பிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்
பாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே! உன்னைத்தந்தாள்; அதோடு மென்மையாக வீசுகின்ற தென்றலையும் தந்தாள். தமிழே! நீ என் உள்ளத்திற்கு இன்பம் அளிக்கின்றாய். தென்றலே நீ என் உடலுக்கு இன்பம் அளிக்கின்றாய். 'கனவிலும் நான் மறவேன்' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழையும், தென்றலையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

தென்றல் இதழில் இயற்றமிழ் இன்பத்தையும், தேனினும் இனிய, செந்தமிழ், இசைத்தமிழ், இசை இன்பத்தையும் நாடகத் தமிழின் 'நாட்டியாஞ்சலி' தரும் ஆடற்கலை இன்பத்தையும் கண்குளிரக் கண்டு மகிழ்கிறேன். தென்றலில் கொட்டிக் கிடக்கின்ற கருத்துப் பூக்கள் அள்ள அள்ளக் குறையாத அட்சயமாய் வளர்தல் வேண்டும். வளரும்.

நம் தென்றலில் தமிழ்ச் சங்கங்கள் பற்றிய கருத்துக்கள், பல பல்கலைக்கழகங்களின், தமிழர்களின் ஆராய்ச்சிகள் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பற்றிய தொகுப்புகள், கல்விமான்களின் கருத்துக்கள், சமையல் குறிப்புகள், அறிவுக் கூர்மைக்கு குறுக்கெழுத்துப் புதிர், மருத்துவம், சிறுகதைகள், உண்மைக் கதைகள், இயல், இசை, நாடகம், தமிழ்ப் பெரியார்கள் செய்யும் ஒப்பற்ற தொண்டுகள், சுவையான துணுக்குகள் மற்றும் பிறவற்றைக் காண்கிறேன்.

இளந்தென்றலில் மழலைச் செல்வங்களின் ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்து போனேன். தென்றல் எதிர்கால ஓவியர்களை உருவாக்குகின்றதன்றோ. சினிமா செய்திகளையும் தந்து மக்களை மகிழ வைக்கின்றது. சி.கே. கரியாலி, சித்ரா வைத்தீஸ்வரன் என அனைத்துத் துறைச் சாதனையாளர் களையும் தென்றல் தரும் பாங்கே பாங்கு. அம்பிகா காமேஸ்வரன் மனவளம் குன்றிய குழந்தைகளைக் காக்கும் பகுதியைப் படித்து உள்ளம் எனக்கு நெகிழ்ந்து போயிற்று.

நம் தென்றல் உலகப்பதிப்பேடு ஆக வெளிவர வேண்டும் என வேண்டி என்னுரையை முடிக்கிறேன்.

தனலெட்சுமி சதாசிவம்

*****


சான் ஹோசேயில் உள்ளது என் மகன் வீடு. புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள நான் அவனிடம் தமிழ்ப் புத்தகம் வாங்கி வருமாறு கூறினேன். அவனும் அடுத்த நாளே என்னிடம் 'தென்றல்' புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.

இந்தியாவில் நடைபெறும் விஷயங்கள், அமெரிக்காவில் உள்ள விஷயங்கள், சிறுவர் பகுதி, தொடர்கதை, சிறுகதை போன்ற எல்லா விஷயங்களும் அடங்கிய அந்தப் புத்தகம் மிகப் பிரமாதமாக இருந்தது. என்னுள் திருப்தி. சந்தோஷத்துடன் மகனிடம் 'புத்தகம் ரொம்ப நன்றாக உள்ளது. என்ன விலை? இந்தப் புத்தகத்தை மாதந்தோறும் வாங்கித் தந்துவிடு' என்றேன்.

என் மகன் தென்றல் இங்கு இலவசம் என்று கூறியதும் ஆச்சரியத்துடன் மிக்க சந்தோஷமும் அடைந்தேன். என்போன்றவர்களின் மூளைக்குச் சவாலாக அமைந்தது குறுக்கெழுத்துப் போட்டி.

அலமேலு ராமகிருஷ்ணன், சான் ஹோசே, கலி.

