ச.து.சு.யோகியார்
தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு ஆளுமைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் சுதந்திரப் போராட்ட எழுச்சியில் பங்கு கொண்டவர் களாக இருந்தார்கள். இதனால் மொழிப் பற்றும் நாட்டுப்பற்றும் நிரம்பியவர்களாக இருந்தார்கள். சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உருவான 'மறுமலர்ச்சி' 'சமூகசீர்திருத்தம்' 'சமூகசமத்துவம்' போன்ற உயரிய நோக்கங்களுக்கேற்ப தமது சிந்தனை செயல் யாவற்றையும் ஒருங்கிணைத்துச் செயற்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் உருவானவர்களுள் ஒருவரே ச.து. சுப்பிரமணியம் என்ற யோகியார். இவர் ச.து.சு. யோகியார் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

யோகியார் 1904 நவம்பர் 30ம் நாளில் கேரளத்தில் உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் துரைசாமி-மீனாட்சியம்மாள் இருவருக்கும் பிறந்தார். சுப்பிரமணியம் என்ற பெயர் சூட்டப்பட்டது. நாளடைவில் இப்பெயர் மருவி சங்ககிரி துரைசாமி சுப்பிரமணியம் யோகியார் என்றானது. எல்லப்பள்ளி கிராமத்தில் பிறந்தாலும் இவரது பள்ளிப் பருவம் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியில்தான் கழிந்தது. தந்தையார் ஐதராபாதில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம் ஆகிய மொழிகளில் மிகுந்த புலமை பெற்றிருந்தவர். முஸ்ஸிம்களுடன் நெருங்கிப் பழகி வந்தவர். சர்வமத சமுதாய நோக்குக் கொண்டிருந்தவர். பொதுப்பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர். தனது 38 வயதில் மறைந்தார். தந்தையின் நற்குணங்கள் சிந்தனைகள் யோகியாரது வாழ்க்கையின் கண்ணோட்டத்தைத் திசை மாற்றின. தனது ஒன்பதாவது வயதிலேயே (1913) 'பாலபாரதி' என்ற பட்டம் பெற்றவர். எப்போதும் படிப்பதில் இன்பம் காண்பவர். இதனால் ஆளுமைமிகு இளைஞராக எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவராக வளர்ந்து வந்தார்.

அக்கால சமூக அரசியல் முகிழ்ப்பு யோகியாரது வாழக்கைக்குப் புதிய அர்த்தம் கொடுத்தது. சமூகப் பிரக்ஞை உள்ளவராக இவரை மாற்றி வளர்த்து வளப்படுத்தியது. சிறுவயதிலேயே கல்வியாற்றல் மிக்கவராகவும் இருந்தார். மொழியைக் கையாள்வதில் தனக்கென்று தனித்த அடையாளத்தைக் கொண்டிருந்தார். சமூக முன்னேற்றத்துக்குரிய விரிந்த சிந்தனை உடையவராகவும் இருந்தார். அதேநேரம் ஆன்மீக விடயங் களிலும் அக்கறை கொண்டிருந்தார். தனது உள்ள உறுதியை வளர்க்கும் ஆன்ம ஈடேற்றத்தை நோக்கியே கவனம் குவித்தார். காளி பக்தராகவும் இருந்தார். இவரது தரிசனத்தில் காளி இவ்வாறு காட்சி கொடுப்பாள்.

கருப்புத் தெய்வமடா - தம்பி
காளித் தெய்வமடா!
விருப்புற்று நமக்கே - அவள் தான்
வேண்டுவன தந்து வினையறுப்பாளடா!


இவ்வாறு காளியின் சிறப்பைக் கூறுவார். நலம் தந்து பின் தீய சக்திகளை அழிப்பாளாம் காளி. ஆக காளி இவருக்குள் எவ்வாறு வீற்றிருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். காளிமீது கொண்ட பக்தி யோகியாருக்கு மட்டுமல்ல, பாரதிக்கும் இருந்த பக்திதான். யோகியார் பாரதியாரை நேரில் சந்தித்தவர். தனது குருநாதராக பாரதியை ஏற்றுக்கொண்டவர். தற்காலத் தமிழிலக்கியத் தின் தந்தை எனவும் பாரதியாரைக் குறிப்பிடுவார்.

