ஸ்தலங்கள்
'என்ன சார் ரொம்பும் பசிக்குதோ... ரொம்ப நேரமா சாப்பாட்டுக் கேரியர் பையனுக்காகக் காத்திருட்டிருக்கீங்க போல் இருக்கே.''

சாப்பாட்டு நேரம்தான். ஆனால் அதற்காகக் காத்திருக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என்று பட்டது அவனுக்கு. கேட்டவன் பக்கத்து அறைக்காரன். இன்னும் பெயர்கூட மனத்தில் பதியவில்லை. பக்கத்து, பக்கத்து, பக்கத்து அறைக்காரர்கள் என்று பலர் அறிமுகமாகி விட்டார்கள். எல்லோர்க்கும் காலையில் முதல்முறையாகப் பார்க்கையில் ''ஹலே'', ''குட்மார்னிங்'' சொல்வதோடு சரி. எல்லாம் முடிந்து விட்டதாய் அடங்கிப் போக முடிகிறது. சாயங்காலங்களில் அவர்கள் எத்தனை மணிக்கு அறைகளுக்குத் திரும்பு கிறார்கள் என்பது தெரியாது. பார்க்க நேரிட்டதில்லை. அப்படிப் பார்க்க நேரிட்டாலும் இன்னுமொரு ''ஹலோ''தான்.

ஆனால் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பான்மையாக அறிமுகமானோர்க்கு ஹலோ சொல்லி விட்டதாய் நினைத்தான். எல்லோரையும் வீங்கின முகங்களுடன்தான் பார்த்ததாக ஞாபகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிதமிஞ்சிய தூக்கம். இந்த ஒரு மணி நேரம் வரையிலும் தூக்கம் தொடர்ந்து கொண்டு இருந்ததற்கான அத்தாட்சியாக அப்போதுதான் ஒருவன் வாய் ஒரு வெள்ளை நுரையுடனும், பிரஷ்ஷ¤டனும் அவனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்.

அந்த 'மேன்சனில்' இந்த அறைதான் வேண்டும் என்று குறிப்பாய் அவன் கேட்டுப் பெறும் அளவிற்குக் காலியான அறைகள் இல்லாமலிருந்தது.

''பாத்ரூம், லெட்ரின் பக்கமா, அட்டாச்சுடு மாதிரி இருக்கிற மாதிரிதான் எல்லாரும் கேப்பாங்க. நீங்க என்னன்னா வேண்டாங் கறீங்களே..''

##Caption##ஆனால் பாத்ரூம் அருகிலான அறைதான் அவனுக்குக் கிடைத்தது. எப்போதும் சடசடவென்று நீர் ஒழுகும் சப்தம். காறித் துப்பும் இருமல் சத்தம். வார்த்தைகளுக்குக் குறைவில்லை என்பது போல் சளசளவென்று சப்தங்கள். பாத்ரூமில் யாரும் இல்லாத போதும் இந்த வகையான சப்தங்களை அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

''கீதாபவனுக்கு கேரியர் பையன் வந்துட்டான் சார். இங்க வந்துருவான் சீக்கிரம்'' பக்கத்து அறைக்காரன்தான் மீண்டும் அவனைப் பார்த்துச் சொன்னான். பதில் சொல்லாமல் இருப்பது நன்றாக இல்லை என்று பட்டது அவனுக்கு.

''பசியொன்னும் இல்லை சார். சும்மாதான் வேடிக்கை பாக்கறேன்'' இதைச் சொல்லி விட்டு அவனுக்குள் சிரித்துக் கொண்டான். இங்கே எதை வேடிக்கை பார்க்க? மேன்சனின் காம்பவுண்ட் சுவரையொட்டி இன்னொரு மேன்சன் இருந்தது. எதிரில் பார்த்தால் இரு அடிகளுக்கான இடை வெளிக்குப் பின் அந்த மேன்சனின் சுவர்தான் தெரியும். வலது பக்கம் சென்றால் டெலிபோன் எக்சேஞ்சின் காம்பவுண்ட் சுவர்தான். வெகு உயரமான மைக்ரோவேவ் டவர் தெரியும். அதுவும் அவனின் அறை முதல் தளத்தில் என்பதால் தூரப் பார்வையில் ஏதாவது படும். கீழ்த்தளத்தில் இருந்திருந்தால் சுற்றிலும் இரண்டடி இடைவெளிகளில் நான்கு சுவர்கள்தான்.

