லாஸ் ஏஞ்சலஸ் ஒளவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா
ஜனவரி 20, 2008 அன்று பொங்கல் திருவிழாவை ஒளவைத் தமிழ் வகுப்பு மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் மலிபு ஹிந்துக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இந்த ஆண்டு தேவாரத்தை மையமாக வைத்து அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய சமயக் குரவர் மூவரின் வரலாற்றிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து மாணவ மாணவியர் நாடகங்களை மேடையேற்றினர். செந்தமிழில் வசனம்பேசி தத்ரூபமாக நடித்த தைக் கண்டு வந்தோரும் பெற்றோரும் பெருமிதம் கொண்டனர்.

ஒளவைப்பிராட்டி அருளிய 'பாலும் தெளிதேனும்' என்னும் விநாயகர் துதியோடு நிகழ்ச்சியைத் தொடங்கி, தேவார நாடகங்கள், தமிழ் மொழியைப் பற்றிய 'தமிழ்க் கதம்பம்' நாடகம், பாரதியாரின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடல், முருகனைப் போற்றும் 'அறுபடை வீடமர்ந்த திருமுருகா' ஆகிய வற்றுக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா நிறைவெய்தியது. 'தமிழ்க் கதம்பம்' நாடகத்தின் மூலம் இவ்வருடம் முதன்முறை யாகப் பெற்றோரும் மேடையேறி மெரு கூட்டினர். இந்நாடகத்தில் கோவை, இலங்கை, செட்டிநாடு, பாலக்காடு, விருதுநகர், சென்னை ஆகிய இடங்களில் பேசப்படும் தமிழை மையமாக வைத்துப் பெற்றோர்கள் நடிக்க குழந்தைகள் அதை ரசித்து மகிழ்ந்தனர்.

கரும்பும் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானைகளும் அரங்கத்தில் ஆங்காங்கே காட்சியளித்தன. லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ளோர் தமிழ் கற்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: saamimalai@yahoo.com

ஜெயஸ்ரீ கல்யாண், அலமேலு அருணாசலம்

-

© TamilOnline.com