அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்
அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூஜெர்ஸியில் அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழாவை நடத்த உள்ளன. இவ்விழாவில் நான்கு நாடகங்களை மேடையேற்ற உள்ளார்கள். முதலிரு நாடகங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஹூஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் நாடகக் குழு 1987லிருந்து 21 ஆண்டுகளாகச் சளைக்காமல் பல நாடகங்களை அளித்து வரும் நாடகக் குழு. இதனை நிறுவியவர் சாரநாதன், 1982லிருந்தே நாடகங்களில் நடித்து வரும் இவர் வெள்ளி விழா கொண்டாடியாயிற்று. மீனாக்ஷி தியேட்டர் ஸின் 21 நாடகங்களில் சில: காசேதான் கடவுளப்பா (1988), சம்சாரமா சன்யாஸமா (1992), உண்மையே வெல்லும் (1996), பெரிய மனுஷன் (2001), நிறம் மாறும் கோலங்கள் (2005), மெகா ஸீரியல் (2006), வினோதய சித்தம் (2007).

நியூஜெர்ஸியில் மே மாதம் நடக்கவிருக்கும் முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவில் மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினர், பி.கே. மூர்த்தி எழுதிய 'தில்லு முல்லு' என்னும் அதிரடி நகைச்சுவை நாடகத்தை சாரநாதன் இயக்கத்தில் மேடையேற்ற உள்ளார்கள்.

தில்லு முல்லுவின் கதை இப்படிப் போகிறது: பிரபல நடிகை திடீரென மாயம். குத்தகை பாக்கி தராத கிராமத்து வாலிபன் படுகொலை. இரண்டு விஷயங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தின் இருவர்... அல்லது ஒருவரா... இல்லை, இல்லை அது இரண்டு பேர்... அல்லது இரண்டு பெயர்! ஒரே குழப்பந்தான் போங்கள்! இந்தக் குழப்பத்தை அடிப்படை யாக வைத்து நம்மை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கப் போகிறது தில்லு முல்லு.

ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவைச் சந்திக் கலாம் வாருங்கள். 1960-80 வருடங்களில் சோ, பாலச்சந்தர், கிரேஸி மோஹன், ஒய்.ஜி. மஹேந்திரன் போன்றவர்களின் நாடகங்களை ரசித்துக்கொண்டு சென்னையில் வளர்ந்த நண்பர்கள் சிலர் ஒன்று கூடி, அமெரிக்காவில் நல்ல நாடகங்களை நடத்தும் ஆர்வத்துடன் ஆரம்பித்த குழு ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ். நாடகங்கள் மூலம் திரட்டும் நிதியனைத்தையும் சமூக சேவை அமைப்புக்களுக்கே அளித்து வருகிறார்கள்.

ஒவ்வோராண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு நாடகத்தை மேடை யேற்றிக் கொண்டாடுகிறார்கள். தவறாமல் ஒவ்வொரு முறையும் நாடக ஆசிரியருக்கு $500 அன்பளிப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தமிழ் நாடகவிழாவில், ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவினர், தலைசிறந்த நாடக ஆசிரியரான மௌலி (Mouli) எழுதிய 'அவன் அவள் அது' என்னும் சிறந்த நாடகத்தை, ரமணி இயக்கத்தில் தங்கள் 15-ஆம் நாடகமாக மேடையேற்றுகிறார்கள். இது பெரும் வெற்றியடைந்த நாடகம் என்பதும், மௌலியே இதை மேடையேற்றுவது எளிதல்ல என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் கதை இப்படிப் போகிறது: அப்பா, அம்மா, மகள், மூவர் உள்ள குடும்பம். தந்தை தன் வேலையிலேயே மூழ்கிவிடுகிறார். தாய் தனிமையில் வேகிறார். மகளைக் கவனிப் பாரில்லை. மகளுக்கு உடல்நிலை சீரழிந்து உயிர்போகும் நிலை வந்துவிடுகிறது. பெற்றோர் அவளைக் காப்பாற்றப் பாடுபடு கின்றனர். இறுதியில் தூக்கு மேடைக்குக் காத்திருக்கும் கைதியால் அவள் காப்பாற்றப் படுகிறாள். இந்தப் பயணத்தின் மூலம் மூவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்து, தங்கள் குடும்பச் சிறப்பை உணர்கிறார்கள் என்பதை மிகச் சுவையான நாடகமாக அமைத்திருக்கிறார் மௌலி.

விழாவில் பங்குகொள்ளும் பிற குழுக்களைச் சந்திக்கவும் நாடகக் கதைகளை அறியவும் தவறாமல் அடுத்த இதழ்த் தென்றலைப் படியுங்கள்.

விழா நிர்வாகிகளும் பங்கேற்கும் குழுக்களும், விழா நாடகங்கள் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். அத்தகைய தயாரிப்புக்கும், மேடையமைப் புக்கும், குழுக்களின் பயணத்துக்கும் மிக அதிகம் செலவாகிறது என்பதால், நன் கொடைகள் மிக உதவியாக இருக்கும்.

முதலாம் அமெரிக்கத் தமிழ் நாடக விழா நிர்வாகக் குழு, வருங்கால நாடக விழாக்களில் பங்கேற்க விழையும் குழுக்களையும், நன்கொடைகளையும் தொண்டர்களையும் வரவேற்கிறது. இவற்றின்
பொருட்டுத் தொடர்பு கொள்ள:

www.kreacreations.com, dramanujam@yahoo.com
www.stagefriendsusa.com, thers@verizon.net

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com