*****


தாங்கள் நம் தமிழ்மக்கள் படித்து இன்புற வேண்டுமென்ற மேன்மையான எண்ணத்தால் தென்றல் பத்திரிகை சிறப்பாக வெளிவரவேண்டும் என்று ஊக்கத்துடன் செயல் புரிகிறீர்கள்.

தங்கள் முயற்சி பத்திரிகையை உருவாக்குவதுடன் தமிழ் மக்களின் பண்டைய கலாசார மரபுகளைப் பின்பற்றத் துணைபோகிறது என்பதை நினைத்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

சாந்தினி பரமேஸ்வரன்

*****


டேடன் பெருமாள் கோவிலில் தென்றல் பத்திரிகையைப் பார்த்தேன். படித்தேன். கடல்கடந்து வந்து அயல்நாட்டில் நம்மொழிப் பத்திரிகையை படிக்கும்போது மனதில் சந்தோஷமும், அதே சமயம் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வும் என்னுள் ஏற்பட்டது.

ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நாட்குறிப்பு, சிறுகதை, இசையுதிர் காலம் எல்லாமே அருமை. உங்கள் பத்திரிகை இன்றுபோல் என்றும் வளர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

ஒரு சிறிய வேண்டுகோள். காஞ்சியில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்த, மகா பெரியவர் எல்லோராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பக்தர்களின் அனுபவங்கள் ஏராளம். அவற்றைத் தென்றலில் வெளியிட வேண்டும்.

கெளசல்யா நாகராஜன்

*****


1956-57ல் நான் சென்னை கபாலீஸ்வரர் கோவில் அருகில் குடியிருந்தேன். மார்கழி மாதம் அதிகாலையில் பக்தர்கள் புடைசூழ பாபநாசம் சிவன் அவர்கள் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை மனம் உருகிப் பாடிக்கொண்டு கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் நடந்து வருவார்கள். அவர் பின் பாடிக்கொண்டு சென்ற பக்தர்களில் அடியேனும் ஒருவன். அதைத் தங்கள் ஜனவரி '08 இதழில் வெளியிட்ட தமிழிசைப் பிதாமகர் பாபநாசம் சிவன் என்ற கட்டுரை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள். அவர் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைக்கின்றேன். பா.சு. ரமணன் அவர்களுக்கு எனது நன்றி.

'இங்கெல்லாம் உறவுகள் இப்படித் தானம்மா..' என்று கதாபாத்திரம் ஜனனி கூறுவதாகவும், அவரது மாமியார் மங்களம் இந்தியாவுக்குப் புறப்படும் பொழுது உறவுகளில் எந்திரத்தனமின்றி நம்மைப் போல் இயல்பான சந்தோஷத்துடன் சந்ததிகளின் முழுப்பயனை மக்கள் வருங்காலங்களிலாவது அடைய வேண்டுமென்ற உணர்வோடு பராசக்தியை வேண்டிக் கொண்டார் என்றும் 'ஆதங்கம்' சிறுகதையில் கதாசிரியர் குறுப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதைப் படிக்கும்போது என் உள்ளம் உருகி விட்டது. அமெரிக்க இந்தியர்களின் எந்திர வாழ்க்கையையும், அன்புக்காக ஏங்கும் இந்தியர்களின் நல்ல மனதையும் படம் பிடித்துக் காட்டிய மங்களகெளரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

க. நடராசன், சான் ஹோசே (கலி.)

*****


நாங்கள் படித்து இன்புறத்தக்க வகையில் தென்றலை வெளிக்கொண்டு வரும் உங்களுக்கு நன்றிகள். ஒவ்வொரு மாதமும் எப்போது தென்றல் வரும், முதல் பக்கத்தி லிருந்து கடைசிப் பக்கம் வரை அதன் பக்கங்களில் சிறந்த எழுத்தாளர்களால் எழுதப்படும் சிறப்பான விஷயங்களைப் படிக்கலாம் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்கள் இந்தச் சேவையை உலகத் தமிழருக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும். சென்னையில் நாங்கள் இருக்கும்போது எத்தனையோ சஞ்சிகைகள் கிடைக்கின்றன. ஆனாலும், தென்றல்தான் எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. 'ஆஹா!' என்று சொல்லலாமா?

வத்சலா, (மின்னஞ்சலில்)

© TamilOnline.com