ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு இளங்கோவனுக்கு வாய்ப்பூட்டுப் போட்டார்.

ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் இப்போது தி.மு.க. ஆட்சியமைத்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் 'வெளியிலிருந்து ஆதரவு தருவோம்' என்றே கூறின.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பை நழுவவிடச் சில காங்கிரசார் விரும்பவில்லை. 'காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் இருக்கும்போது, தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் பதவி கேட்பதில் என்ன தவறு?' என்றே பல காங்கிரஸ் தொண்டர்கள் கேட்கின்றனர்.

காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கூடி 'தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கும் பங்கு வேண்டும்' என்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். தி.மு.க. தரப்புக்கு இதனால் அதிர்ச்சி ஏற்பட்டபோதும் இதுவரை மெளனம் காத்து வருகிறது.

விரைவில் தில்லியில் மன்மோகன்சிங், சோனியா ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் மு. கருணாநிதி இதுகுறித்து அவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com