ஆக்ஸ்போர்டில் பண்டிதரும் மெளஸ்வியும்
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு

1997 அக்டோபரில் ராணி எலிசெபத் இல்லத்தின் கல்வி உதவி நிதி கிடைத்ததும் நான் ஆக்ஸ்போர்டுக்குப் புறப்பட்டேன். அங்குள்ள வடக்கு ஆக்ஸ் போர்ட் கடல்கடந்தோர் மையத்தில் தங்கினேன். (North Oxford Overseas Centre என்பதன் சுருக்கம் தான் NOOC). லாப நோக்கமில்லாத இந்த நிறுவனம் ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. கடல் கடந்து வந்து கற்பவர் களுக்குத் தங்க இடமளிக்கும் இது, சர்வதேச வாழ்க்கை முறையில் அவர்களுக்கு ஓர் உண்மையான அனுபவத்தைத் தருகிறது.

எனது அறை 107ம் எண் மாளிகையில் தரைத்தளத்தில் இருந்தது. அது இந்திய உயரதிகாரிகள் தங்கி இருந்த மிக அழகான வேலைப்பாடுகள் கொண்ட அற்புதமான இடமாகும். அறையிலிருந்தபடியே, வந்து போகிறவர்களை நான் பார்க்க இயலும் விதத்தில் அது அமைந்திருந்தது. முப்பது தேசங்களிலிருந்து வந்த சிறந்த மனிதர்களால் அம்மாளிகை நிரம்பி இருந்தது. அவர் களுடன் அற்புதமான வாழ்க்கையை நான் பகிர்ந்து கொண்டேன். இங்கு ஆரம்பத்தில் முற்றிலும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பாக இருந்த இருவர் பின்னர் எனது மிகச் சிறந்த நண்பர்களானார்கள். ஒருவர் பண்டிதர், மற்றவர் மெளல்வி. பண்டிதரின் பெயர் பேராசிரியர் தாஸ். இந்தியாவில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சமஸ்கிருதப் பேராசிரியர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசைக் கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மெளல்வி, பேராசிரியர் ஜியா. பாகிஸ்தானிலுள்ள பெஷாவரில் (முன்னாள் புருஷபுரம்) இருந்து வந்திருந்த இஸ்லாமிய தத்துவப் பேராசிரியர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய தத்துவக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இருவரும் ஆழ்ந்த மதப் பற்றுள்ளவர்கள். தத்தமது ஆராய்ச்சிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தமது வேலை தவிர அவர்களுக்கு வேறு கவனம் இல்லை. அவர்கள் இருவரும் ஒத்தகுணம் உடையவர்கள் என்பது படிப் படியாகத்தான் எனக்குத் தெரியவந்தது. ஆரம்பத்தில் விலகி இருந்த அவர்கள், இறுதியில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மதித்து, அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தனர்.

ஜியா ஒருநாளைக்கு ஐந்துமுறை தொழுகை நடத்தினார். நான் அவரது அறைக்குள் எப்போது நுழைந்தாலும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தவாறுதான் இருப்பார். தாஸ் நேரம் தவறாதவர். யோகாப் பியாசத்தையும், தியானத்தையும், நூல்கள் படிப்பதையும் தவறாமல் குறித்த நேரத்தில் செய்துவிடுவார். ஜியா, ஒரு நல்ல மனிதர். அக்கறையான கணவர். தன் நான்கு குழந்தைகளையும் நேசிக்கும் தந்தை. அடிக்கடி தன் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைத் தவறவிட்டு விடுவார். இதற்கு மாறாக தாஸ் தன் உபகாரச் சம்பளத்தின் பெரும்பகுதியை இந்தியாவில் உள்ள தன் சிறு பெண்ணுடன் தொலைபேசியில் பேசுவதற்கே செலவழித்து விடுவார். இருவருமே பெருந்தன்மையான குணசீலர்கள். ஒரு நிகழ்ச்சியின் போது ஒரு பாட்டுப் பாடும்படி ஜியாவைக் கேட்டுக் கொண்டோம். பஷ்டோ காதல் கீதம் ஒன்றைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் திளைக்க வைத்தார். எங்கள் இல்லத்தில் 'இந்திய இரவு' ஏற்பாடு செய்தபோது (இது உண்மையில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா இரவாகியது) ஜியாவை 'ஹக்கீம் தாராசந்த்' ஆக நடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். உற்சாகத்துடன் ஒத்துகொண்டார். தாஸ் நடனமாடி எங்களை மகிழ்வித்தார். எல்லோருக்குமாக சமையல் செய்து பிரியத்துடன் வழங்குவது தாஸின் வழக்கம். அவரது விருந்தோம்பலில் உணவு அருந்தாத இந்திய ஆய்வாளர்கள் ஒருவர்கூட ஆக்ஸ்போர்டில் இல்லை எனலாம்.