சமத்துவம், சகோதரத்துவம் அவரது வாழ்க்கையின் இலட்சியமாயிருந்தன.'

இந்த அளவுக்கு பாரதியை இறுக்கமாக, தெளிவாக நமக்கு அடையாளம் காட்டு கின்றார் யோகியார். அந்த அளவுக்கு பாரதிக்குள் யோகியார் உள்ளிறங்கி உள்ளார். அதனால் தான் பாரதி(யார்?) என்பதை இவ்வளவு நுணுக்கமாக அளந்து கூற அவரால் முடிந்துள்ளது. பாரதியின் தாக்கம் யோகியார் சிந்தனையிலும் வாழ்க்கை மதிப்பீடுகளிலும் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்றே கூறலாம்.

பாரதியின் கவிதைக் கட்டமைப்பு சொல் லாட்சித் திறன் கவியாக்கம் யோகியாரிடம் பிறிதொரு நிலையாக வெளிப்பட்டுள்ளது. அதைவிட யோகியாரது தனித்தன்மையைப் புலப்படுத்தும் கூறுகளையும் அவை கொண் டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கம்பன், இளங்கோவன் போன்றவர்களது ஆளுமையை அணு அணுவாகத் திறன் நோக்கி வசப்படுத்திக் கொண்டவர். கம்பராமாயணத்ததை ஒரு கையிலும் தாயுமானவர் பாடல்களை ஒரு பையிலும் வைத்துக் கொண்டு இந்த உலகத்தின் எந்த முலை முடுக்குக்குச் சென்றாலும் தமிழன் என்று தலைநிமிர்ந்து கூறலாம். அதற்கான தகுதி இவ்விரு புத்தகங்களினாலேயே வந்து விடுகிறது என்றும் யோகியார் கூறுவார்.

கம்பர் மீது அபரிமிதமான காதல் கொண்டிருந்தார். கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் யோகியார் ஆசைப்பட்டார். தனது காலத்தில் 'சீதா கல்யாணத்தை' மட்டுமே மொழிபெயர்த்திருந்தார். கம்பனது புகழ் பல்வேறு மொழிகளில் பரவவேண்டும். தமிழின் வளம் எத்தகையது என்பதைப் பலரும் உணரவேண்டும் எனவும் விரும்பி இருந்தார். இத்தகு சிந்தனைகளைச் சாத்தியப்படும் இடத்தில் எல்லாம் தெளிவாக எடுத்துரைத்து வந்தார்.

கம்பன், பாரதி போன்ற ஆளுமைகள்மீது கொண்ட காதலால் தனது மொழிவளத்தை மேன்மேலும் செப்பம் செய்து வந்தார். அதாவது கம்பன் வழிவரும் கவிதைக் கட்டமைப்பு, அதன் கருத்து நிலை யோகியார் சிந்தனையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது.

இந்த மரபு பின்னர் பாரதி வழியில் புதுத்திருப்பம் கண்டது. புதிய கருத்து, புதிய சொல்லாட்சி, புதிய எண்ணங்கள் எல்லாம் கவிதையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பார்வைத் தெளிவைக் கொடுத்தது. யோகியார் பழையதை மறுக்காமல் மாற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். எப்படி? புதுமை என்பதாலேயே பழமை எல்லாம் தவறென்றோ, புதுமை எல்லாம் சரியென்றோ அர்த்தமில்லை. பழமை நம் வாழ்வின் விதை, வேர், அடி மரம். புதுமை கிளை, இலை, மலர், காய், கனி. பழமையை நீங்கிப் புதுமை காண்பது நுனிமரத்திலிருந்து அடி மரத்தை வெட்டுவதாகும். புதுமையை விலக்கிப் பழமையிலே மூழ்குவது விதையைப் பெரிதாக்கி விளைவில்லாமற் செய்வதாகும். பழைய வஸ்து, புதிய மெருகு; பழைய கருத்து, புதிய கவின்; பழைய மது, புதிய கிண்ணி; பழைய விருட்சம், புதிய விதைகள் - இவையே கவிதையில் புதுமை செய்யும் சிந்தாந்தம். இந்தக் கவிதை மரபில் தோய்ந்து தனக்கான கவியாற்றலை வளப்படுத்திக் கொண்டவர் யோகியார். இவரது கவிதை மொழி தனியாக ஆராயப்படவேண்டியதாகவே உள்ளது.

