கிறதா? 'என் மகளை நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் சமையலறைப் பக்கமே வரவிடவில்லை. அவள் என்னை மாதிரி இல்லாமல் நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்க வேண்டும் என்ற கனவில் சமையல் சொல்லித் தருவது பற்றி நான் நினைக்கவில்லை. தயவுசெய்து அவளைப் பற்றித் தவறாக நினைக்க வேண்டாம்' என்றாய். இன்று உன்னுடய எல்லாக் கனவுகளையும் நான் நனவாக்கி விட்டேன். ஓரளவு சமைக்கிறேன் என்றாலும் கூட, உன்னளவு ருசியாக நான் சமைப்ப தில்லையோ என்று நினைப்பேன். என் பையன் மட்டும் 'உன் சமையல் ருசியோ ருசி அம்மா' என்கிறான். நான் உனக்குச் சொன்ன அதே வார்த்தைகள். இதுதான் தாய்மையா?

இன்று என்னுடைய வாழ்வில் அப்பா, அக்காக்கள், கணவர், மகன், மகள், மாமியார், நாத்தனார், ஓரகத்திகள், மச்சினர்கள், நண்பர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே என் நிறை, குறை களை விவாதிக்கிறார்கள். ஏன், என் மனம் புண்படும்படிக்கூட சில சமயம் பேசுகிறார்கள். ஆனால் என்னை எனக்காக மட்டுமே நேசித்த ஒரே ஆத்மா நீதான். உலகில் ஒரு ஜீவன் இன்னொரு ஜீவனை நேசிப்பது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நேசிப்பது கடினம் மட்டுமல்ல. ஒரு தாயால் மட்டும்தான் முடியும். என்னுடைய வாழ்க்கையில் இத்தனை காலம் கடந்து இன்றுதான் அதை நான் முழுமையாக உணர்கிறேன். ஊர் உலகமெல்லாம் நேற்றும், இன்றும் என் குறைகளை அலசியபோது ஒரு சின்னப் புன்னகையுடன் என்னை ஏற்றுக் கொண்டாயே! அது வேறு யாரால் முடியும்?

நான் இன்றுவரை கடவுளை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் உன் உருவத்தில் அவரைப் பார்க்கிறேன். என்னுடைய இந்தக் கடிதத்தை எவ்வளவு உரக்கப் படித்தாலும் கேட்பதற்கு இந்த உலகத்தில் நீ இல்லை. ஆனால் எனக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை. நம்பிக்கையில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும். உன்னுடைய ஒவ்வொரு அணுவிலும், மூச்சிலும் நானிருந்தேன். நீ எங்கிருந்தாலும் உன்னால் என்னை மறக்க முடியாது. மறக்கவும் நான் விடமாட்டேன்.

நிறைய முத்தங்களுடன்

உன் அன்பு மகள்
ஹேமா

(மே 11 அன்னையர் தினம்)

© TamilOnline.com