தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா
மே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கூப்பர்டினோ மற்றும் ப்ரீமாண்ட் கிளை களின் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

காலை 10.30 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத் துடன் ஆரம்பித்த விழாவிற்கு ·ப்ரீமாண்ட் பள்ளி முதல்வர் குமார் குமாரப்பன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்த கலை நிகழ்ச்சிகளைப் பள்ளியின் கலாசாரக்குழுச் செயலர் கோபால் குமரப்பன் தொகுத்து வழங்கினார். அவரோடு பள்ளிக் குழந்தை கள் அரவிந்த் கருணாகரன், அகிலா கருணாகரன் மற்றும் அரவிந்த் நடராஜன் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினர்.

கிராமியப் பாடல்களுக்கு நடனமாடிய சிறுமியர்கள் கிராமங்களை மட்டுமல்லாது, நம்முள் ஆழமாய்ப் பதிந்திருக்கும் பசுமையான நினைவுகளையும் வெளிக் கொணர்ந்தது உண்மை.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந் திருந்தாலும் பாரதியின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' மற்றும் 'அச்சமில்லை அச்சமில்லை' போன்ற பாடல்களைப் பாடிய குழந்தைகளின் குரலில் இருந்த கம்பீரம் வந்திருந்த அனைவரையும் அசரவைத்தது. கணீ ரென்ற குரலில், கலப்படமற்ற தமிழில் பாடியபோது பாரதி அங்கில்லையே பார்த்து ரசிக்க என்று தோன்றியது உண்மை.

விழாவில் இரு கிளைகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் கெளரவிக்கப் பட்டனர். கூப்பர்டினோ கிளை முதல்வர் ஸ்ரீவித்யா வேல்சாமி மற்றும் ப்ரீமாண்ட் கிளை முதல்வர் குமார் குமரப்பன் ஆசிரியர் களை மேடைக்கு அழைக்க, கழகத்தின் தலைவர் செல்வி இராஜமாணிக்கம் பரிசுகளை வழங்கினார். 2005-2006 கல்வி ஆண்டில் நூறு சதவிகிதம் வருகைப்பதிவு தந்த மாணவ மாணவியருக்கும் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதைச் செல்வி ராம பத்திரன், ஸ்வர்ணா சுப்ரமணியன், ஜம்புலிங்கம், இந்திரா ஜம்புலிங்கம் ஆகியோர் பெயர்களை வாசிக்க, ஸ்ரீவித்யா வேல்சாமி, ப்ரீமாண்ட் கிளையின் உதவி முதல்வர் நல்லப்பன், செந்தில் சதாசிவம், மீனா அண்ணாமலை ஆகியோர் பரிசு களை வழங்கினார்கள்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் (http://www.tamilvu.org/) மூலமாக நடத்தப் பட்ட அடிப்படை மற்றும் இடைநிலைத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணாக்கர் களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களைச் சுமதி பத்மனாபன் அழைக்க, சுந்தரமூர்த்தி, அசோகன், லோகநாதன் பழனிசாமி மற்றும் கந்தசாமி பழனிசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாணவர் சூர்யா சிவராம் கைவண்ணத்தில் பள்ளிக் குழந்தைகளின் புகைப் படங்கள் பொலிவோடு திரையிடப்பட்டன.

மதியம், மூன்று முதல் நான்கு வயதுவரை உள்ள குழந்தைகள் 'சுண்டெலிக் கல்யாணம்', 'பட்டாம்பூச்சி', 'கடகடா வண்டி வருகுது' மற்றும் 'புத்தம் புது பூமி வேண்டும்' போன்ற பாடல் களைப் பாடி ஆடியபோது
கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

35 நிகழ்ச்சிகள் கொண்ட இந்த விழாவில் கிராமிய நடனங்கள், நற்பண்புகளைக் கற்றுத்தரும் பாடல் நடனங்கள், தமிழைப் போற்றும் பாடல்கள் மட்டுமல்லாமல், தமிழ்ப் பற்று, இயற்கையைப் பாதுகாத்தல், மற்றும் தெனாலிராமன் கதைகள் போன்றவற்றைக் கருத்தாய்க் கொண்ட நாடகங்களும் அரங் கேறின. 'ஆசிரியராகும் ஆசிரியர்' சிரிப்பு நாடகத் தோடு, தொலைக்காட்சியில் இடம் பெற்று வரும் 'தங்க வேட்டை' நிகழ்ச்சியைப் போல அமைக்கப்பட்ட 'தகதக தமிழ் வேட்கை' என்ற நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் தலைவர் செல்வி இராஜமாணிக்கம் இரு பள்ளிகளுக்குமான வரும் கல்வி ஆண்டின் நிர்வாகக் குழுக்களை அறிமுகப்படுத்தினார்.

கூப்பர்டினோ பள்ளியின் துணை முதல்வர் விஜி ரத்னகிரி நன்றியுரை நவில, இந்திய தேசிய கீதத்துடன் விழா நிறைவுபெற்றது.

விழாக் குழுவினர்கள் கோபால், கருணா கரன், பல்லவி, செந்தில், பொன்னம்பலம் மற்றும் பிற தொண்டர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

© TamilOnline.com