சூழ்ந்த பரவசமாய்
கவிதையை இயற்ற-எழுத-எது காரண மாய் இருக்கிறது என்ற கேள்வி வெகுகாலமாக நிலவி வருகிறது. வெளியிலே நிகழும் நிகழ்வுகளோ, தோன்றும் காட்சிகளோ உள்ளத்தில் எழுப்பும் எழுச்சி எந்த ஒரு கவிதைக்கும் முதல் காரணமாக இருக்கிறது. அக எழுச்சியைப் புறக்காரணிகள் தூண்டு கின்றன. அந்த எழுச்சியின் விளைவாகக் கவிதை பிறக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தேக்க நிலையை அடைந்திருந்த தமிழ்க் கவிதை உலகத்தில் பெரிய அளவில் வேகத்தையும், படிக்கும் ஒவ்வொருவனுக்கும் உணர்வுக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி யவனான பாரதி இந்தக் கவிதை வடிவெடுப் பதில் உள்ள படிநிலைகளை ஒரு பாடலில் சொல்கிறான். கவிதை ஒருவனுடைய அகத்தில் ஊற்றாகப் பொங்குவதன் மூலக் கூறுகள் எங்கெங்கே, எதிலெதிலே அடங்கி யிருக்கின்றன என்பதைச் சொல்கிறான் பாரதி.

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள்உருக்குதல் இங்கு இவையெல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ?


ஒளிவளரும் தமிழ்வாணி! அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே!

தான் அறிந்துகொள்வதைத் தனக்குத் தெளிவாக இருக்கும்படி அறிவது. அதுதான் கவிதைக்கும் சரி, எழுத்தின் மற்ற வடிவங்களுக்கும் சரி, பேச்சுக்கும் சரி, அடிப்படையான மூலக்கூறு. சொல்பவன் எவனாயினும், சொல்லும் பொருளில் தனக்குத் தெளிவும் உறுதிப்பாடும் இருந்தா லொழிய ஒரு பொருளைப் பற்றிப் பேசப் புகுவதற்குத் தகுதியற்றவன் ஆகிறான். ஆங்கிலத்தில் conviction என்று சொல்கிறோம் அல்லவா அப்படிப்பட்ட தெளிவானதும், உறுதியானதுமான அறிவும், அப்படி அறிந்தி ருப்பதனால் ஏற்படும் மனோநிலையும் தெளிவுறவே அறிந்திடுதல் என்ற மூலக்கூறால் சொல்லப்பட்டது.

தான் அறிந்ததை, தான் உணர்ந்த வண்ணம் பிறருக்கு எடுத்துச் சொல்வதென்பது பெரிய ஆற்றல். சொல்லின் சக்தி பெரியதுதான் என்றாலும், சொல்லுகின்ற விதமும், முறையுமே அதற்கு உரிய சக்தியை அதனிடத்திலே உண்டாக்குகின்றன. கேட்பாரிடத்திலே, கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்க வேண்டும்; ‘இது கேட்கத் தகுந்த ஒன்று’ என்ற உணர்வையும் தொடர்ந்து கேட்பதற்கான விருப்பத்தையும் ஒரு கவிஞன் தன் படைப்பை நடத்திச் செல்லும் முறை ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல. தான் அறிந்தது எதுவோ, தான் உணர்ந்தது எதுவோ அதனை அந்தவிதமாகவே மற்றவன் அறிந்து, உணர்ந்துகொள்ளும் விதமாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

ஏதோ ஒன்றைப் படிக்கத் தொடங்குகிறோம். முதல் வாக்கியம் நம்முடைய கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டினால்தான் அடுத்த வாக்கியத்துக்குப் போவோம். ஒரு சொற்பொழிவைக் கேட்கும்போது, ‘சற்றுநேரம் அமர்ந்து இதைக் கேட்போம்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும், ‘அடுத்து என்ன சொல்லப் போகிறார்’ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அந்தப் பொழிவு இருந்தால்தான் அங்கே அமரவே செய்வோம்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்


என்று சொன்னதைப் போல், கேட்பவரை இறுகப் பற்றிக் கொண்டு அமர்த்தி மேலும் கேட்க வைப்பதாகவும், அந்தப் பொழிவைக் கேட்காதவர்கள் கூட, அதைப் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேள்விப்படும்போது ‘நாமும் இதைப் போய்க் கேட்கவேண்டும்’ என்ற விருப்பத்தை ஏற்படுத்துதாகவும் இருப்பது எதுவோ அது சொல்வன்மை அல்லவா.