ஜியாவுக்கு பிடித்தமான வரலாற்றுத் தகவல்களில் ஒன்று, மத்திய காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் அரசரான 'மன்னர் ஆர்தர்' இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார் என்பது. (எந்த ஆங்கில அறிஞரும் இதை நம்ப வில்லை). ஆக்ஸ்போர்டிலுள்ள அரும் பொருட்காட்சி சாலையில், இதற்கான சான்றாக ஆர்தர் மன்னரால் அச்சிடப்பட்ட நாணயம் இருப்பதாகவும், அதில் 'அல்லா' என்ற புனிதப் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைத் தான் கண்டுபிடித்திருப் பதாகவும் ஜியா சொன்னார். அவர் மூன்று மாத ஆய்வுப் பணிக்காகவே அங்கு வந்திருந்தார். வேலை முடிந்து உடனே பாகிஸ்தான் திரும்பிவிட்டார். ஆனால் மீண்டும் அவர் கௌரவப்பணிக்காக

ஆக்ஸ்போர்டுக்கு அழைக்கப்பட்டார். என்னை வழியனுப்பும் சரியான நேரத்துக்கு அவர் ஆக்ஸ்போர்ட் திரும்பிவிட்டார். பாகிஸ்தானின் 50ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவிற்கு நல்லெண்ண வருகையாக ராணி எலிசபெத் வந்திருந்த சமயம் அவர் ஆற்றிய சொற்பொழிவில், ஜியாவின் பணியைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். தாஸின் பணியும் மிகவும் மெச்சத் தகுந்த தாகப் பேசப்பட்டது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்த அவர் அழைக்கப்பட்டார். தாய்லாந்து, கொரியா, இங்கிலாந்து முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு சமஸ்கிருதம் போதிப்பதில் கணிசமான நேரத்தைச் செலவிட்டார் தாஸ். ஒரிஸாவைச் சேர்ந்த துறவியும் தத்துவஞானியுமான அவரது குருநாதர் பற்றியும் தாஸ் ஒரு நூல் எழுதியிருக்கிறார். என்னை வழியனுப்ப ரயில் நிலையம் வந்து கண்ணீர் மல்க எனக்குப் பிரியாவிடை கொடுத்தார் தாஸ். நான் எனது நண்பர்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் மெளல்வியும் தாஸ¤ம் எனது இதயத்தின் மகிழ்ச்சிகரமான ஓர் இடத்தில் எப்போதும் இருக்கிறார்கள்.

பருவத்துக்கோர் அழகு காட்டும் பான்பரி சாலை

நான் லண்டன் சென்று சேர்ந்தபோது எனது நாத்தனார் இந்திரா, விமான நிலையத்தி லிருந்து என்னை நேரடியாக ஆக்ஸ்போர்ட் NOOCக்குத் தான் அழைத்துச் சென்றார். வடக்கு ஆக்ஸ்போர்டிலுள்ள பான்பரி சாலை ஆக்ஸ்போர்டிலுள்ள மிக அழகான சாலை. இந்தச் சாலை விக்டோரியா காலத்திய பாரம்பரியமிக்க மாளிகைகள், அழகான நிழற்சாலைகள் ஆகியவற்றைக் கொண்டது.

அங்கே முதல்நாளே என் மனத்தை மிகவும் நெகிழ வைத்த அனுபவம் நடந்தது. என் மேஜையின் மீது, மூடப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் நிறைய அரிசியும், தேநீர், காபி, பிஸ்கட், கொரிப்பதற்கான தின்பண்டங்கள், பழங்கள், காய்கள், இந்திய முறையில் சமைப்பதற்குத் தயாராகச் சிலபொருள்கள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன. கடல் கடந்து வரும் ஓர் ஆராய்ச்சியாளரை வரவேற்க வைக்கப்பட்ட அன்பளிப்புகள் அவை. உள்ளூர் மாதா கோவிலிலிருந்து வந்திருந்தவை. ஒரு பூங்கொத்தும் ஒரு குழந்தையின் கிறுக்கலில் எழுதிய வரவேற்புத் துண்டுக் காகிதமும் இருந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதலாகப் பல்கலைக்கழகத்தில் பாடம் போதிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். திருமணம் செய்து கொண்ட போதகர்கள் குடும்பத்துடன் குடியிருப்பதற்காக பான்பரிசாலையில் வீடுகள் கட்டப்பட்டன. ஆக்ஸ்போர்டில் வீடுகளுக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டதனால் போதகர்கள் இன்று சிறிய வீடுகளில் வசிக்கின்றனர். பாரம்பரியக் கட்டிடங்களில் இப்போது பல்கலைக் கழகங்களின் முக்கியத்துறைகள் இயங்கி வருகின்றன. ராணி எலிசபெத் இல்லம் NOOCல் இருந்து பதினைந்து நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. பான்பரிசாலையின் ஆரம்பத்திலிருந்து மேலும் ஐந்து நிமிட நடைதூரத்தில் உள்ளது மாநகர மையம்.

