ஏமாற்றம் தற்காலிகமானதுதான்.....
நான் என் மனைவியைக் காதலித்து, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி மிகவும் நேர்மையானவள். அதேபோல் எல்லோரும் ஒரு நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவள்.

திருமணத்திற்குப் பிறகு என் பெற்றோர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாவிட்டாலும், மாதாமாதம் அவர் களுக்குப் பணம் அனுப்பச் சொல்லி என்னை உசுப்பிவிட்டு, அடிக்கடி போன் செய்து அவர்கள் நிலவரம் கேட்கச் சொல்லியும் என்னை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பாள். மெல்ல என் பெற்றோர் களும் மாறி வந்தனர். முதலில் என்னுடன் ஒழுங்காகப் பேச ஆரம்பித்தார்கள். நிறைய நாள் அவளை ஒதுக்கி வைத்தார்கள். அப்படியும் அவர்களை நான் இங்கே வரவழைத்தபோது, என் மனைவி என்னு டன் ஒத்துழைத்தாள். அவர்கள் அவளைப் புரிந்துக் கொள்ளாமல் சிலமுறை மனம் கசக்கும்படிப் பேசியிருக்கிறார்கள். அவளுக்கு அந்த சமயம் கொஞ்சம் கோபம், வெறுப்பு எல்லாம் இருந்தது. 'என்ன இது! நானும் இத்தனை வருஷம் அவர்கள் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். நான் எவ்வளவு செய்தாலும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. இப்படி யிருந்தால் எனக்கே விட்டுப் போய்விடும்' என்று என்னிடம் ஒரு நாளும், அவர்களிடம் மறுநாளும் சொல்லிவிட்டாள். அதனால் அவர்கள் சிறிது மாறுதலுடன் பழகினது போல எனக்குத் தோன்றியது. அவள் மனம் நோகும்படிப் பேசவில்லை. உறவு சுமுக மானது என்று நான் நம்பினேன். என் மனைவியும் நம்பினாள்.

இது 2 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். ஒரு வருடம் கழித்து எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான். (திருமணமாகி அப்போது 6 வருடங்கள்) இந்தியாவுக்குக் குழந்தையை அழைத்துக் கொண்டு காட்ட முடியவில்லை. அவர்களை இங்கே வர வழைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்த சமயத்தில் என் தந்தைக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் 2 மாத வாசம். வீடு திரும்பவில்லை. அவருடைய காரியங் களை முடித்துவிட்டு வீடு, நிலம் விற்க ஏற்பாடு செய்ய நினைத்த போதுதான் எனக்கு இந்த அதிர்ச்சி செய்தி. எனக்கு 2 தங்கைகள். நாங்கள் அனுப்பிய பணத்தில் என் தந்தை அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். ஒருவருக்கு பிசினஸ். மற்றவருக்கு துபாய். வசதிக்குக் குறைவில்லை. இருந்தும், தான் சுயமாகச் சம்பாதித்த வீடு, கொஞ்சம் நிலம் எல்லா வற்றையும் பெண்களுக்கே எழுதி வைத்து விட்டார். நான் ஒரே மகன்.

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என் அம்மாவைக் கேட்டால், உன்மேல் இருந்த கோபத்தில் அப்பா முன்னால் எழுதி வைத்தது அதுவும் பெரிய சொத்து ஒன்றும் இல்லே. உன் சம்பளத்திற்கு அது உறை போடக் காணாது என்று பெண்கள் பக்கம் பரிந்து பேசினார். நான் கிளம்பி வந்துவிட்டேன். என் மனைவிக்கு இப்போது அவள் சொன்னது போல பிடிப்பு போய் விட்டது. சிறிய சொத்தோ, பெரிய சொத்தோ உங்கள் பெற்றோர் ஏன் வஞ்சகம் செய்ய வேண்டும் என்று கசப்புடன் கேட்டு விட்டாள்.

