கிரேடர் சிகாகோ பாலாஜி ஆலயம் ‘டிவைன் ரிதம்ஸ்’
பிப்ரவரி 23, 2008 அன்று மாலை 5:30 மணிக்கு அரோராவிலுள்ள (இல்.) கிரேட்டர் சிகாகோ பாலாஜி திருக் கோவிலில் நிருத்யமாலா டான்ஸ் அகாடமி யின் டாக்டர். உமா வைஜயந்திமாலா கல்கூரியும் அவரது மாணவர்களும் 'டிவைன் ரிதம்ஸ்' என்ற நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்குவார்கள்.

புளூமிங்டனில் (இல்.) உள்ள நிருத்யமாலா டான்ஸ் அகாடமியின் நிறுவனரும் கலை இயக்குநருமான உமா வைஜயந்திமாலாவுக்குப் பன்னாட்டுப் புகழ்பெற்ற நடன அமைப்பாளர், இந்தியவியலாளர், நடன வரலாற்றாசிரியர், மதிப்புக்குரிய குரு எனப் பல முகங்கள் உண்டு. சிறுவயதிலேயே நடன இளம்மேதையாக அறியப்பட்ட இவர், அகில இந்திய நடனப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளதோடு, சிறந்த ஆசிரியர் விருதும் பெற்றவர். 'நாட்ய விஷாரதா' வேம்பட்டி கோதண்டராம சாஸ்திரி, A.U.R. சோமயாஜுலு, 'பரதகலாநிதி' டாக்டர் K. உமா ராமராவ், C.R. ஆசார்யா ஆகிய மேதைகளிடம் குச்சிப்புடி, பரதநாட்டியம், கோவில்நடனங்கள் ஆகியவற்றைப் பயின் றுள்ளார். ஆங்கிலத்திலும் வரலாற்றிலும் என 2 முதுகலை (M.A.) பட்டங்களைப் பெற்றுள்ள இவர் மிகச் சுவையாகப் பயிற்சிப் பட்டறைகள், செயல்முறை வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதில் வல்லவர்.

இந்தியக் கலாசார உறவுகள் கழகத்தின் (ICCR) கலைஞர் குழுவில் இடம்பெற்றுள்ள உமா, இந்தியா, ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்னாட்டு மாநாடுகள், நடன விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். 'நாட்டியமும் யோகமும், ஓர் ஒப்பீடு' என்ற ஆய்வுக்காக இவர் Ph.D. பெற்றுள்ளார்.

பாலாஜி திருக்கோவிலைப் பற்றி மேலும் அறிய: www.balaji.org

தொலைபேசி எண்: 630.844.2252

© TamilOnline.com