ரஜினியின் புதிய 'ரோபோ'
'சிவாஜி தி பாஸ்' பெற்ற வெற்றிக்குப் பிறகு அதைவிட பிரமாண்ட வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி, ஷங்கர் இயக்கும் புதிய படமான 'ரோபோ'வில் நடிக்க இருக்கிறார். முதலில் கமலை வைத்து எடுப்பதாக இருந்த எண்ணம் பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் ஷாருக்கான், அர்ஜூன், விக்ரம், அஜீத் எனப் பலர் நடிப்பதாக மாறிமாறிப் பேசப்பட்டாலும் பல காரணங்களால் படத் தயாரிப்பு நின்றுபோனது. இந்நிலையில் ஷங்கர், ரஜினியுடன் 'ரோபோ' பற்றிப் பேச, ரஜினி சம்மதித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் தயாராக உள்ள இந்தப் படத்தை பிரபல ஐங்கரன் இண்டர்நேஷனலும், ஈரோஸ் மல்டிமீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நூறு கோடி ரூபாய்க்கு மேல் பொருட்செலவில் தயாராக உள்ள இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். ரஜினியின் இணையாக நடிக்க இருப்பவர் பிரபல ஐஸ்வர்யா ராய். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதுவரை இந்திய மொழிகளில் தயாரான படங்களிலேயே இது மிகவும் பிரமாண்ட படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com