அப்படி ஒரு கருத்தை எடுத்து வைக்க வேண்டுமாயின் அதற்கு முதல்தேவை தான் முதலில் அதுபற்றிய தெளிவு உள்ளவனாக இருப்பது. அடுத்த தேவை, தான் எதற்காக இதைச் சொல்லப் புகுந்திருக்கிறோம் என்பதை உணர்ந்திருப்பது. அதைத்தான் ‘தெளிவுதர மொழிந்திடுதல்’ என்ற மூலக்கூறு சொல்கிறது. தெளிவுற அறிந்திடுதல். தெளிவுதர மொழிந்திடுதல். தர என்ற சொல்லை கவனிக்கவேண்டும். தெளிவை ஏற்படுத்துமாறு என்பது பொருள். தன்னைத் தெளிவித்துக் கொள்ளுதலும், தன்னிடத்தில் ஏற்பட்ட தெளிவு மற்றவரிடத்தில் ஏற்படுமாறு சொல்வதும். இவைதாம் எழுத்து என்ற, பேச்சு என்ற மகத்தான கருவிகள் தொழிற் படுவதற் கான அடிப்படையான ஆயத்தக் கூறுகள். இந்த இரண்டையும் முறையாக அறிந்த பிறகு அதற்கேற்ப மொழியப் புகுபவனே கவிஞன்; எழுத்தாளன்; பேச்சாளன்.

இவற்றுக்கு அடுத்த நிலை ஒன்றைக் காட்டுகிறான் பாரதி. ‘சிந்திப்பார்க்கே, ஆனந்தக் களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்.’ முதல் இரண்டு மூலக் கூறுகளையும் சொல்லும்போது ‘அறிந்திடுதல்’, ‘மொழிந்திடுதல்’ என்று ஒருவன் தன்னுடைய சுய ஆற்றலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள தன்மையையும் பயன்படுத்துவைதச் சொன்னான். இப்போது ‘காட்டல்’ என்ற நிலையைப் பற்றிப் பேசும்போது, தான் அல்லாத பிறிதொன்று தன்னை ஆட்கொண்டு உள்ளத்தில் உண்டாக்கும் நிலையைச் சொல்கிறான். இப்படி தன்னை ஆட் கொள்வது என்பது இறை அனுபவமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சிந்திக்கச் சிந்திக்க, எதுபற்றிச் சிந்திக் கிறோமோ அது நம்மைப் பற்றிக் கொள்கிறது. அந்தப் பொருளுக்கு நாம் ஆட்படுகிறோம். எவ்வளவு ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்திக்கிறோமோ அவ்வளவு முழுமையாக நாம் அந்தப் பொருளின் வசப்படுகிறோம். இப்படி அதன் வசப்படுவது என்பது சிந்தனையின் ஆழத்தையும், தீவிரத்தையும் சார்ந்த ஒன்று. இப்படிப்பட்ட நிலையைத்தான் பரவசம் என்கிறோம். ஒருவன் எப்போது தன் வசம் இழக்கிறானோ அப்போது பர-வசம் அடைகிறான். ‘பர’ என்பது ‘சுய’ என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல். சுயவசம் எப்போது போகிறதோ அப்போதுதான் பரவசம் உண்டாகிறது.

நல்ல இசையைக் கேட்கிறோம். தன்னை மறக்கிறோம் அல்லவா? நாமும், நாம் கேட்கிற இசையும் மட்டுமே இருக்கும் நிலை தொடக்க நிலை. பிறகு மெல்லமெல்ல இசை நம்மை ஆட்படுத்திக் கொண்டு நாம் இருக்கிறோம் என்ற உணர்வையே அற்றுப் போகச் செய்கிறதல்லவா, அது பரவசம்.

