இசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்
ஒவ்வொரு கச்சேரியும் எனக்குப் பரிட்சை போலத்தான் என்று சொல்லாத இசையுலகப் பிரபலங்கள் இல்லை. டிசம்பர் வந்தால் கச்சேரிகளைக் கேட்கவும், அவற்றில் இசைக்கவும் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு செல்பவர்கள் பலர். சென்ற இதழில் கிளீவ்லாந்து ஆராதனை 'பாரம்பரியத்தைக் கட்டிக் காப்போம்' என்ற அமைப்பைப் பற்றியும், மிருதங்கம் வாசிக்கும் ரஜனா சுவாமிநாதனைப் பற்றியும் தென்றல் எழுதியிருந்தது.

இந்த இதழில் கச்சேரி சீசனில் சென்னையைக் கலக்கிவிட்டு வந்த இன்னும் சிலரைச் சந்திக்கலாம் வாருங்கள்...

மானஸா சுரேஷ்

'எனக்குத் தமிழில் ரொம்ப பிடிச்ச பாட்டு பாபநாசம் சிவனின் சரவண பவ குகனே' என்கிறார் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த, 16 வயதான மானஸா சுரேஷ். சென்னையில் இது இவருக்கு முதல் கச்சேரி சீசன். சென்னை வந்தடைந்த மறுநாளே முதல் கச்சேரி. ஜெட்லேக் சொகுசு பார்க்கக் கூட நேரமில்லை. உடன் வாசிப்பவர் களுடன் ஒத்திகை பார்க்க நேரமில்லை. ராகசுதா ஹாலில் 'நாத இன்பம்' வழங்க மேடையேறி விட்டார் மானஸா.

சென்னையில் வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் திரண்டு வந்து நான் பாடுவதைக் கேட்டு ஊக்கமளித்ததை மறக்க முடியாது என்கிறார் மானஸா. அதுபோல் மறக்க முடியாத இன்னொரு இனிய அனுபவம் அமெரிக்காவில் பிறந்த இதர 15 குழந்தைகளுடன் சேர்ந்து இவர் பாடியது அனுபவம். 'ஸஸ்டெய்னிங் சம்பிரதாயம்' என்ற பெயரில் நாரதகானசபாவில் கிளீவ்லாந்து சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மனதுக்கு மிகவும் நிறைவு தந்ததாம். இதர குழந்தைகளுடன் இணைந்து பாடியதில் கூட்டு முயற்சியின் பலன் விட்டுக் கொடுத்தல், மற்றவர்களின் திறமையைப் பாராட்டுதல் என்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம்.

முத்தாய்ப்பாய் அமைந்த விஷயம் இவர் பாட்டைக் கேட்க வந்த பாடகர் அசோக் ரமணி இவரை இன்னொரு கச்சேரி செய்யுமாறு அழைத்தது. அதனை சாஸ்திரி ஹாலில் அரங்கேற்றினாராம். சான் ஹோஸே ·ப்ரீமாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மானஸா தன் சாதனைகளைத் தனது அன்னை அனுராதா சுரேஷிற்குச் சமர்ப்பிக் கிறார். 'எங்கம்மாதான் எனக்கு இன்ஸ்பி ரேஷன்'. சங்கீதத்தில் முதல் குருவும் அவர்தானாம். சென்ற நான்கு வருடங்களாக கே.எஸ். சசிகிரணிடம் சங்கீதம் பயின்று வருகிறார். பிடித்த பாடகர்கள் குரு சிசி கிரண், செளம்யா. தமிழில் பேசுவதோடு, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார் மானஸா. ஜெனடிக் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். கூடவே சங்கீதத்திலும்தான். இவரது திறமைகள் மெருகேற தென்றல் வாழ்த்துகிறது..