சுவர்களில் பார்க்க என்ன இருக்கிறது? சுற்றி உள்ள மற்ற கட்டிடக்காரர்களுக்கு அவனின் மேன்சனை நோக்கி இருக்கும் சுவர்கள் வெளிச் சுவர்கள்தான் என்பதால் பெரிதாய் அவற்றைப் பராமரிப்பதில் அக்கறையில்லைதான். காரைகள் பெயர்ந்து செங்கற்கள் தெரியும். சுவர்கள், சுண்ணாம்போ, வர்ணங்களோ சிதைந்து போனதாய் இருக்கும். மழை பெய்து கீற்றுகளும், கோடுகளும், தாரைதாரையாய் வரிகளும் இருக்கும்.

வேடிக்கை பார்ப்பதென்றால் இவற்றைத் தான் பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் பார்வையை மழை ஏற்படுத்தின வரிக்கோடு களின் மேல்தான் பதிக்க வேண்டும். கூர்ந்து கூர்ந்து பார்த்து அதில் ஏதாவது உருவங்களைத் தேட வேண்டியிருக்கும். அந்த உருவங்களை, மனிதர்களாய் - மிருகங்களாய் இனம் கண்டு கொள்ளலாம். அவற்றுடன் மனதுள் பேசலாம். பிரக்ஞை தவறி மனதுள் அவற்றுடன் பேசுவதற்குப் பதிலாய் வாய் வார்த்தைகளை வெளிவிட்டால் வெட்கமாகப் போய்விடும். பேசுவதற்கு அறைக்குள் நிரம்ப மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லா மனிதர்களிடமும் பேசுவதற்கு விஷயங்கள் இருக்கிறதா என்று யோசித்து ''ஹலோ'' சொல்வதற்கு மட்டும் பழகிக் கொண்டான்.

பேச்சுகள்! பேச்சுகள்! எல்லாம் அலுத்துப் போய்விட்டதாகத் தோன்றியது. நினைத்துப் பார்க்கையில் ஒருவகையில் அவனும் நல்ல பேச்சாளன்தான். ஆனால் இப்படி நேரத்தை தின்பதற்காய் பேசுவதாய் அவன் நினைத்த தில்லை. யூனியன்காரன் என்றாலும் பேச அவசியம் ஏற்படுகிற போது நிறையப் பேசுவான். சாப்பாட்டை மறந்து, வெறும் டீயை மட்டும் குடித்துக் கொண்டு பேசுவான்.

இப்போது பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என நினைத்தான். யூனியன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், யூனியனோடு இணைப்பான அரசியல் விஷயங்களையும் சலிக்காமல் பேசுபவன் இங்கு வந்த ஒரு வாரமாய் ஓய்வு எடுப்பது போலச் சும்மாவே இருந்தான். அவனிடம் இருக்கிற சில புத்தகங்களை அடையாளம் கண்டு கொண்டவர்கள் மட்டும் ''என்ன சார் யூனியனிஸ்டா.. நிறையப் பிரசங்கம் கேட்கலாம் இந்த ரூம்லே'' என்று சொல்லியிருக்கிறார்கள். அவன் சிரிப்புடன் ''யூனியனிஸ்ட்ன்னா பிரசங்கங்கள் பண்ணித் தான் ஆகணுமா..''

''சந்தா வசூலிக்கவாச்சும் பிரசங்கம் பண்ணணும்.''

இது எத்தனையாவது டிரான்ஸ்பர் என்று யோசித்தான். எட்டாவது என்பது சரியாய் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு முறையும் டிரான்ஸ்பரில் போகிற இடத்தில் இது எத்தனையாவது என்று யோசித்து யோசித்து சரியான கணக்கை மனதில் கொண்டிருப் பதாய் நினைத்துக் கொண்டான்.

''யூனியனை விட்டுத் தொலைங்க. நிம்மதியா இருக்கலாம்'' கனகம் அவன் தினந்தோறும் இரவுகளில் காலம் கடந்து வருகையில் அழுது தீர்ப்பாள். உண்ணாவிரதம், தர்ணா என்ற நாட்கணக்கில் வீட்டிற்குச் செல்லாத போதும் இப்படித்தான். தொழிற்சங்கக்காரன் தன் மனைவியை உறுதி உள்ளவளாக மாற்ற வில்லை என்ற விமர்சனத்தை பலதரம் பல நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறான்.