ராணி எலிசபெத் இல்லம் செல்லும் சாலையில் நடப்பது இன்பகரமானது. பழைய மாளிகைகள் கண்களுக்கு அரிய விருந்து. மானுடவியல் துறையைச் சூழ்ந்த மரங்கள் மிக அழகாக இருக்கும் இந்தச் சாலையில் போகும்போது இந்த மாளிகைகளை நான் படம் எடுத்துவிடுவேன். பருவத்துக்குப் பருவம் இயற்கைக் காட்சியிலும், மரங்களிலும் ஏற்படும் நிறமாற்றம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. நான் அக்டோபரில் அங்கு சென்றபோது மரங்களும் புல்லும் பசுமையாக இருந்தன. பிறகு மெதுவாக அவை மஞ்சள், பழுப்பு நிறங்களாக மாறிவிட்டன. பிறகு திடீரென இலைகளே இல்லாமல் போய் விட்டது. டிசம்பரில் ஆக்ஸ்போர்டில் பனிப்பொழிவு தொடங்கியதும் எல்லாமும் வெண்மை நிறம் பெற்றுவிட்டன. கண்ணுக் கினிய காட்சி தரும் பான்பரிசாலை பான்பரியில் முடிந்து செயின்ட் கில்ஸ் மாதாகோவில் அருகில் ஆரம்பமாகிறது. மாநகரின் மையமும் வடக்கு ஆக்ஸ்போர்டும் சந்திக்கும் இடத்தில் உள்ள மாதாகோவில் மிக முக்கியமான இடம். இங்கிருந்த புதிய பாதிரியார்களுக்கான விடுதி பாரம்பரிய ஓட்டலாகி விட்டது. வடக்கு அணிவகுப்பு மைதானத்திலுள்ள மாதாகோவில் சுயேச்சை யானது. எப்போதும் நடமாட்டம் அதிக மாகவே இருக்கும்.

ராணி எலிசபெத் இல்லத்தின் அருகே இருந்த மாதாகோவிலில் மாலை ஆறு மணிக்கு 'மாலைநேரப்பாடல்'களுக்காக மணி அடிக்கப்படும். நான் அடிக்கடி மாதா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் உட்கார்ந்துவிடுவேன். கோவிலையொட்டி அங்கு ஒரு சிறு இடுகாடு இருந்தது. அதில் 'யுத்த நினைவுச் சின்னம்' இருந்தது. போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதற்கு ஏற்ற அழகான இடம் அது. சாலையைக் கடந்தால் ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து தெரியும். தொண்டை வறண்டு போனால் தாகசாந்தி செய்துகொள்ளச் சில அடி தூரம் நடந்தால் போதும், எதிர்ப் பக்கத்தில் பழரச உணவு விடுதி. அதில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு மிகவும் பெயர் பெற்றது. அங்கு அழகான மதுக்கடைகளும் உள்ளன.

பான்பரிசாலை என்பது ஆக்ஸ்போர்டு நகருக்கு அருகிலுள்ள பான்பரி என்னும் சிறிய நகரத்துக்குச் செல்லும் சாலைதான். இதை ஆஸ்கார் வைல்டின் 'இம்பார்ட்டன்ஸ் ஆப் பீயிங் எர்னஸ்ட்' என்ற இன்பியல் நாடகத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அந்நாடகத்தில் 'பான்பரியிஸம்' ஒரு அதிசயச் சம்பவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஆக்ஸ்போர்டு கல்லூரிகளில் பெண்களை அனுமதிக்காததைக் குறிப்பிடுவது. இன்று பெண்கள் எங்கும் நிறைந்துள்ளனர். சில துறைகளில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். முதலில் போதகர்கள் மணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பிறகு பெண்களும் மாணவிகளாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கப்பட்டுப் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் கல்வி போதிக்க அனுமதிக்கப் பட்டனர். இப்போதெல்லாம் பெண் போதகர்களும் அதிகமாகவே இருக்கிறார் கள். மாதாகோவில் அதிகாரியாகவும், ஆக்ஸ்போர்ட்-புரூக்ஸ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் பெண்கள் இன்று பதவி வகிக்கின்றனர். அநேக இளைஞர் களும், யுவதிகளும் பான்பரி சாலையில் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல் கிறார்கள். 'பான்பரியிஸம்' பழங்கதை ஆகிவிட்டது.

ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com