‘சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் / காலைக் கடனில் கருத்தின்றிக் கேட்டிருக்க’

என்று குயில் பாட்டில் சொல்கிறான் அல்லவா பாரதி. அந்த மாஞ்சோலையில் ஒரு குயில் கூவிக் கொண்டிருக்கிறது. அது கூவும்போது உண்டாகும் இசை எல்லாப் பறவைகளையும் ஈர்க்கிறது. அவை மெல்ல மெல்லத் தம் உணர்வை இழக்கின்றன. பரவசம் அடைகின்றன. காலைக் கடன்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துகூட அவற்றிடம் ஏற்படவில்லை. தம் வசத்தை இழந்து, பர-வசத்தை அடைந்து அவை குயிலின் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தன என்கிறான் அல்லவா, அப்படிப்பட்ட நிலைதான் பரவசம். இப்படிப்பட்ட நிலையை ஒரு நல்ல இசை நிகழ்ச்சி ஏற்படுத்தலாம். நல்ல சொற்பொழிவு ஏற்படுத்தலாம். நல்ல எழுத்து ஏற்படுத்தலாம். இதோ இந்தக் கணம்கூட அப்படிப்பட்ட ஒன்றாக இருக்க லாம். இது கேட்பவனுக்கு ஏற்படும் அனுபவம்.

சொல்பவன் இருக்கிறானே, அவன் முதலில் இந்த நிலையை அடைய வேண்டும். அப்படி அவன் அடைந்தால்தான் கேட்பவனிடத்தில் இப்படிப்பட்ட ஒரு நிலை, உணர்வு, அக எழுச்சி உண்டாகும். அப்படி உண்டாகின்ற காரணத்தாலே புறச்சூழல், புறவசம், புறநிலை எல்லாம் இழந்தும் மறந்தும் போகும். அப்படிப்பட்ட நிலையைச் சொல்பவன்--அல்லது இசைப்பவன், எழுதுபவன்--அடைய வேண்டுமானால் அதற்கு அடிப்படை சிந்தனை. சிந்திப்பவனுக்கே அந்த நிலை சித்திக்கிறது. சிந்தனை என்ற நிலை எவ்வளவு ஆழமாகச் செல்கிறதோ அவ்வளவு ஆழமாகப் பரவசம் என்ற நிலை உண்டா கிறது. அதன் காரணமாக கனவு என்ற நிலை தோன்றுகிறது. தூங்கும்போது உண்டாகும் கனவன்று இது. தன்னை இழந்த நிலையில் உள்ளத்தில் தோன்றும் தோற்றம். அகக்காட்சி. இதைத்தான் பாரதி ‘சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்’ என்று சொல்கிறான்.

கனவு. ஆனந்தக் கனவு. களிவளர ஏற்படும் கனவு. இந்த நிலையை அடைபவன் அடுத்ததாகக் ‘கண்ணீர்த் துளி வளர’ உள்ளம் உருகும் நிலையை அடைகிறான். இந்த நிலை எல்லாக் கவிஞர்களுக்கும் எல்லாச் சமயங்களிலும் கிட்டிவிடக் கூடிய ஒன்றன்று. முதிர முதிர, அடைந்திருக்கும் முதிர்ச்சிக்கு ஏற்ப மட்டுமே இந்தப் பரவசமும், பரவசத்தால் உள்ளம் உருகுவதும், கண்ணீர்த் துளி வளருவதுமான நிலைகள் கிட்டுகின்றன.

இப்படி உள்ளத்தில் காட்சிகள்-ஆநந்தக் கனவுகள்-விரிவதனால் ஒருவன் கவிதை களையும் காவியங்களையும் கட்டப் புகுகின்றான். அப்படிப் புகும்போது அவனுடைய படைப்பில் இரண்டு நிலைகள் தோன்றுகின்றன. சொல்ஆட்சி என்பது ஒன்று; சொல்வீழ்ச்சி என்பது மற்றொன்று. சொல் ஆட்சியையும், சொல்வீழ்ச்சியையும் இன்ன என்று அடையாளம் கண்ட பிறகு, நாம் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சியில் கம்பனுடைய சொல்வீழ்ச்சி ஒன்றை அடையாளம் கண்டு, அதன் ஆழத்தையும், வீச்சையும் அதன் விரிவையும் தன்மை களையும் காண்போம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com