நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
ஆன்மீக, கலாசார, சமூகப் பணிகளைச் செய்துவரும் நந்தலாலா மிஷனின் (சான்டா கிளாரா) ஆதரவில் டிசம்பர் 2, 2007ஆம் நாளன்று ஸ்ரீராமபிரானை மையக்கருத்தாகக் கொண்ட கலைநிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீலலித கான வித்யாலயாவின் மாணவ மாணவிகள் நடத்தினர். சக்ரவாஹ வர்ணத்துடன் தொடங்கி, நாட்டையில் தீட்சிதரின் 'மகாகணபதி' அடுத்து வர, தியாகராஜரின் 'ப்ரோசேவா' சேர்ந்திசையில் இழைந்தது.

பத்ராசல ராமதாசரின் 'பலுகே பங்காரு நாயன' (ஆனந்த பைரவி) ஸ்ரீராமபிரானை மனம்குளிரக் காணச் சித்திரமாகத் தீட்டியது அடுத்த குழு. மற்றொரு குழு தியாகராஜரின் 'ஜோ ஜோ ராமா'விலும் 'மா ராமச் சந்துருக்கி'யிலும் ஸ்ரீராமபிரானின் பரம கருணையை ரீதிகெளளையாகவும் கெளளையாகவும் இசைச் சிற்பமாக வடித்துக் கொடுத்தது.

தியாகராஜரின் 'மேருசமான' (மாயாமாளவ கெளளை), வாலாஜாபேட்டை வெங்கட ரமண பாகவதரின் 'ரா ரா தசரதகுமாரா' (பைரவி), தியாகராஜரின் 'ஸரஸ சாமதான' (காபிநாராயணி), 'ஈ வாசுதேவ' (ஸஹானா), 'லோசன கமலா லோசன' (தர்பார்), 'சலமேலரா' (மார்கஹிந்தோளம்), 'ராமா நின்னென்ன நம்மின' (மோஹனம்), 'ஸ்ரீ ரகுவரா ப்ரமேயா', தீட்சதரின் 'ஸ்ரீரங்க புர விஹாரா' (பிருந்தாவன சாரங்கா) ஆகிய கீர்த்தனைகளைச் சிறார்கள் மிகச் சிறப்பாகப் பாடினர்.

குழந்தைகளின் பாட்டுக்கு இசைய வயலின் வாசித்த ஸ்ரீநாகராஜ் மாண்டியா, மிருதங்கம் வாசித்த ஸ்ரீபாலாஜி மகாதேவன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறுமி பிந்து சுவாமிநாதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுத்ததும், நன்றி நவின்ற அழகும் வெகு நேர்த்தி.

'மதிஒளி சரஸ்வதி' மாதா அவர்களின் அருளாசியோடு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லாச் சிறார்களுக்கும், பக்க வாத்தியக் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். நந்தலாலா மிஷனின் குறிக் கோள்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்துச் செயலர் காயத்ரி சுந்தரேசன் பேசினார்.

ஏராளமான குழந்தைகளைத் திறம்படப் பயிற்றுவித்து இந்த நிகழ்ச்சியை அமைத் திருந்த ஸ்ரீலலித கான வித்யாலயாவின் இயக்குநர் லதா ஸ்ரீராம், அவரது கணவர் ஸ்ரீராம் ஆகியோரின் இசைப் பெருந் தொண்டு சிறப்பானது.

E.G.S

© TamilOnline.com