சிகாகோவில் நாட்டிய சிறப்புக் காட்சி
மே 13, 2006 அன்று 'பரதம் நடன அகடமி' ஒரு பரத நாட்டிய சிறப்புக் காட்சியை சிகாகோவில் உள்ள லெமாண்ட் கோவிலில் அளித்தது. எழுபதுக்கும் மேற்பட்ட மாணவியர் 18 உருப்படிகளை ஆடிக் காண்பித்தனர். இவற்றை வடிவமைத்திருந்தார் அகடமியின் இயக்குனர் வனிதா வீரவல்லி அவர்கள்.

அழகாகத் தொடங்கிய அஞ்சலியிலிருந்தே தெரிந்தது நிகழ்ச்சியின் போக்கு. அடுத்து முதுநிலை மாணாக்கர்கள் ஆடிய 'நர்த்தன கணபதி' (நாட்டை) படைப்பில் மகிழ்ச்சியுடன் ஆடும் விநாயகக் கடவுள் சித்திரிக்கப்பட்டார். அடுத்த உருப்படியில் புது மாணவிகள் அடவுகளை ஆடிக் காண்பித்தனர்.

சில நடனங்கள் முழு நிருத்தியமாகவும் மற்றவை சாகித்தியம் கூடிய கதைகளாகவும் கச்சிதமாய் அமைந்திருந்தன. முதல் வகையறாவில் அமைந்தவை வாத்திய லஹரி, ஜதிஸ்வரம், தில்லானா போன்றவை. புராணங்களை ஆதாரமாகக் கொண்டு சங்கரராய் எழுந்தருளிய சிவபெருமான் கதை, முருகன் வேண்டுதல் போன்றவை அமைந்திருந்தன. நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்திற்கு மையக்கரு கிருஷ்ண பகவான் சரிதம். அஞ்சலியுடன் தொடங்கி, மீரா, கிருஷ்ண கானம், கோபியருடன் லீலைகள், கோவர்தன மலை உயர்த்துதல், சிறு பிராயத்து விளையாட்டுகள், மஹாபாரதக் காட்சிகள் ஆகியவை நாட்டிய வடிவில் சித்திரிக்கப் பட்டன. இப்பகுதியில் வந்த மிகச் சிறந்த நடனம் மேரியன் மனாட் தனியாக ஆடிய பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே'.

வனிதா வீரவல்லி சென்னை கலாக்ஷேத்திராவிலும், கலைமாமணிகள் இந்திரா ராஜன் மற்றும் முனைவர் சரஸ்வதியிடம் பரதம் பயின்ற நடன விற்பன்னர். அப்பேர்ப்பட்டவரிடமிருந்து நாட்டியக் கலை தற்கால சிகாகோ இளைஞருக்குச் செல்வதைப் பார்த்துப் பெருமிதம் அடையலாம். தியாகராஜரைப் பற்றி ஒரு முழு நீள நாட்டிய நாடகத்தைத் தொகுத்து அரங்கேற்றிய வனிதா வீரவல்லிக்கு இந்தச் சிறப்புக் காட்சி ஒரு நல்ல பின்தொடர்ச்சி.

ஜோலியட் ரகு

© TamilOnline.com