''நான் கல்யாணம் பண்ற இளம் வயசிலே நான் யூனியனிஸ்டா இல்லே. பெரியவங்க பண்ணி வெச்ச கல்யாணம். சாதாரணப் பொண்ணு அவ. அவளோட சாதாரண நிலையிலிருந்து என்னோட போராட்டங் களோ, என்னைச் சுற்றி உள்ளவங்களோ, தொழிற்சங்க மூலமோ, அரசியல் சித்தாந்தமோ அவளைப் பாதிக்கலே. இது வருத்தமான விஷயம்தான். எப்பிடிப் பாதிக்காம இருக்குங் கறது கூட அதிர்ச்சியா இருக்கு. கேட்டப் பெல்லாங்கூட இதெல்லாம் உங்களோட இருக்கட்டும். நானாச்சும் நிம்மதியா இருக்கேன்னுதான் சொல்லியிருக்கா. அவளை என்னோட இயல்புகளுக்கு தக்கமாதிரி மாத்தாதது குற்றம்தான். நான் போராட்ட உணர்வுகள் பத்திப் பண்ற பிரசங்கங்கள் என் வீட்டு வாசற்படிக்குள்ளாற போறதில்லங்கறது எனக்கு வெக்கமாத்தான் இருக்கு..''

ஆனால் எவ்வளவு மனச்சங்கடங்கள் இருந்தாலும் கனகத்தின் சமையலில் அவன் மயங்கித்தான் கிடந்திருக்கிறான். எல்லா வகைச் சோர்வையும் அமுக்கி விடுவதற்கே ஆனது அவளின் சமையல் என்று நினைத் திருக்கிறான். ஆனால் வெளியில் தங்கி யிருக்கும் போது சாப்பாட்டிற்காய் படும் அவஸ்தைகளும், அதனாலான உடல் உபாதைகளும் அவனைக் கண்களில் நீர் துளிர்க்கச் செய்து விட்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில், அவனுக்காய் வரப்போகும் கேரியர் சாப்பாடும் அவனுக்குச் சீக்கிர மாகவே அலுப்படைய வைத்தது நினைவுக்கு வந்தது. சாப்பாட்டைப் போலவே. மரங்களற்ற இடங்களில் பெட்ரோல் காற்றும் கூடத்தான்.

மேன்சனின் முதல் தளத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து அவன் மரங்கள் தென்படும் நகரத்தின் ஏதாவது பகுதியோ, அருகாமையோ, தென்படுகிறதோ என்று பார்த்ததுண்டு. எதுவும் தென்பட்டதில்லை. பஸ்ஸில் செல்லும்போது அங்கங்கே தென்படுவது ஆறுதல் அளித்திருக்கிறது.

மரங்கள் அசைந்து அனுப்பும் காற்றை உள்ளிழுக்கிற வாய்ப்புகள் அற்றுப் போய்விட்டது தெரிந்தது. மின்விசிறியின் உஷ்ணமான காற்றுத்தான் எப்போதும் ஆசுவாசப்படுத்தும், சின்ன வயதில் மரங்கள் ஊடேயே காலம் கழித்தது நினைவுக்கு வந்தது.

அவன் அப்பா மரம் ஏறுகிற தொழிலாளி. அவர் வேலை செய்து வந்த தென்னந் தோப்பில் ஒரு பகுதியில் இருந்த குடிசைதான் அவனின் வீடாக இருபது வயதுவரை இருந்திருக்கிறது. மூச்சைச் சுகமாய் இழுத்திழுத்து விரிந்த மார்புகள், பறவை களின் வெவ்வேறு ஒலிகளை ரசித்து உள்ளுணர்ந்த மனம்.

''நீ மரம் ஏறக்கூடாது.. கால்லை இந்தக் கயிறை கட்டக்கூடாது... வெளியே தப்பிச்சுப் போயிடு..''

''சொகமா இருக்கப்பா.. நல்ல காத்தும், நிம்மதியும்...''

''சாணானா பொறந்திருக்கலாம், ஆனா சாணானாவே இருக்கக்கூடாது. தப்பிச்சு...''

தப்பித்து வேலைக்கென்று நகரங்களையும், டவுன்களையும் கடந்தபோது நச்சுக் காற்றால் மூச்சுத் திணறுவது தெரிந்திருக்கிறது. பிறகு மூச்சுத் திணறலுடனான சுவாசம்தான் இயல்பாகிப் போயிற்று அவனுக்கு.