யோகியாரது வாழ்க்கையில் பிள்ளைச் செல்வங்கள் நிலைக்கவில்லை. எல்லாமே மடிந்து விட்டன. ஒன்றே ஒன்று தங்குமென்று பார்த்தால் அதுவும் கடைசியில் போய்விட்டது. இந்த துன்பத்தை வலியை ரொம்பவும் இயல்பாக எளிய நடையில் கவியாக பகிர்ந்து கொள்வது இவரின் கவிச் சிறப்புக்கு எடுத்துக் காட்டு. இந்த இரங்கற் பாவில் உவமைகள் கொட்டிக் கிடங்கின்றன. புதிய சொல்லாட்சி மிளிர்கின்றது.

சின்னஞ் சிறு குழந்தை
சிங்காரப் பெண் சிறுமி
என் நெஞ்சு அழுதுற்றும்
இனிமை எங்கு போனதுவே

வானத்தே ஒரு சுடர்தான்
வையத்தைப் பார்ப்பதற்கு
மீனத் திரள் வடித்த
மின் அரசி போல் வந்தாள்

தேசமெல்லாம் சுற்றும்
சிறு பறவை பின்னேரம்
வீசும் கிளை ஒன்றில்
வீற்றிருந்து போவது போல்

காலையிலே கண்விழித்துக்
கடும் புயலில் அகப்பட்டு
மாலையிலே வாடி
வதங்கியதோர் மலரைப் போல

ஆண்டு இரண்டு கூட
நிறையாக ஆயுளுடன்
மாண்டு விட்டாள் என்னுடைய
மண் உயிராம் பெண் பாவை


அருமை மகள் இராஜத்தின் மறைவு எப்படி யோகியாரை உலுக்கியது என்பதை இப்பாடல் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

தேசபக்தி கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா, விடுதலைச் சிந்து போன்ற தொகுதிகள் யோகியாரது கவிப்புலமை எத்தகையது என்பதை எடுத்துக் காட்டும். 'கவி உலகில் கம்பன்' என்னும் உரைநடை யும், மரண தாண்டவம் போன்ற சிறுகதைத் தொகுப்பும் இவரது பன்முக ஆளுமையை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் எனலாம். இதைவிட ஆங்கிலத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் சில நூல்களைப் பெயர்த் துள்ளார். அப்படிச் சென்றதுதான் 'கம்ப ராமாயணம் சீதா கல்யாணம்'. இவ்வாறு ஆங்கிலத்திலும் பத்துக்குட்பட்ட படைப்பு களை எழுதி வெளியிட்டுள்ளார்.

காமினி (காவியக் கவிதை), பவானி (குறவஞ்சி), நவபாரதம், குறவஞ்சி போன்ற கவிதை நாடகங்களையும் ஆக்கியுள்ளார். மேலும் எனது சிறைவாசம் (தன்வரலாறு), கவி பாரதி (திறனாய்வு), சங்கம் வளர்த்த தமிழ் (திறனாய்வு) போன்ற கட்டுரைப் படைப்பு களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவை யாவும் இன்னும் முழுமையான மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படவில்லை. யோகியார் ஆளுமையும் புலமையும் தெளி வாகக் கணிக்கப்படவில்லை. யோகியார் தமிழ்க் கவிதை மரபுக்கு உரைநடை வளர்ச்சிக்கு எத்தகு பங்களிப்புச் செய்துள்ளார் என்பதை ஆய்ந்தறியும் முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.

யோகியார் மேற்கொண்ட முயற்சிகளில் முதன்மையானதாக சாத்தனார் எழுதிய கூத்த நூலிற்கு உரையும் பொழிப்பும் செய்தாகும். கூத்த நூல் நாட்டிய சாத்திரத்தை மையமாகக் கொண்டது. இது ஓலைச் சுவடியில் சூத்திரங்களாக இருந்தது. இதற்கு யோகியார் எழுதிய உரை நாட்டிய மரபில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. கூத்த நூல் பரிச்சயம் இல்லாமல் நாட்டிய வரலாறு, ஆடல் மரபு பற்றிய விரிவான விளக்கத்துக்குச் செல்ல முடியாது.

