நான் நீதிபதி அல்ல
உங்களுடைய பகுதியை இரண்டு வருடங்களாகத் தவறாமல் படிக்கிறேன். உறவுகளில் பிரச்சனை என்று இருந்தால் நிச்சயம் இரண்டு பேர் இருப்பார்கள். தங்கள் பிரச்சனையை உணர்ந்து எழுதுபவர்களுக்கே ஏன் எப்போதும் உங்கள் ஆலோசனை? மற்றவர் பக்கம் தப்பு இருக்கத்தானே செய்யும்? அவர்களைத் திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுப்பதில்லை? அடித்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல், அடி வாங்கியவர் களுக்கு அறிவுரை கொடுப்பது என்ன நியாயம்? ரொம்ப நாளாக இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று ஆசை...

இப்படிக்கு,

அன்புள்ள சிநேகிதியே,
நன்றி. இந்தக் கேள்வியை என்னிடம் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். இதே கேள்வியை நானும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கீழ்க்கண்ட பதிலை எனக்கு நானே சொல்லியிருக்கிறேன்.

1. நான் இங்கே நீதிபதி அல்ல.

2. எனக்கு அதற்கான படிப்பும், அனுபவமும், யோக்யதையும் கிடையாது.

3. எது நியாயம், எது அநியாயம் என்று திட்டவட்டமாக எடுத்துச் சொல்வது, இந்தப் பகுதிக்கு அப்பாற்பட்டது. எனக்கும் அந்த அதிகாரம் இல்லை.

##Caption##ஒரு பகுதியில், ஒரு பக்கத்தில், ஒருவர் வலியை வேதனையைத் தெரிந்துகொண்டு மற்றவரின் கண்ணோட்டத்தில் என்னுடைய அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்தப் பிரச்சனைகளை நான் ஆராய்ந்து பார்க்க முயற்சி செய்கிறேன். இங்கே ஒருவர்தான் தன் வலியை வெளிப்படுத்துகிறார். மற்றவருக்கு இந்த வலி இருக்கிறதா? தெரியாது. அவர் ஏன் இந்த வலியை ஏற்படுத்துகிறார்? தெரியாது. அந்த மற்றவர் நம்மிடம் உதவி கேட்கிறாரா? அதுவும் இல்லை. ஆலோச னைக்குக்கூட அங்கே வழியில்லை.

நாம் எல்லோரும் வாழ்க்கையில் நிறைய அடி வாங்குகிறோம். சில அடிகளுக்கு நாமே பொறுப்பு. ஆகவே பொறுத்துக் கொள்கிறோம். சில அடிகள் நமக்கு தெரியாதவர்களிட மிருந்து வருகிறது. அங்கே இயலாமையை உணருகிறோம். சட்டம், சமாதானம் போன்ற வற்றை நாடுகிறோம். ஆனால், நன்கு தெரிந்தவர்களிடம் வாங்கும் அடியில்தான் வேதனை அதிகம். கட்டுப்படுத்தவும் தெரியாமல், விட்டுக்கொடுக்கவும் முடியாமல் தவிக்கிறோம். ஒரு elevator-ல் சிக்கிக்கொண்டு மேலேயும் கீழேயும் போய்க்கொண்டு, வெளியில் வர முடியாமல் இருக்கும் நிலை போன்ற உணர்வு இருக்கும். யாரை ஒரு பிரச்சனை அதிகம் பாதிக்கிறதோ அவர்கள் தங்கள் நிலைமையைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது ஒத்தடம் கொடுப்பது போலப் பரிவு வார்த்தைகளைச் சொல்லி, அந்தப் பிரச்சினையைத் தாங்கிக் கொள்ள வழிமுறைகளையும் சொல்லும்போது கொஞ்சம் மனவலி குறைந்து, பாதுகாப்பு உணர்ச்சி பிறக்கும். அந்தப் பாதுகாப்பு உணர்ச்சி அவருடைய பிரச்சனைகளைத் தீர்க்க, எதிர்கொள்ள மனதில் ஒரு தெளிவையும் பலத்தையும் கொடுக்கும்.

உறவு முறைகளால் ஏற்படும் பிரச்சனை களைப் பிறரால் தீர்க்க முடியாது. பிரச்சனை களும், உணர்ச்சிகளும் அவரவர்களுக்கே சொந்தம். அவர்கள் தீர்வு காண (பாதையைக் காட்டி விட்டாலும் அவர்கள்தாம் ஓட்டிச் செல்லவேண்டும்) எடுக்கும் முயற்சிகள் அந்தந்தக் குடும்ப அமைப்பு, அந்தக் குடும்ப அங்கத்தினரின் வாழ்க்கை முறை, குணா திசயங்களைக் கொண்டு எடுத்தால்தான் உறவினால் ஏற்படும் கோணல்களைச் சீர் செய்ய முடியும். எந்த உறவுமுறையும் நேர்கோடல்ல. So challenges continue, strategies evolve, efforts persist for relationships to survive and excite.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com