மதுரை சுந்தர்

மதுரை சுந்தர் 15 ஆண்டுகளுக்கும் மேல் மார்கழி மாத சங்கீத விழாவுகுச் சென்று கொண்டிருக்கிறார். அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞரான இவர், குரு டி.என். சேஷகோபாலன் மேல் அதீத பக்தி வைத்திருக்கிறார். பத்து வருடங்கள் முன்பிருந்த சங்கீத சீசனுக்கும் இப்போதைய சீசனுக்கும் நிறைய வித்தியா சங்கள் என்கிறார். அன்று 2, 3 இடங்களில் பாடிய வித்வான்கள் இன்று 19, 20 இடங்களில் பாடுகிறார்கள். அனுபவத்திலும் புகழிலும் முன்னணியில் இருக்கும் பெரிய பக்கவாத்திய வித்வான்கள் இன்று தயங்காமல் இளையவர்களுக்கு வாசிக்க முன்வருவது பெரிய கெளரவம் என்கிறார். சங்கீதம் இன்று ·பாஸ்ட்புட் போல் ஆகி விட்டது என்ற ஆதங்கமும் இவரை வாட்டுகிறது. பல கச்சேரிகளைக் கேட்பதால் ரசிகர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து வருகிறது. கலைஞர்களுக்கும் சம்பிரதாயமாகப் பாடுவதா, காலத்திற்கேற்ற மாற்றங் களுடன் பாடுவதா என்ற போராட்டம் எழுகிறது என்கிறார். 'துபாய் தமிழ்க் குடும்பம்' இவருக்கு 'சங்கீத ரத்ன' என்ற பட்டத்தை அளித்திருக்கிறது. ராசியான மேடைகளாக இவர் கருதுவன மைலாப்பூர் ·பைன்ஆர்ட்ஸ், பாரத் கலாசார், மியூசிக் அகாடமி, திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை. ராமநாதபுரம் சங்கர சிவம் அவர்கள் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த 'சுந்தரி என் சொப்பனத்தில்' என்பது மிகப் பிடித்த பாடல்.

கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்

நாதஸ்வரம் தெரியும். நோட்டு ஸ்வரம் தெரியுமா? இதற்கான செயல்முறை விளக்கத்தை அளித்து மியூசிக் அகாடமியில் சூரியகாந்தம்மா விருதினைப் பெற்றவர் கிளீவ்லாந்தை (ஒஹையோ) சேர்ந்த கனிக்ஸ் கன்னிகேஸ்வரன். மேலும் மியூசிக் அகாடமி யின் சிறந்த LEC-DEM விருதையும் இவர் பெற்றார். நோட்டு ஸ்வரத்தைப் பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் அரிய ராகங்களில் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் சில பாடல்களின் ராகம் மேல்நாட்டு சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. வால்ட்ஸ், ஜிக், ரீல் மார்ச் ஆகிய தாளம் சம்பந்தப்பட்ட மேல்நாட்டு இசை அம்சங் களைத் தம் கிருதிகளில் கையாண்டிருக் கிறார். சென்னையை ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆக்கிரமித்திருந்த போது அவர்கள் தம் பாண்டு வாத்தியத்தில் வாசித்த மார்ச் மற்றும் நாட்டுப்புற மெட்டு களைத்தான் தீட்சிதர் தம் பாடல்களின் ராகங்களாக அமைத்தார். இப்படி அமைக் கப்பட்ட பல பாடல்களைக் கோவில்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கத் தொடங்கினர். ஜார்ஜ்டவுனில் உள்ள காளிகாம்பாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் போன்ற பல இடங்களில் கன்னிக்ஸ் பாண்டு வாத்தியப் பாடல்களைக் கேட்டு, ஈடுபாடு கொண்டதால் இவ் வராய்ச்சியை மேற்கொண்டார். பாரம்பரிய மான இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் தம் கொள்ளுத் தாத்தா கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர் அவர்களும் இப் பாடல்களை வயலினில் வாசித்துக் காட்டியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க இரண்டு சாதனை களை கன்னிக்ஸ் செய்திருக்கிறார். குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதம் பயில்விக்கும் போது தீட்சிதர் அமைத்த மேல்நாட்டுச் சாயல் கொண்ட பாடல்களை முதலில் கற்பித்து அதன்மூலம் கர்நாடக சங்கீதத்தை பயில்விக்கிறார். இரண்டாவதாக, சென்னை யில் வசித்து வரும் பாண்டுக் கலைஞர்களை சந்தித்து, பேட்டியெடுத்து அவர்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பாண்டு வாத்தியத்தைக் கேவலம் என ஒதுக்காமல் அதைச் செவி கொடுத்துக் கேட்டதுமட்டுமல்லாமல் அதன் சாரம்சத் தைக் கர்நாடக சங்கீதத்தில் புகுத்தியதில் முத்துஸ்வாமி தீட்சதரின் பரந்த மனப் பான்மை தெரிகிறது என்கிறார் கன்னிக்ஸ். தீட்சிதர் எழுதிய 'சக்தி சஹித கணபதிம்' ஒரு பிரெஞ்சுப் பாடலை மையமாகக் கொண்டது. 'சந்ததம் பாஹிமாம்' பாடலின் அடிப்படை ராகம் பிரிட்டிஷ் தேசிய கீதத் தினுடையது. 'சியாமளே மீனாட்சி' ஓர் அயர்லாந்து மெட்டு என்று பல சான்று களைக் கூறுகிறார் கன்னிக்ஸ். இப்பாடல் களின் இசைத்தட்டை வெளியிடும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.

காந்தி சுந்தர்

© TamilOnline.com