சாத்தனார் எழுதிய கூத்த நூல் தமிழ்க் கூத்து அறிகையில் எழுந்த முக்கியமான நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் கிடைத்த பகுதிகள் யோகியாரால் விளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. தமிழ் நிலைப்பட்ட பரதம் பற்றிய தேடலுக்கு இந்நூல் முக்கியம். இது யோகியாரின் பெரும் பங்களிப்பு என்றே கூறலாம்.

இதைவிட யோகியார் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் பங்களிப்புச் செய்துள்ளார். கதை, வசனம், பாடல், இயக்கம் என இயங்கி உள்ளார். 'அதிர்ஷ்டம்' படத்தில் அன்றைய 'மிஸ். மெட்ராஸ்' சூரியகுமாரி பாடுவதாக ஓரு காட்சி. 'ஐயா சிறு பெண் - ஏழை என்பால் மனம் இரங்காதா'. இப்பாடலை எழுதியவர் யோகியார். இப்பாடல் பல காலமாகப் பிச்சை எடுப்பதற்குப் பாடும் பக்திப் பாடலாக இருந்தது. இதைவிட இவரது வசனச் சிறப்பைப் பலரும் பாராட்டுகிறார்கள். பின்னர் வசனத்துக்கு முக்கியத்துவம் வருதற்குக் கூட யோகியார் போட்ட தடம் என்றும் சொல்லலாம்.

ச.து.சு. யோகியார் தமிழில் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ள போதும் கூத்த நூல் உரை ஒன்றே இவரது சிறப்பை என்றும் எடுத்துக்கூறும்.

யோகியார் பாரதியை நமக்குப் பின்வருமாறு அடையாளம் காட்டுகின்றார். ‘நிமிர்ந்த நடை, நேரான பார்வை, மெலிந்த உடல், மொட்டைத் தலை, முறுக்கு மீசை, கிறுக்கு நெஞ்சம், எலுமிச்சம்பழ நிறம், படபடத்த பேச்சு, இடிக்குரல், கையில் ஒரு பிரஞ்சு நாவல், இதுதான் நான் முதன்முதல் கண்ட பாரதி. அவர் அதற்குமுன் தாடி வைத்திருந்ததாகக் கேள்வி. நான் பார்த்த தில்லை. உட்காரும் போதெல்லாம் மண்டிபோட்டுப் பிணம் விறைத்தாற் போல் விறைத்து விடுவார். விழித்த கண் விழித்தபடியேயிருக்கும். சாப்பாடு மிகவும் சொற்பம், கூப்பாடு அதிகம். அவரது பிரசங்கம் ஒரு தனிவகை. அவரது வாக்கில் இனிமை இல்லை, மென்மை கிடையாது. ஆனால் கடுமையுண்டு, கோபம் துள்ளும். பொதுவாகச் சொல்லப்போனால் வழவழ கொழகொழ என்ற விளக்கெண்ணைய்ப் பேச்சை பாரதி வெறுத்தார். தெளிவு, எளிமை, வலிமை, ஒளி இவைகளே அவரது பாஷையின் நடை.'

இப்படி பாரதியை நமக்குக் காட்டிய யோகியார் வேறொரு இடத்தில் இப்படிக் கூறுவார். 'பாரதி பிறப்பில் பிராமணர், பிரஹசரணம், ஆனால் அவரது முகத்தில் பிராமணக்களை சிறிதுகூட இல்லை. வெறியினால் சிவந்த அகன்ற விழியும், துடிக்கும் மீசையும் போர்வீரனை ஒத்திருக்கும். பார்த்தவுடனேயே அவரை பிராமணரென்று கண்டுபிடிக்க முடியாது. உடல் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் கூட பாரதி என்கிற பிராமணன் வேறு, மற்ற பிராமணர்கள் வேறு. மற்ற பிராமணர்களுக்கு இயற்கையாகவுள்ள அச்சம் இவரிடம் சிறிதுகூட இல்லை. இவர் தீட்டு, மடி, விழுப்பு, ஆசாரம் முதலிய தடபுடல்களையெல்லாம் வெறுத்தார். சாதிப்பாகுபாட்டை வேரோடு வெட்டி வீழ்த்த விரும்பினார். பெண்களை பரமமாதா காளியாகவே கொண்டாடினார்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com