அரிசி கொதிக்கும் பானை ஆளும் கட்சி
நான் குறுகிய கட்சி அரசியலில் நம்பிக்கை இல்லாதவள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் என் மக்கள் பசியோடும், நிலமற்றவர்களாகவும், கடன்பட்டவர்களாகவும், கொத்தடிமைகளாகவும் வேதனையில் துடித்துக் கதறி முனகியபடியும் இருக்கிறார்கள். என்னுடைய மக்களை இந்தப் பயங்கரமான கொடுமைகளிலிருந்து விடுவிக்காத இந்தச் சமூக அமைப்பின்மேல், நான் கொண்ட தீவிரமான கொழுந்துவிட்டு எரியும் கோபம் மட்டுமே என்னை எழுத வைக்கும் ஒரே தூண்டுதல். எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, அவமான உணர்ச்சியோ இல்லாதபடி பார்த்துக் கொண்டு எனது அதிகபட்சத் திறமைகளைப் பயன்படுத்தி எழுதிக் கொண்டேயிருக்கிறேன்.

மஹாஸ்வேதா தேவி, வங்கமொழி எழுத்தாளர், பத்திரிகைப் பேட்டியில்...

ஆளுங்கட்சி சார்பில் 163 பேர் வந்துவிட்டார்கள் என்பதாலேயோ, எதிர்க்கட்சிகள் சார்பில் 70 இடங்களை தாண்டவில்லை என்பதாலேயோ அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில் எள்ளளவும் நான் பின்வாங்க மாட்டேன் என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கருணாநிதி, தமிழக முதல்வர், சட்டப்பேரவையில்...

தி.மு.க. ஆறு கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி அமைத்திருந்தாலும் மூன்று கட்சிகளைக் கொண்ட அ.தி.மு.கவிடம் மூச்சுமுட்டி மயிரிழையில் தான் ஆட்சியைப் பிடித்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்று கூறி ஓட்டுகளைப் பெற்ற கருணாநிதி இப்போது கூட்டணி அரசுக்கு ஒப்புக்கொள்ளாமல் மறைமுக நெருக்கடி கொடுத்துத் தனித்து ஆட்சி அமைக்கிறார். இந்த நெருக்கடி குமுறல்களாக மாறி முரண்பாடாக வெடிக்கும்.

திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர், பத்திரிகையாளர்களிடம்...

'அரிசி கொதிக்கும் பானை ஆளும் கட்சி என்றால் அகப்பையாக விளங்குவது எதிர்க்கட்சி' என்றார் முன்னாள் முதல்வர் அண்ணா. என்னைப் பொறுத்தவரை பானையில் அரிசியும் அளவுக்கு மீறிக் கொதிக்கக் கூடாது. அகப்பையும் அடிக்கடி கொதிக்கும் பானையை கிளறக் கூடாது. ஒரு வீட்டுக்குத் தேவையான அரிசிப் பானையும் அகப்பையும் போல, நாட்டுக்குத் தேவையான நல்ல ஆளும் கட்சியாகவும் திறமையாக வாதிடும் எதிர்க்கட்சியாகவும் இந்தப் பேரவையில் செயல்படுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு எண்டு.

இரா. ஆவுடையப்பன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்து பேசியதிலிருந்து...

ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதோடு தமிழர்கள் பகுதிகளில் இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும். இது தொடர்பாகப் பிரதமர் மன்மோகன்சிங்கை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன்.

வைகோ, ம.தி.மு.க. பொதுச்செயலாளர், பத்திரிகையாளர்களிடம்...

© TamilOnline.com