நான் முன்பு போல் அடிக்கடி பேசுவ தில்லை. என் தங்கை பார்த்துக் கொள் கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். போன வாரம் என் தங்கை போன் செய்து அம்மா எப்படி உடல் குன்றி, மனம் குன்றிப் போயிருக்கிறார்கள் என்றும், தான் அமெரிக்கா வந்து பேரப்பிள்ளைகளைப் பார்க்க விரும்புவதாகவும் தன்மேல் சொத்து விஷயத்தில் கோபம் இருந்தால் தன் செயின், வளையல், தோடு இவற்றை விற்று எனக்குத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்களாம். ஆகவே நான் அம்மாவை அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாள். என் மனைவியிடம் சொன்னால் அவளிடம் அவ்வளவு உற்சாகம் இல்லை. அம்மாவை என்கூட வைத்துக் கொள்வது கஷ்டம் என்று 100 காரணங்கள் சொன் னாள். இதுதான் விஷயம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதை எப்படிக் கையாள்வது?

இப்படிக்கு...

அன்புள்ள நண்பரே...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது தெரியவில்லையே எனக்கு...

போகட்டும். உங்கள் மனைவியின் நிலை யில் இருந்து பார்ப்போம். அவருடைய எதிர்பார்ப்புகளும் சரி, எதிர்ப்பும் சரி கொஞ்சம் நியாயமாகத்தான் என் கணிப்பில் தோன்றுகிறது. எவ்வளவு கிடைக்கிறது என்பது குறியல்ல. ஏமாற்றிவிட்டார்களே என்பதுதான் குறை, குமுறல் எல்லாம்... இது அடங்கச் சிறிது அவகாசம் தேவை.

##Caption##இங்கே உங்கள் சகோதரிகளின் பொறுப்பும் இருக்கிறது. அண்ணனுக்குப் போக வேண்டிய பங்கும் தங்களுக்கு வந்துவிட்டதே என்று அதை விட்டுக் கொடுத்திருந்தால் அங்கே அவர்களுக்குப் பெருமை சேர்ந்திருக்கும். அந்த சகோதரிகளின் கணவன்மார்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இது எல்லாம் நடைமுறையில் எந்த அளவு சாத்தியமாகும்? இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் நியாயமாக நடந்திருந்தால், ஏமாற்றத்தின் அடியின் வேதனை சிறிது குறையும். பெருந் தன்மையாகப் பேசுபவர் பலர் இருப்பார்கள். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுப்பவர்கள் மிகவும் குறைவு.

உங்கள் தாய் - அவளுடைய நோக்கில் பார்ப்போம். கணவரை இழந்தை நிலை. வயதாகிவிட்ட நிலை; மகனின் பாசத்தை இழந்துவிட்டோமோ என்ற நிலை; எதிர்கால நிலைமையைப் பற்றிய கவலை; இதை யெல்லாம் நினைத்துப் பார்த்தால் அவருடைய பரிதாபநிலை புரிகிறது. அதே சமயம் வேற்று ஜாதி, வேற்று மகளாக இருந்தாலும் நம்மிடம் பாசத்தையும், பணத்தையும் கொட்டிய அந்த மருமகளைப் போற்றிப் பராமரிக்கத் தெரியாமல், ஒரு நியாயம் தெரியாத பேதையாக இருந்திருப்ப தால் இப்போது கஷ்டப்படப் போகும் நிலையும் புரிகிறது.

நீங்கள் உங்கள் மனைவியை விவரிக்கும் படி பார்த்தால், அவர் காருண்யம் கொண்டவராகத்தான் இருந்திருக்கிறார். இருப்பார். ஆனால் இப்போது அந்த மனக்கசப்பு இன்னும் மேல்தளத்தில் குடியேறியிருக்கிறது. காலபோக்கில் அது அடித்தளத்தில் மறைய, அவர் 'அம்மாவை அழைத்து வைத்துக் கொள்வோம். வயதாகிவிட்டது. அவர்கள் எப்படியிருந்தால் என்ன.. நமக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. நமக்கும் ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா?' என்று சொல்லும் காலம் வரும் என்று நினைக்கிறேன். (இதே வார்த்தைகளாக இருக்க முடியாது. ஆனால் இது போன்ற...)

உங்களுக்கும் தாய், பாசம் அவ்வளவு சீக்கிரம் விட்டு போகாது. உங்களுடைய ஏமாற்றவுணர்வு தாற்காலிகமானதுதான்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com