##Caption##வேலைக்கு மாற்றலாகிப் போன வெவ்வேறு இடங்களையும் மரங்களைத் தேடியே போயிருக்கிறான். மரங்கள் இல்லாத வீட்டை வெறுத்திருக்கிறான். ஆனால் மரங்களும், புல்வெளிகளுமான பரப்பில் வீடு கிடைக்க அப்பாவைப்போலச் சாதாரணத் தொழிலாளி யாக இருந்திருக்கலாம். அல்லது முன்தலை முறை சொத்துக்காரர்களின் வாரிசாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது அவனுக்கு.

அவன் அப்பா மரம் ஏறுகையில் - பனை மரத்தின் உச்சியிலிருந்து கால்தவறி விழுந்து இறந்திருக்கிறார். ''இந்த மூச்சுத் திணறலை யெல்லாம் பாக்கறப்போ அப்பிடியொரு உச்சியிலிருந்து சுவாசத்தை முழுசா உணர்ந்து அனுபவிச்சுட்டு சாகணும்னு ரொம்ப ஆசை வந்திட்டிருக்கு..'' அடுத்த முறை பஸ் வசதிகூட இல்லாத ஒரு கிராமத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

சில வருஷங்களுக்கு முன் அவன் பார்த்த ஒரு ஓவியக் கண்காட்சியின் ஓவியமொன்று அடிக்கடி அவன் நினைவுக்கு வரும். 'மனிதர்களற்ற இயற்கை' என்பது தலைப்பு. ஆனால் அவனின் அலைச்சலில் 'இறக்கை யற்ற மனிதனாய்' அவன் முழு உருப் பெற்றிருப்பதை நினைக்கையில் வருத்தமே மிஞ்சியிருக்கிறது அவனுக்கு. சூரியனைக்கூட யாரோ திணித்து இயக்கி ஒளியையும், வெளிச்சத்தையும் வெளிக் கொணர்வதாய் அடிக்கடி நினைப்பு வரும்.

கனகத்திற்கு மரங்களோ, இயற்கையோ, யூனியன் விஷயங்களோ, அவனின் அலுவலகச் சிக்கல்களோ எப்போதும் புரியாது. அவன் எப்போதும் அவளுடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான். ''அவனற்ற அவள்'' எப்போதும் கோபித்த தில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளால் அவன் அடிக்கடி பந்தாடப்படுவதுதான் அவளை எப்போதும் பாதித்திருக்கிறது.

குனிந்து பார்க்கையில் நடமாடுகிறவர்கள் உயர அளவில் சிறுத்து ஊர்ந்து கொண்டிருப்பதுபோல் பட்டது. மூச்சுத் திணறத் திணற எல்லோரும் உயரங்களை குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தான். ஐந்தாறு கேரியர்களை சுமந்தபடி வந்து கொண்டிருந்த பையன் கேரியர்களின் கனம் தாங்க முடியாமல் தரையோடு அமிழ்ந்து தலையை மட்டும் மேலே உயர்த்தி வருவது போல் தோன்றியது.

மின்விசிறியின் காற்றை இன்னும் அதிக மாக்கலாம் என நினைத்தான். ஆனால் ரெகுலேட்டரை பலவாறு திருப்பியும் அது அப்படியே மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. சாப்பாட்டுக் கேரியரைப் படுக்கை மேல் எடுத்து வைததான் பையன். ''ஏரால் கெடைக்கலே சார், ஆம்லட் மட்டும்தான்.''

'கெடைக்காதா..''

''சிட்டியிலே ஐஸ்மீன், கடல் மீன்னா கெடைக்கும். ஏரால், கெழுத்தின்னு ஆசைக்கு பேரைச் சொல்லிக்கலாம். இங்க கெடைக்காது.''

ஒவ்வொரு அடுக்காய் எடுத்துவைத்தான். சமைத்த உணவுப் பதார்த்தங்களுக்கேயான நறுமணத்தினை நுகரும் ஆசையுடன் மூச்சை உள்ளிழுத்தான். எவ்வகையான மணத்தி னையும் நுகரக் கிடைக்கவில்லை அவனுக்கு.

சுப்ரபாரதிமணியன்

© TamilOnline.com