கான்கார்ட் சிவ முருகன் கோவில் நிதி: ஸ்ருதிஸ்வரலயா அளித்த நாட்டிய நாடகம்
கான்கார்ட் சிவ முருகன் கோவில் வளர்ச்சிக்கு நிதி திரட்டுமுகமாகக் கலை நிகழ்ச்சி ஒன்றை பிப்ரவரி 19, 2008 அன்று ஸ்ருதிஸ்வரலயா, பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி கலையரங்கத்தில் வழங்கியது.

அமெரிக்காவில் பிறந்து இந்து மத குரு வாகிய சிவாய சுப்ரமணிய சுவாமி அவர்கள் 1967ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிவ முருகன் கோவிலை ஏற்படுத்தினார். இதுவே அமெரிக்காவில் முதன்முதலாகத் தோன்றிய இந்துக் கோவிலாகும். 1988ம் ஆண்டு கான்கார்ட் நகரில் தற்பொழுதுள்ள இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிவ முருகன் கோவிலின் மேல் தளத்தில் சன்னிதானங்களும், கீழ்த்தளத்தில் ஓர் அரங்கமும் உள்ளது. மூன்று குருக்கள்மார் வழிபாடுகள் நடத்துகின்றனர்.

ப்ரீமாண்ட் நகரத்தில் ஸ்ருதிஸ்வரலயா நிகழ்கலைப் பள்ளியைக் அனுராதா சுரேஷ் அவர்கள் திறமையான பல கலைஞர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் போன்ற வாத்தியக் கருவிகள், பரதநாட்டியம் ஆகிய கலை களைக் கற்றுத் தருகிறார்கள்.

கர்நாடக சங்கீத மாணவர்கள் பாடிய முருகன் துதிகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. பாபநாசம் சிவன், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் பக்திப் பாடல்களின் விளக்கத் தையும் அவற்றில் இருக்கும் தத்துவ சாரத்தையும் முதலில் அனுராதா சுரேஷ் விளக்க, பின்னர் மாணவர்கள் அவற்றைச் சேர்ந்திசையாகப் பாடினார்கள். அருணகிரி நாதரின் திருப்புகழ், காவடிச் சிந்து ஆகிய வையும் இடம்பெற்றன. கீதா சேஷாத்ரி மற்றும் ஸ்ரீனிவாஸ் வயலின் வாசிக்க, கோபால் ரவீந்திரன் மிருதங்கமும், பத்ம நாபன் வேதம் புல்லாங்குழலும் பக்கம் வாசித்தனர்.

பின்னர், 'ஜெயஜெய தேவி' என்னும் நாட்டிய நாடகம் அரங்கேறியது. பரத நாட்டியம் கற்பிக்கும் வித்யா வெங்கடேசன் இதைச் சிறப்பாக இயக்கியிருந்தார். கலா§க்ஷத்ராவில் பட்டம் பெற்ற வித்யா வெங்கடேசன் இந்த நாட்டிய நாடகத்தைத் தன் குரு உமா சுந்தரம் அவர்களுக்கு அர்ப்பணித்தார்.

சிவபெருமானின் தேவியும் தட்சனின் மகளுமாகிய தாட்சாயணி, சிவபெருமானின் கோபத்தினால் பூமியில் ஹிமவான் என்னும் அரசனின் மகளாக அவதரிக்கிறார். அவரைப் பின்னர் சிவபெமானே எழுந்தரு ளித் திருமணம் செய்து கொள்ளும் திருவிளையாடலை 'ஜெய ஜெய தேவி' ஐந்து பாகங்களில் சித்திரித்தது.

தாட்சாயிணி தன் தந்தை தட்சனின் விருப்பத்துக்கு மாறாக சிவபெருமானை மணந்து கொள்கிறார். தட்சன் நடத்தும் பிரம்மாண்டமான யாகத்தில் தேவாதி தேவர்களும் பிரம்மனும், விஷ்ணுவும் கலந்து கொள்ள, சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பாமல் அவமதிக்கிறான். இதை அறிந்து மிகுந்த கோபம் கொள்கிறார் தாட்சாயிணி. தன் தந்தையிடம் சென்று கேட்டு வருவதற்குச் சிவபெருமானிடம் அனுமதி கேட்கிறார். சிவபெருமான் மறுத்தும் செல்லும் தாட்சாயிணியை அவமானப்படுத்துகிறான் தட்சன். யாகத் தீயில் தன்னை மாய்த்துக் கொள்கிறார் தாட்சாயிணி.

இதனை அறிந்த சிவபெருமான் வீர பத்ரனை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்து தட்சனை வதம் செய்கிறார். அவர் ஆடும் ருத்ர தாண்டவத்தில் பூலோகம் அழிகின்றது. இந்தக் காட்சிகளை மிக நுணுக்கமான அபிநயங்களுடனும், பாவங் களுடனும், சிவனாக நர்த்தனம் ஆகிய சவிதா செந்திலும், தாட்சாயணியாக லாவண்யா குமாரும், தட்சனாக ஷகிலாவும் ஆடி நடித்தனர். சிவபெருமானின் கோபமும், தாட்சாயினியின் அவமானமும், கெஞ்சலும் மிக அற்புதமாக வெளிப்பட்டன.

பின்னர் தட்சாயிணி ஹிமவான் மகள் உமாவாக அவதரிக்கிறார். சிறுகுழந்தையில் இருந்து ஒவ்வொரு பருவமாக வளரும் காட்சிகள் நாட்டிய வடிவில் அருமையாகக் காட்டப்பட்டன. தட்சிணாமூர்த்தியாகிய சிவபெருமான் தவம் செய்து கொண்டிருக்கும் வேளையில் மன்மதன் அவ்விடம் வந்து சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயலுகிறான். தவத்தைக் கலைக்க முயன்ற மன்மதனைச் சிவபெருமான் கோபம் கொண்டு எரித்துவிடுகிறார்.

உமாதேவி சிவனுக்காகத் தவமிருக்கிறார். அங்கே சிவபெருமான் முதியவர் வடிவத்தில் வந்து 'சுடலையில் வாழும் சிவனுக்காகவா காத்திருக்கிறாய்?' என்று சீண்டுகிறார். உமாதேவியின் மன உறுதியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவரை மணம் முடிக்கிறார். பின்னர் மகிஷாசுர வதம் நடனமாடப்பட்டது.

உமாதேவியாக நடித்த மகாலட்சுமி ஸ்ரீநிவாசனும், முதியவர் வேடத்தில் வந்த மானசா சுரேஷ¤ம் பிற மாணவர்களும் பிரமாதமாகத் தங்கள் திறமையைக் காட்டினார்கள். ஒலி, ஒளி அமைப்பும், ஒப்பனையும் மேடையில் எழுப்பப்பட்ட பூக்க ளும், ஒத்திசைந்த நடனங்களும் பார்வை யாளர்களைப் பரவசத்துக்குள்ளாக்கின.

ச. திருமலை ராஜன்

© TamilOnline.com